அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?

அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார்.

இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்…

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் முயற்சியாக அபு முரீகாவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

கோயிலுக்காக அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யான், 13.5 ஏக்கர் இடத்தை 2015-ம் ஆண்டில் வழங்கினார்.

2017-ம் ஆண்டில் ஐக்கிய அமீரக அரசு மேலும் 13.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. அந்த 27 ஏக்கர் நிலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பினர் இந்தக் கோயிலின் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 150 அமைப்புகள் இணைந்து கோயிலின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

கோயிலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. கோயிலை கட்டி முடிக்க, இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மேலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மனித நேரம் செலவாகி உள்ளது.

40 ஆயிரம் கன மீட்டர் சலவைக் கற்கள், 1,80,000 கனமீட்டர் மணல் கற்கள், 18 லட்சம் செங்கற்கள் ஆகியவை கோயிலின் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயிலின் கோபுரங்கள் 108 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 பிராந்தியங்களைக் குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் வழிபாட்டு இடத்தைத் தவிர வகுப்பறைகள், அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் பல்வேறு பகுதிகளில் 96 ஆலய மணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வந்தாலும், சுமார் 1,000 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் கோயிலில் கலை அழகுமிக்க 420 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர்.

#அபுதாபி #ஆபு முரீகா #பிரதமர்_நரேந்திர_மோடி #ஐக்கிய_அரபு_நாடுகள் #இளவரசர்_ஷேக்_முகமது_பின்_சயாத்_அல்_நஹ்யான் #Abu_Dhabi_Hindu_temple #அபுதாபி_இந்து_கோயில் #பிரதமர்_மோடி

You might also like