வாக்களிக்க யோசித்த சென்னை மக்கள்!

18-வது நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தருமபுரி தொகுதியில் 75.44% வாக்குகளும் சிதம்பரம் தொகுதியில் 74.87% வாக்குகளும் பாதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியில் 78.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட உள்ளன.

#நாடாளுமன்றத்_தேர்தல் #முதற்கட்ட_வாக்குப்பதிவு #வாக்கு_இயந்திரம் #election #vote #vote_machine #lok_sabha_elections #tamil_nadu #polling

You might also like