விசில் போடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

யாரும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விஷயங்களைச் செய்வதுதான் தோனி ஸ்டைல். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுவதற்கு ஒரு நாள் முன்னதாக அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார் தோனி. அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தல தோனியையே கேப்டனாக பார்த்துப் பழகிய சிஎஸ்கே ரசிகர்களுக்கு, அவரது இந்த முடிவு வேப்பங்காயாய் கசக்கிறது. தோனியின் வேலையை இந்த இளம் வீரரால் சரிவர செய்ய முடியுமா என்பது அவர்களின் சந்தேகமாக இருக்கிறது.

2022-ம் ஆண்டில் இப்படித்தான் ஐபிஎல் தொடங்கும் முன் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். அவருக்கு பதில் கடைசி நிமிடத்தில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அந்தத் தொடரில் சிஎஸ்கே அணி அடுக்கடுக்காக தோல்விகளை சந்தித்ததுடன் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டது.

பின்னர் வேறு வழியின்றி தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதே நிலை சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வந்துவிடுமோ என்பதுதான் ரசிகர்களின் கவலை.

அதே நேரத்தில் தோனியின் நிலையையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவரது வயது 42. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் 40 வயதுக்கு மேல் போட்டிகளில் ஆடுவதில்லை.

இன்னும் சிலர் 35 வயதிலேயே ரிட்டயர்ட் ஆகி ஏதாவது அணிக்கு பயிற்சியாளராகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தால்தான் இந்த வயதிலும் ஆடிக்கொண்டிருக்கிறார் தோனி.

கடந்த ஆண்டு முட்டியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு முழு தொடரிலும் ஆற்றலுடன் ஆட முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தோனி பதவி விலகுவதாக அறிவித்ததும் யாருக்கு கேப்டன் பதவி கொடுப்பது என்று அணி நிர்வாகம் யோசித்திருக்கும். இதில் ஜடேஜாவிடம் ஏற்கெனவே ஒருமுறை இந்தப் பொறுப்பை கொடுத்தும் அவர் சரியாக செயல்படவில்லை.

ரஹானேவிடம் கொடுக்கலாம் என்றால் அவருக்கு வயதாகிவிட்டது. அதனால் இருக்கும் வீரர்களில் ஓரளவு அனுபவம் வாய்ந்தவரும், இளம் வீரருமான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டுமுதல் சிஎஸ்கே அணிக்காக ஆடி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தவிர வேறு எந்த அணிக்காகவும் ஆடாத ருதுராஜ், 52 போட்டிகளில் மொத்தம் 1,797 ரன்களைக் குவித்துள்ளார்.

2021 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் சேர்த்தும் ருதுராஜை கேப்டனாக தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகத்தைத் தூண்டியுள்ளது.

கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ருதுராஜ் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதில் முதல் சவால் தோனி. அணியின் கேப்டனாக தோனி செய்த சாதனைகள் பல.

அதனால் அவரைப் போன்றே ருதுராஜும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை ருதுராஜ் பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்ததாக தன்னைவிட மூத்த வீர்ர்களின் ஈகோ பாதிக்காத வண்ணம் அவர்களை இளம்வீரரான ருதுராஜ் வழிநடத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கேப்டன் பதவியால் தனது பேட்டிங் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள ருதுராஜ், “இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம். மிகப்பெரிய பொறுப்பு.

ஆனால் என்னை வழிநடத்த தோனி, ரஹானே, ஜடேஜா என அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால் நான் கவலைகொள்ள வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.

தோனியிடம் இருந்து கேப்டன் பதவியைப் பெற்றுள்ள ருதுராஜ், அவரைப் போலவே சென்னை ரசிகர்களை விசில்போட வைப்பார் என்று நம்புவோம்.

– ரெஜினா சாமுவேல்

You might also like