முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் நட்பு பற்றி முகநூலில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் ஆ. பழனியப்பன்.
“பணி ஓய்வுக்குப் பிறகும் நேரமே இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கிறேன் பழனி” என்று புன்னகைத்தார் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்.
அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியராகப் பணியாற்றிய செங்கல்பட்டு (ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம்) நோக்கி, அவரும் நானும் நேற்று காலை 7.15-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டோம்.
எனக்கும் சேர்த்து அவரே ஒரு பிரட் பாக்கெட் கொண்டுவந்தார். அதுதான் எங்களின் அன்றைய காலை உணவு.
33 ஆண்டுகளுக்கு முன்பு சப் கலெக்டராகப் பணியைத் தொடங்கிய காலம் முதல், தலைமைச்செயலாளராகப் பணியாற்றிய காலம் வரையிலான பல முக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டே வந்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்த நேரம். அதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதில், அப்போது தலைமைச்செயலாளராக இருந்த இறையன்பு அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினோம் என்று அவர் சொன்ன விஷயங்கள் ஆச்சர்யமாகவும், மலைப்பாகவும் இருந்தது.
அதேபோல, மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்.
அந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வை மிகக்குறைந்த கால அவகாசத்தில் வெற்றிகரமாக நடத்தியது தமிழ்நாடு அரசு.
அந்த வெற்றியிலும் இறையன்பு அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆச்சர்யம் நிறைந்த அந்த அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, திருப்போரூர் தாண்டி காட்டூர் சிவன் கோவிலை அடைந்தோம்.
அங்கே இருந்த ஆலமரத்தடியில் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு, வெண்பேடு ஏரிக்குப் புறப்பட்டோம்.
அங்கு, விகடனின் ‘நிலம் நீர் நீதி’ திட்டத்தின் கீழ் ஏரி சீரமைப்புக்கான தொடக்க விழாவில் கலந்துகொண்டோம். பிறகு, அங்கிருந்து மீண்டும் சென்னைக்குப் பயணம்.
அந்த நான்கு மணி நேரப் பயணத்தில் ஏராளமான விஷயங்களைப் பேசினோம். நீண்டகால நட்பு என்றாலும், அவருடன் இப்படியொரு பயணத்தை மேற்கொண்டது இதுதான் முதல் முறை.
அவரது இல்லத்தை அடைந்தோம். “மறக்க முடியாத பயணம் சார்” என்றேன். “ஆமாம் பழனி.. நிறைய பேசினோம்…” என்று புன்னகைத்தார்.
அவரது குடும்பத்தினரிடம், ‘பழனியப்பன், ரொம்ப நல்ல மனுஷன்’ என்று அறிமுகம் செய்துவைத்தார். என் 23 ஆண்டுகால பத்திரிகை அனுபவத்தில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து அதுதான்.
–ஆ. பழனியப்பன்.