6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள ’இந்தியா’ கூட்டணிக் கூட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மாநில வாரியாக தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள கோஷி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தாராசிங் தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் அவர் பாஜகவில் இணைந்து விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இதனால் கோஷி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரே பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தோற்றுப்போனார். சமாஜ்வாதி கட்சியின் சுதாகர் சிங், தாரா சிங்கை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. மறைந்ததால், இடைத்தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து, அந்தத் தொகுதியை ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
பாஜக வேட்பாளரை விட சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால் புதுப்பள்ளி தொகுதி காலியாக இருந்தது. அது, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் உம்மன் சண்டியின் மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சாண்டி உம்மன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது தந்தையின் சாதனையை முறியடித்தார். இங்கு பாஜகவும் களம் இறங்கியது. அந்த கட்சியின் வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கி டெப்பாசிட் இழந்துள்ளார்.
திரிபுரா மாநிலம் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. இப்போது அந்த மாநிலம் பாஜக கோட்டையாக மாறியுள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
போக்சா நகர் மற்றும் தான்பூர் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே வெற்றிபெற்ற தான்பூர் தொகுதியை பாஜக தக்க வைத்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் நடந்த போக்சா நகர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர், சி.பி.எம். வேட்பாளரை தோற்கடித்தார். இந்த தொகுதியை சி.பி.எம்.மிடம் இருந்து பாஜக கைப்பற்றியுள்ளது
உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாசன்ட் குமாரை 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது, ஏற்கனவே பாஜக வென்ற தொகுதி.
ஜார்கண்ட் மாநிலம் தும்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.எம்.எம். வேட்பாளர் வென்றுள்ளார்.
பாஜக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் ஜார்கண்ட் மாணவர் யூனியன் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் ஜே.எம்.எம். வெற்றி பெற்ற தொகுதி. அந்தக் கட்சி வேட்பாளர் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
கேரளாவில் தேர்தல் முடிவு அனைவருமே எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம், பாஜக தொகுதியை இழந்தது, பிரதமர் மோடியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல் உ.பி.யில் பாஜக வேட்பாளர் பெரும் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பதும் மோடியை கவலை கொள்ளச் செய்துள்ளது.
-பி.எம்.எம்.