அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

“விடுதலை உணர்ச்சி மிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது.

எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது.

மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய அரசாங்கம், மக்‍களால் ஆளப்படும் அரசாங்கம் எனும் வாக்‍கு மொழிகள் அழிந்துபோகாது. மக்‍களால், மக்‍களுக்‍காக நடத்தப்படுவதே மக்‍களாட்சி”

1863ம் ஆண்டு தான் ஆற்றிய புகழ்பெற்ற கெட்டிச்பெர்க் (Gettysburg speech) பேருரையில், அப்போதைய அமெரிக்‍க அதிபர் ஆபிரகாம் லிங்கன், மக்‍களாட்சியின் மகத்துவம் குறித்து இவ்வாறு பேசினார்.

தனது ஆட்சியில் லிங்கன் வழங்கிய சீர்திருத்த கருத்துகளும், மக்‍களாட்சி தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் மக்‍களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது…

ஒரு சாமானியன், தனது கடுமையான உழைப்பால், உலகின் உயர் பதவியாக கருதப்படும் அமெரிக்‍க அதிபர் பதவியை அடையலாம் என்பதற்கு லிங்கன் அழிக்‍க முடியாத ஒரு உதாரண அடையாளம்.

1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, அமெரிக்‍காவின் கென்டகியில், ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். லிங்கனின் தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர்.

சிறுவனாக இருந்தபோதே, தந்தைக்‍குப் பணிகளில் ஒத்துழைப்பு நல்கிய லிங்கன், காடு கடந்து, மலை கடந்து தினமும் 9 மைல் நடந்து சென்று கல்வி பயின்றார்.

ஒன்பது வயதில் தாயை இழந்ததால், சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்க்‍கப்பட்டார். குடும்பத்தில் படர்ந்த ஏழ்மை, லிங்கனைப் படிக்‍கவிடாமல் செய்தது.

ஒருமுறை நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்தில் உள்ள சந்தைக்‍குச் சென்ற லிங்கன், அங்கு ஒரு நீக்‍ரோ பெண், அடிமையாக விற்கப்படுவதைக்‍ கண்டார்.

அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர் விற்கப்படுவதையும், இரும்புக்‍ கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்‍கப்படுவதையும் கண்டு மனம் துடித்த லிங்கன், இந்த கொடுமைக்‍கு முடிவு காண விரும்பினார்.

அதற்கான வழிகளில் தனது பயணத்தை தொடங்கினார். தனது 23வது வயதில் பிளாக் காக் போரில் (Black Hawk War) கலந்து கொண்டு அதற்கு பொறுப்பேற்று நடத்தியது அவருக்‍கு புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.

தனது 22வது வயதில் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா வேலை. பின்னர் கடன் வாங்கி கடை நடத்திய அனுபவம், வியாபாரத்தில் நட்டம், அஞ்சலகத்தில் பணி என வாழ்க்‍கை பல அனுபவங்களை கற்றுக்‍கொடுத்தது லிங்கனுக்‍கு.

பிறகு வழக்‍குரைஞருக்‍குப் படித்து, 1847ம் ஆண்டு அமெரிக்‍க பாராளுமன்ற உறுப்பினரானார். 25வது வயதில் இலினாய் மாநில சட்டமன்றப் பதவி, வெள்ளையர் – கருப்பர் பேதத்தை ஒழிப்பது என்ற அவரது பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குடிப்பழக்‍கம், புகைப்பழக்‍கம் எதுவும் இல்லாத லிங்கன், கடுமையாக உழைத்து படிப்படியாக முன்னேறி, அமெரிக்‍காவின் 16வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிபரானதும், ஒரு எதிர்க்‍கட்சி உறுப்பினர் லிங்கனை கேலி செய்யும் விதமாக, “உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரிக்‍கிறது” என கிண்டலாக சொல்ல,

“அது, என் தந்தையின் உழைப்பின் சிறப்பையல்லவா காட்டுகிறது” என பதிலளித்த லிங்கன், இப்போது இந்த செருப்பு அறுந்துபோனால், என்னிடம் கொடுங்கள், நானே தைத்து தருகிறேன். அதுமட்டுமல்ல, எனக்‍கு நாடாளவும் தெரியும் என கூறினார்.

பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அடிமை​முறையை ஒழித்தார். அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்‍க புரட்சிகரமான விடுதலைப் பிரகடனம் (Emancipation Proclamation) ஒன்றையும் வெளியிட்டார்.

1865ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பெரிய வெள்ளிக்‍கிழமையன்று (Good Friday) Our American cousin என்ற நாடகத்தை மனைவியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, John Wilkes Booth என்ற நடிகன், அதிபர் லிங்கனை தனது துப்பாக்‍கிக் குண்டுக்‍கு இரையாக்‍கினான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.

சாமானியர்களுக்கு மரணம் ஒரு சம்பவம். ஆனால், சாதனையாளர்களுக்‍கோ அது ஒரு சரித்திரம். ஆபிரகாம் லிங்கனின் மரணம் மட்டுமல்ல, ஆண்டான் – அடிமை முறையை ஒழித்த அவரது பொது வாழ்க்‍கையே எல்லா தலைமுறைக்‍கும் ஒரு சரித்திரமாகும்.

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like