ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி!

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.

ஒரு வழியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், 39 தொகுதிகளுக்கான பங்கீடு நேற்று முடிந்தது.

பாமகவுக்கு 10 தொகுதிகள், தமாகா 3, அமமுக 2 மற்றும் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை நேற்று வெளியிட்டது. அதன்படி கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.

நீலகிரி (தனி) தொகுதியில் மத்தியமைச்சர் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் (எம்.எல்.ஏ.), கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

ஓபிஎஸ் போட்டி

ஓபிஎஸ் அணிக்கு பாஜக ஒதுக்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமே போட்டியிடுகிறார்.

தனிச்சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ், ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட, ஒப்புக்கொண்டதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

“இரட்டை இலை சின்னத்தை பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலும் வந்துவிட்டது. தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டிருந்தோம். தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்றுவிரும்பினர்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சின்னத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவு செய்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒரு தொண்டரை நிறுத்துவதைவிட, நானே களத்தில் நின்று பலத்தை நிரூபிக்க உள்ளேன்” என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஏற்கனவே அவர், பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

’ஓபிஎஸ்’ என ஊடகங்கள் மற்றும் கட்சிக்காரர்களால் செல்லமாக அழைக்கப்படும், ஓ.பன்னீர் செல்வம், மூன்று முறை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

முதலமைச்சர் பொறுப்பு வகித்தவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது தமிழகத்துக்கு புதிய விஷயம் அல்ல.

1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்த பெருந்தலைவர் காமராஜர், பின்னர் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்னால் எம்.பி.க்களாக இருந்துள்ளனர்.

ஓபிஎஸ் மகன் பி.ரவீந்திரநாத், இப்போது தேனி தொகுதி எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

– பி.எம்.எம்

You might also like