கவிஞர் வைரமுத்து:
ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.
ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பெளதிகப் பெயர் கால்டுவெல்.
அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது:
“1856-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற – எவராலும் பின்தொடர முடியாத தனித்தன்மை மிக்கதாகவும் திகழ்ந்தது.
அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.”
கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம்.
ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை.
வசீகரமானது அவரது வாழ்வு; ஆனால் வலிகளால் நிறைந்தது.
கால்டுவெல் கடந்து வந்த பாதை:
அயர்லாந்தில் பிறந்து, தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு 10 வயதில் இடம்பெயர்ந்து, 16 வயது வரை ஆங்கில இலக்கண இலக்கியக் கல்வி பெற்று,
கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று, பின்னர் மெய்யுணர்வு நாட்டம் பெற்று, சமயப் பணியே தம் பணி என்று இறுதியாக உறுதியுற்று,
லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் 20 வயதில் இணைந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஐரோப்பியத் தொன்மொழிகளின் நீதி நூல்களையும் சமய நூல்களையும் தேர்ந்து கற்றுத் தெளிவு பெற்று,
டேனியல் சேண்ட்ஃபோர்டு என்ற மொழிநூல் மேதையிடம் கிரேக்க மொழியை உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்து, சமயத் தொண்டர் சங்கம் ஆற்றுப்படுத்த,
தென்தமிழ்நாட்டின் திருப்பணிக்காக 24 வயதில் கப்பலேறி, நான்கு மாதக் கப்பல் பயணத்தில் ஆந்திரம் – ஆரியம் இரண்டும் கற்று, 1838-ல் சென்னையில் இறங்கி ‘ட்ரூ’ என்னும் ஆங்கில அறிஞரோடு மூன்றாண்டு வாசம் புரிந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழர் பண்பாட்டையும் உயிருக்குள் உள்வாங்கி,
400 மைல் தூரத்தையும் நடந்தே கடப்பதென்று பாண்டி நாட்டுக்குப் பயணப்பட்டு, சோழ நாடடைந்து, காவிரியோடு நடந்து, சிதம்பரம் – மயிலாடுதுறை வழியே தரங்கம்பாடி சென்று தங்கி, குடந்தை அடைந்து,
நிலவளம் – நீர்வளம் – மொழிவளம் – பண்பாட்டு வளத்தை உற்றறிந்து, திருவரங்கம் புகுந்து நீலகிரி அடைந்து கோவை வழியே மதுரை அடைந்து, பொருனை வழியே பாளையங்கோட்டை கடந்து நாசரேத் சென்று தன் இறுதி எல்லையான இடையன்குடியை ஓர் இரவிலே அடைந்து,
அங்கேயே தங்கி, தன் தேகம் வருத்தித் தெருக்கள் திருத்தி, தெருப் பணியோடு திருப்பணி தொடங்கி, 29 வயதில் நாஞ்சில் நாட்டில் வளர்ந்த நங்கை எலீசா என்னும் கிறித்துவத் திருமகளை மணம்புரிந்து,
சமயப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றிமுடித்து, 33 ஆண்டுகள் முயன்று கிறித்துவக் கோயில் கட்டியெழுப்பி, தமது 77-ம் வயதில் இயற்கை கொழிக்கும் கொடைக்கானலில் இயற்கை எய்தி,
இடையன்குடியில் தான் கட்டிய கோயிலில் அடக்கஞ்செய்யப்பட்டதுதான் கால்டுவெல்லின் சிலவரிச் சரிதை.
கால்டுவெல்லின் வாழ்க்கை இத்தோடு கழிந்திருந்தால் காலப் பெருவெள்ளத்தில் மற்றுமொரு குமிழியாய் ஓசையின்றி உடைந்திருப்பார்.
ஆனால் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற பேராய்வுதான் அவருக்குக் கால முகவரி தந்தது; திராவிடம் என்ற இனத்துக்கு மூல முகவரி தந்தது.
18-19-ம் நூற்றாண்டுகளில் தமிழ் இனத்தின் மீது ஒரு கெட்டி இருட்டு கொட்டிக் கிடந்தது.
சூரியக் கதிர்களும் துளைக்க முடியாமல் இறுகிக் கிடந்தது அந்த இருட்டு. அந்த வெளியேறாத இருட்டை வெட்டியெடுத்த ஐரோப்பியக் கோடரி கால்டுவெல்.
சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது.
மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை.
திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர்.
கோல் புரூக் – காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர்.
இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது.
அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே.
நன்றி: இந்து தமிழ் திசை