எம்.ஜி.ஆர். மீதான விமர்சனம்: ஆ.ராசாவுக்குச் சில கேள்விகள்!

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ இந்த வாசகம் திராவிட உணர்வு கொண்டவர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு வாசகம்.

– இப்போதைக்கு முன்னாள் மத்தியமைச்சரும் எம்பியுமான ஆ.ராசாவுக்கு மிகவும் பொருந்தும்.

அண்மையில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா தனது வழக்கமான ஆவேசமான பாணியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சில் தமிழக முன்னாள் முதல்வரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியும் நாகரீகமற்ற மொழியில் பேசியிருக்கிறார். 

1986-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்த நேரத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியது திமுக. அப்போது இந்திய சட்ட நகல் எரிப்புப் போராட்டமும் நடந்தது. 

அதில் கலந்துகொண்டு சட்ட நகல் எரிப்பை நடத்திக்காட்டிய கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போது சிறையில் அவருக்கு கைதிகளுக்கான உடை வழங்கப்பட்டதாகக் கூறி கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், எம்.ஜி.ஆர். குறித்து பேசியிருக்கிறார் ஆ.ராசா.

1986-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கலைஞர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது, சிறையில் நடந்தது என்ன என்பதைப் பற்றி அப்போதைய சிறைத்துறை உயரதிகாரியாக இருந்த ஜி.ராமச்சந்திரன் ஜுனியர் விகடனில் 2022 அக்டோபர் மாதத்தில் வெளிவந்த தொடரில் கலைஞர் சிறைப்பட்ட அனுபவம் பற்றி வெளிப்படையாக இப்படிக் கூறியிருக்கிறார்.

“இந்த முறை கலைஞருக்குத் தரப்பட்டது வெறும் காவல் தண்டனை இல்லை; கடுங்காவல் தண்டனை. கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் சிறையில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். கைதி உடையை அணிய வேண்டியது கட்டாயம்.

தீர்ப்புக்குப் பிறகு சிறைக்கு வந்த கலைஞர் என்னிடம், ‘‘கடுங்காவல் தண்டனை என்றால் என்ன… செக்கு இழுக்க வைப்பீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘செக்கு இழுப்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்துடன் போய்விட்டது. நீங்கள் கைதி உடை அணிய வேண்டும். கட்டாயம் வேலை செய்ய வேண்டும். சோப்பு தயாரித்தல், பைண்டிங், டேக் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இந்தச் சிறையில் உள்ளன’’ என்று கூறினேன்.

‘‘உங்கள் அலுவலக உதவியாளராக என்னைப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

நானும் விடாமல், ‘‘நீங்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் நான் ஏதாவது சொல்வேன். அதை மனதில் வைத்துக் கொண்டு, நாளை முதலமைச்சராக வந்தவுடன் தண்ணீர் இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பீர்கள்.

அந்த வம்பே வேண்டாம். நீங்கள் பைண்டிங் தொழிற்கூடத்தில் வேலையைப் பாருங்கள்’’ என்று சிரித்தபடியே கூறிவிட்டு, ‘Labour alloted to binding section’ என்று அவரது வரலாற்று அட்டையில் எழுதினேன்.

உடனே அவருக்குக் கைதிச் சீருடை வழங்கப்பட்டது.

மாலை நேர்காணலுக்கு தன் மனைவி, மக்களைப் பார்க்க என் அறைக்கு வந்துவிட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. காரணம், அவர் அணிந்திருந்த கைதிச் சீருடை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கலைஞர் தமிழக முதல்வரானதும்தான் கைதிகளின் சீருடையை மாற்ற உத்தரவிட்டார்.

அதுவரை கட்டம் போட்ட டிரவுசர், மேலாடையுடன் குல்லா அணிய வேண்டும். கலைஞர்தான் வெள்ளைச் சீருடையைப் பரிந்துரைத்து மாற்றி உத்தரவிட்டார். இப்போது அதே சீருடையில் என் முன்னால் அமர்ந்திருக்கிறார்.

வெளியே அவரைக் காண ஏகத்துக்கும் கூட்டம். கடுங்காவல் தண்டனை என்பதால், அனைவரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் இருந்தார்கள். சிலர் அழுகையுடன் காணப்பட்டார்கள்.

இதோ அவர்களைப் பார்க்கச் செல்கிறார் கலைஞர். அவரைப் பார்த்த அந்த சில நொடிகள் மட்டும் கனத்த மெளனம். அத்தனை பேரும் உறைந்து நின்றார்கள். சில நொடிகளில் அங்கே பேரிரைச்சல். ‘தலைவரே… உங்களுக்கா இந்த நிலைமை!’ என்று அனைவரும் கதறி, கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவழியாக திரும்பிவந்தார் அவர்.

அவரிடம் நான், ‘‘அண்ணே! எல்லாரும் ரொம்ப வருத்தப்படுறாங்க… உங்களுக்கு ஏ கிளாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால், தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும்போது கைதி உடை அணிந்தால் போதும். மற்ற நேரங்களிலும், பார்வையாளர்களைப் பார்க்கும்போதும் கைதி உடை வேண்டாமே…’’ என்றேன்.

உடனே என்னைக் கூர்ந்து பார்த்தவர் மெல்லிய புன்னகையுடன், ‘‘இந்தக் கைதி உடையை நான் இன்று அணிந்ததற்கான காரணம் நாளைக் காலை உங்களுக்கு விளங்கும்’’ என்றார் பூடகமாக. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அடுத்த நாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரதான செய்தியே கலைஞர்தான்.

கைதி உடையுடன் அலுமினியத் தட்டு, குவளையைப் பிடித்துக்கொண்டு நிற்பதுபோன்ற புகைப்படம், ‘கைதி உடையில் கருணாநிதி!’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

அவரைப் பார்த்து, ‘‘இந்தப் புகைப்படத்தை எனக்குத் தெரியாமல் எப்போது எடுத்தீர்கள்… புகைப்படம் எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லையே!’’ என்றேன்.

அதற்கு அவர், ‘‘இப்போது எடுக்கவில்லை. முரசொலி அலுவலகத்தில் போட்டோஷாப்பில் ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழைய புகைப்படம்’’ என்றார்.

ஒரு நிமிடம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், தொலைபேசி அலறியது. அழைத்தது டி.ஜி.பி!

‘‘கருணாநிதிக்குக் கைதி உடை கொடுத்தீர்களா? முதலமைச்சர் கேட்கிறார்’’ என்று கேட்டார்.

‘‘ஆம். கொடுத்தது உண்மைதான்’’ என்றேன்.

‘‘யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள்?’’ என்றார் கோபமாக.

‘‘கடுங்காவல் தண்டனை என்றால் சிறை விதிகளின்படி கைதி உடைதானே கொடுக்க வேண்டும்’’ என்றேன்.

அவர், ‘‘சட்டம் எனக்கும் தெரியும். முன்னாள் முதல்வருக்குக் கைதி உடையைக் கொடுக்கும்போது ஒரு வார்த்தை கேட்டுவிட்டுக் கொடுத்திருக்கலாமே…’’ என்றார்.

நானும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று வருத்தப்பட்டேன்.

டி.ஜி.பி-யை அழைத்துப் பேசியிருக்கிறார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். 

“ஏன் அவருக்குக் கைதிச் சீருடையைக் கொடுத்தீர்கள்?’’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

காலையில் பேப்பரைப் பார்க்காத டி.ஜி.பி., ‘கருணாநிதிக்கு கைதிச் சீருடை தரப்படவில்லை!’ என்று கூறிவிட்டார்.

திரும்பவும் டி.ஜி.பி என்னை அழைத்து, ‘‘அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதிச் சீருடையைத் திரும்பப் பெறுங்கள்’’ எனக் கட்டளையிட்டார்.

நானும் கலைஞரிடம் சென்று, கைதி சீருடையைத் திரும்பக் கேட்டேன். ‘‘அதெல்லாம் கொடுக்க முடியாது. நான் அதை திருப்பிக் கொடுத்துவிட்டால் பத்திரிகைகள் பொய் கூறியதுபோல் ஆகாதா… முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் உளவுப் பிரிவினர் விசாரித்து, ‘‘கோர்ட்டிலிருந்து சிறைக்குச் சென்றதும் நேற்று மாலையே கருணாநிதிக்கு கைதிச் சீருடை கொடுக்கப்பட்டுவிட்டது’’ என்று முதல்வருக்கு ரிப்போர்ட் போட்டுவிட்டனர்.

டி.ஜி.பி-யை அழைத்த முதல்வர் எம்.ஜி.ஆர், ‘சிறைக்குப்போய் நேரில் பார்த்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டார்.

டி.ஜி.பி என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘‘நான் காலை 10 மணிக்கு அங்கு வருகிறேன். அப்போது கலைஞர் கைதிச் சீருடையில் இருக்கக் கூடாது’’ என்று கட்டளையிட்டார்.

நான் கலைஞரிடம் சென்று, ‘‘நீங்கள் கைதிச் சீருடையில் இருந்தால் என் வேலைக்கு ஆபத்து!’’ என்று தயக்கத்துடன் எடுத்துச் சொன்னேன்.

என்னைக் கனிவாகப் பார்த்தவர், ‘‘உங்களுக்கு ஒரு தீங்கு வருமென்றால், அதனால் கிடைக்கும் எந்தப் பயனும் எனக்குத் தேவையில்லை’’ என்று கூறி கைதிச் சீருடைகளைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கைதி உடையில் கருணாநிதியைப் பார்த்து மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர். இப்படிச் செய்தார் என்று பலரும் பேசினார்கள்.

உண்மையில் தன் நண்பரை அந்த உடையில் பார்க்க அவர் விரும்பவில்லை என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிந்திருந்தது.

கடுங்காவல் தண்டனையால்தான் கைதி உடை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர்., தனது முதலமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்து சிறைக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும்’ என ஆணை பிறப்பித்தார்.

இது அப்போதைய சிறைத்துறை டிஜஜியாக இருந்த ராமச்சந்திரன் கொடுத்துள்ள நேரடியான வாக்குமூலம் என்றே சொல்லலாம். 

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். கலைஞருக்கு சீருடை சிறைத்துறையின் விதிமுறையின்படி வழங்கப்பட்டிருப்பதை சிறிதும் ஏற்றுக் கொள்ளாத அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தன்னுடைய நண்பரான கலைஞருக்குச் சீருடை வழங்கப்பட்டிருப்தைக் கண்டித்து,

சிறைத்துறை அதிகாரியிடம் கடிந்துப் பேசி அவருக்கும் மற்றவர்களுக்குமான விதிக்கப்பட்டிருந்த கடுங்காவல் சிறைத்தண்டனையை விலக்கியிருக்கிறார் என்பதை இதன்மூலம் யாரும் சுலபமாக உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி முழுமையாக எதுவும் தெரிந்து கொள்ளாத விதமாக ஆ.ராசாவின் பேச்சு அமைந்திருக்கிறது. இதையொட்டியே எம்.ஜி.ஆரை கடுமையாக வசைபாடியிருக்கிறார் ராசா. 

இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். – கலைஞர் சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் மிகவும் நெருக்கமான மூத்தப் பத்திரிகையாளரான சோலை எழுதியிருக்கிற நிகழ்வு இது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அன்றைய அறநிலையத்துறை மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நடைபயணமாகச் சென்றார்.

அந்த நடைபயணத்தின்போது கலைஞரின் காலில் கொப்புளங்கள் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் சோலையை தன்னுடைய தி.நகர் அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

அந்த சம்பவம் பற்றி சோலையே விவரிக்கிறார்.

“உள்ளே வாருங்கள்” என்று எம்.ஜி.ஆர் அழைத்தார்.

“மணி ஒன்றரை. இன்னும் நீங்கள் சாப்பிட வில்லையே?” என்றேன்.

“அதை விட முக்கியமான ஒரு வேலை. நடைப்பயணம் சென்ற கலைஞரின் காலில் ரத்தம் கசிகிறதாம். தற்போது அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

சிவகாசியில் தங்கப் போகிறாராம். அவருடன் பேசிய பிறகு தான் உணவு. உங்களுக்குப் பசி தாங்காது. நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார் எம்.ஜி.ஆர்.

சற்று நேரத்தில் கலைஞருடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்ததுமே உடல்நலம் பற்றி கரகரத்த குரலில் விசாரித்தார்.

”டாக்டர்களை உடனே அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.

தம்முடன் டாக்டர்களும் பயணம் செய்வதாகக் கூறினார் கலைஞர்.

நடைப்பயணத்தை விடுத்து வேறு விதமாக கலைஞர், தமது பயணத்தைத் தொடரலாம் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. ஆனால் அதைச்சொல்ல அவருக்கு வாய் வரவில்லை. வார்த்தைகளும் வரவில்லை.

“சோலை.. நான் கலைஞரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தது உங்கள் ஒருவருக்குத் தான் தெரியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏடுகளில் இப்போது இது செய்தியாக வந்து விடக்கூடாது. எங்களுடைய நட்பு அத்தகையது. என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு கலைஞரும் ஒரு காரணம்” என்றார்.

விராலிமலை சண்முகம்

இவையெல்லாம் கலைஞருக்கும் எம்.ஜிஆருக்கும் இருந்த நெருங்கிய நட்பை வெளிப்படுத்தும் சில சம்பவங்கள் மட்டும்தான்.

இதுமட்டுமல்லாமல் கோவையில் திரைப்படத்துறையில் தாங்கள் இருவரும் ஒன்றாக பயணித்ததிலிருந்து பல சம்பவங்களை எம்.ஜி.ஆரும் கலைஞரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொது வெளியில் பகிர்ந்திருக்கிறார்கள்.

திமுகவை உருவாக்கியத் தலைவரான அறிஞர் அண்ணா மறைந்த பிறகு 1969 பிப்ரவரி 10-ம் தேதியன்று கலைஞர் தலைமையில் புதிய திமுக அமைச்சரவை உருவானது குறித்து நெஞ்சுக்கு நீதி“ இரண்டாம் பாகத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக நாஞ்சில் கி.மனோகரன் மற்றும் கோவைச் செழியன் ஆகியோரும் என்னைவிட்டு அகலாமல் என்னருகில் இருந்து கொண்டே கட்சியைக் காத்திட முதல்வர் பொறுப்பை சுமந்தேத் தீர வேண்டும் என வாதிட்டனர், வற்புறுத்தினர்.

பெரும்பாரோரின் கருத்தை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கக் கூடாது என்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். என்னை அணுகி இணங்கிடச் செய்ய முயற்சித்தார்” என்று எம்.ஜி.ஆரின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆரும், “யார் முதல்வராக வர வேண்டுமென்று பெரும்பாலானோருடன் கலந்து பேசிய போது கலைஞர் தான் வர வேண்டும் என அனைவரும் தெரிவித்தனர் அதற்கு பிறகும் நானும் நீங்கள் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன்” எனச் சொல்லியிருக்கிறார்.

திமுகவில் இருந்தவரை திராவிட இயக்கக் கொள்கைகளையும் ஏன் அந்த கொடியையும் சின்னத்தையும் கூட தன்னுடைய திரைப்படங்கள் வழியாக பொதுமக்களுக்கு கொண்டுசென்றவராக இருந்தார் எம்.ஜி.ஆர்.

1972 அக்டோபர் மாதம் 17-ம் தேதி அதிமுக என்கின்ற ஒரு மகத்தான இயக்கத்தை அவர் துவக்கிய 5 வருடங்களுக்குள் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் 16-வது முதல்வராக எம்.ஜிஆரால் வர முடிந்தது.

அதிமுகவுக்கான வாக்கு சதவீதத்தையும் 37 என்கிற அளவுக்கு அதிகரிக்க வைக்க முடிந்தது. அவருடைய மறைவு வரை தமிழக முதலமைச்சராக ஏகோபித்த மக்கள் ஆதரவும் நீடிக்க முடிந்தது. 

1982-ல் தமிழகம் முழுக்க சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்த முடிந்தது. தமிழகத்தில் பரவலாக பொறியியல் கல்லூரிகளைத் திறக்க முடிந்தது. கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிந்தது.

சமூக உணர்வோடு தெருக்களில் இருந்த சாதிப் பேர்களை நீக்க முடிந்தது. தமிழுக்காக தஞ்சையில் தனி பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிந்தது.

பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அதிகாரப் பூர்வமாக நடைமுறைப் படுத்த முடிந்தது. ஏன் தமிழ்க் கையெழுத்திடுவதையே ஆணையாக்க முடிந்தது. இப்படி எத்தனையோ விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

மதம், சாதி போன்ற பேதங்களுக்கும், எந்த மொழி, இன பேதங்களுக்கும் அவர் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை. அதை எப்போதும் விவாதப் பொருளாக்கியதும் இல்லை.

தனிப்பட்ட வழிபாட்டைக் கூட பொதுப்பிரச்சனையாக அவர் மாற்றி குழப்பிக் கொண்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால், வெறுமனே திரையுலகப் பிரபலத்தை மட்டுமே அவர் நம்பியிருக்கவில்லை.

பொது வாழ்விலும் தன் முகம் எப்படி வெளிப்பட வேண்டும் என்ற கவனத்தோடும், அதில் இயல்பாக ஒன்றியபடியும் இருந்தார். அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்குமான குரலைப் போல் இருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். மறைந்தபோது கலைஞர் எம்மாதிரியான உணர்வில் இருந்தார் என்பதை அவருடன் மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்த சண்முகநாதனைப் போன்றவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

தன்னுடைய கட்சிக்காரர்கள் கலைஞரை “கருணாநிதி” என்று அழைப்பதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வலுப்பட்ட நட்பு உணர்வுடனே இருந்திருக்கிறது எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமான நட்பு.

என்னதான் கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் தனித்தனி கொள்கைகள் இருந்தாலும் அதையும் மீறிய நட்புணர்வு அவர்களிடம் சாத்தியப்பட்டிருந்தது. 

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அதிமுக என்கின்ற இயக்கத்திற்கு அடிப்படை பலமாக இருந்தவர்கள் அதன் கோடிக்கணக்கான தொண்டர்கள். அந்தத் தொண்டர்களில் பலர் அவரது தீவிர ரசிகர்களும் கூட.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் விராலிமலையைச் சேர்ந்த சண்முகம்.

திருச்சியை அடுத்துள்ள விராலிமலையில் மளிகைக்கடை ஒன்றில் பணிபுரிந்தவர் இளைஞரான சண்முகம்.

தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான இவர், இந்தி எதிர்ப்பை வெளிக்காட்டும் விதத்தில் இந்தியை அரக்கியாக பாவித்து கொடும்பாவியை எரித்திருக்கிறார். தன்னுடைய தலையையும் மொட்டை அடித்திருக்கிறார்.

தமிழுணர்வுடன் இயங்கிவந்த விராலிமலை சண்முகம் “எனது உடல் தமிழர்களை உணர்வு கொண்டு எழச் செய்யும். உயிர் உலுத்தர்களை அழிக்கும்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் இப்படிப்பட்ட தீவிர தமிழ் உணர்வுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இந்த சம்பவத்தை இங்கு குறிப்பிட நேர்ந்திருக்கிறது.

குறிப்பாக ஆ.ராசா எம்ஜிஆரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். எம்.ஜிஆரின் தொண்டர்களையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எம்ஜிஆருக்கும் கலைஞருக்குமான நட்புப் பற்றி கேள்வி எழுப்புபவர்கள் பெரியாருக்கும் மூதறிஞர் ராஜாஜிக்கும் இடையிலான நட்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கருத்தளவில் வேறுபட்ட தளத்தில் இருவருமே இருந்தாலும் சக மனிதர்களாக ஒருவரையொருவர் நம்பிக்கையுடன் நேசிக்கிறவர்களாக அவர்களுடைய வாழ்வின் இறுதிக்காலம் வரை அவர்கள் இருந்ததை வெளிப்படுத்தியிருக்கிறது காலம்.

இதையெல்லாம் – இந்த நட்புணர்வையெல்லாம் ஆ.ராசா போன்றவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

எம்ஜிஆரைப் பற்றி கலைஞரின் நினைவுகளே இறுதிக்காலம் வரை நீடித்திருந்த நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். அவர்களை ‘பெரியப்பா’ என்று உரிமையோடு அழைத்து அவருடன் பழகிய தருணங்களை பொதுவெளியில் அடிக்கடி பகிர்ந்திருக்கிறார் என்பதாவது ஆ.ராசாவிற்கு புரியுமா?

மு.க.ஸ்டாலின் நடித்த ’முரசே முழங்கு’ என்கின்ற நாடகத்திற்கு தலைமை வகித்தபோது எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்லியிருக்கிறார் 

“கலைஞர் அவர்களின் புதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்வேன்

உனக்குப் பெயரே ஸ்டாலின் என்பது. அங்கேயே புரட்சித் தோன்றியிருக்கிறது. அந்தப் பெயருக்கேற்ப தந்தையின் வழியைப் பின்பற்றி தனையனும் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேற வேண்டும்” என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொல்லியிருப்பதை தான் எழுதிய “உங்களில் ஒருவன்“ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கலைஞருக்கும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்த நட்புணர்வு சார்ந்த புரிதல் ஏன் ஆ.ராசாவுக்கு இல்லை.

அந்தப் புரிதல் இல்லாத காரணத்தினால்தான், அல்லது புரிந்து கொள்ளாமல் போனதால்தான் பொதுவெளியில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தரமற்ற பேச்சுக்களை அவர் பேசிக் கொண்டிருக்கிறாரா? 

காலம்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். 

– வே. மதிமாறன்

#மொழிப்போர்_தியாகி #மக்கள்_திலகம் #எம்ஜிஆர் #தமிழ்நாடு #திமுக #இந்திய_சட்ட_நகல்_எரிப்புப்_போராட்டம் #பேராசிரியர்_அன்பழகன் #இந்தி_எதிர்ப்புப்_போராட்டம் #ஜி_ராமச்சந்திரன் #கலைஞர் #கருணாநிதி #ஆ_ராசா #mgr #makkal_thilagam #anbazhagan #g_ramachandren #kalaignar #karunanithi #hindi_aganist_protest #Anti_Hindi_agitation #Mozhi_Por_Thiyagigal #A_Raja #periyar #rajaji #பெரியார் #ராஜாஜி

You might also like