யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!

திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்

“சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.

நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு புலன்களையும் வலுப்படுத்த தனித்தனி ஆசனங்கள் இருக்கு. எல்லா ஆசனங்களும் எனக்கு அத்துப்படி!”

கோவை மாவட்டம், சூலூருக்கு பக்கத்துல உள்ள காசிகவுண்டன் புதூர்தான் நான் பொறந்த ஊர். கூகுள் மேப்ல தேடினாகூட கண்டுபிடிக்க முடியாத சின்ன கிராமம் அது. நான் பொறந்து பத்து மாசத்துக்குள்ள என் அப்பா இறந்துட்டார்.

எனக்கு நாலு வயசிருக்கும்போது 16 வயசிலிருந்த என் அண்ணன் பிளேக் பாதிப்பால் இறந்துட்டார்.

10 ஏக்கர் விவசாய பூமிதான் எங்களோட ஒரே ஆதாரம்.

இப்படி நெருக்கடியான சூழல்ல இருந்து போராடி எங்க கிராமத்துலயே முதல் ஆளா எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணினேன்.

எல்லோரும் வாழ்க்கைக்கு பாதுகாப்பான படிப்பை நோக்கி போய்க்கிட்டிருந்த காலகட்டத்துல, சம்பந்தமே இல்லாம நான் ஓவியம் படிக்க நினைச்சேன்.

ஓவியக் கல்லூரியில் சேர்ந்து எல்லா விதமான ஓவியங்களையும் வரைஞ்சேன். ஆனா, என் ஓவியங்களை யாரும் பெருசா அங்கீகரிக்கலை.

“இதெல்லாம் மறுமலர்ச்சி ஓவியங்கள் மாதிரி இருக்கு… நீங்க 400 வருஷங்களுக்கு முன்னால பிறந்துருக்க வேண்டிய ஆள். இந்தக் காலத்துக்கு உங்களோட ஓவியங்களெல்லாம் செல்லுபடி ஆகாதுன்னு” சொல்லிட்டாங்க.

அடுத்து என்ன பண்றதுன்னு நான் தடுமாறிக் கிட்டிருந்த சூழல்லதான் சினிமாவுல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துச்சு.

முதல்ல கடவுள் வேஷம்தான் குடுத்தாங்க. அதை மட்டுமே வெச்சு ஒப்பேத்த முடியாதுன்னு நாடகங்கள் நடிக்க ஆரம்பிச்சேன்.

ரெண்டு வருஷம் சொந்தமா நாடகங்கள் போட்டேன். மேஜர் சுந்தர்ராஜன்கூட சேர்ந்து சுமார் 1,000 நாடகங்கள்ல நடிச்சேன்.

அப்புறம்தான் திரைப்படத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஹீரோவா 175 படங்கள் பண்ணினேன். மொத்தமா 192 படங்கள் நடிச்சு முடிச்சாச்சு.

ஆனாலும், அதெல்லாம் ஒரு பெரிய சாதனையா தோணலை. பிறகு, எழுத்து பேச்சுன்னு இன்னொரு வடிவம் எடுத்தேன்.

என்னோட 67-வது வயசுலதான் ராமாயணத்தை முதன்முதலா திறந்து பார்த்தேன். ராமாயணத்துல மொத்தம் 10,520 பாடல்கள். அ.கு.ஆதித்தன் என்பவர் அந்தப் பாடல்களையெல்லம் சுருக்கி 1,000 பாடல்களா எழுதியிருந்தார்.

அதைப் படிச்சு ராமாயணத்தை நான் 100 பாடல்களா சுருக்கினேன். அந்தப் பாடல்கள் குறித்து 2009-ல் பத்தாயிரம் பேர் கூடியிருக்கிற அரங்கத்துல எந்தக் குறிப்பும் இல்லாம இடையில் தண்ணிகூட குடிக்காம உரையாற்றினேன்.

அடுத்து 2015-ல் மகாபாரதத்தையும் சுருக்கி உரையாற்றினேன். அது ரெண்டும் இன்னைக்கு வரைக்கும் ரெக்கார்டா இருக்கு.

இப்போ திருக்குறள் – 100 என்ற பேர்ல வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை திருக்குறளோட பொருத்தி உரை தயார் செஞ்சுகிட்டிருக்கேன். கொரோனா பீதி மறைஞ்சதும் ஈரோட்டில் 10,000 பேர் முன்னிலையில் அரங்கேற்றம்.

ஆலிவ் ஆயில் தோலை பளபளப்பா வெச்சுக்கும். விளக் கெண்ணெய் தலைக்கு தேய்ச்சு குளிக்கிறதால் முடி கொட்டுறதைத் தடுக்கலாம்.

ரொம்ப முக்கியமா காலையில் பல் துலக்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிச்சிரணும்,

ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா இத்தனை வருஷமா தொய்வில்லாம அதே உற்சாகத்தோட நான் அடுத்தடுத்து பயணப்படுறதுக்கு அடிப்படை காரணம் என் உடம்பையும் மனசையும் நான் ஆரோக்கியமா வச்சுகிருக்கிறதுதான்.

ஆரோக்கியம்தான் எல்லாத்தையும்விட பெரிய சொத்து – நடிகர் சிவகுமாரின் ஆரம்ப வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்மனதைத் தொடுகின்றன.

சினிமா உலகில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் நடிகர் சிவகுமார் ஆரோக்கியத்தின் அடையாளம். அவரது ஃபிட்னஸ் பற்றிக் கேட்டதும் இளமை மாறாத உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

“மெட்ராஸீக்கு வந்தப்போ எனக்கு 16 வயசு. அப்போவே எனக்கு தொப்பை இருக்கும். இப்படி கள்ளுப் பானை மாதிரி வயித்தை வெச்சுருந்தா பின்னால கடம்தான் வாசிக்கணும். ஒழுங்கா யோகா கத்துக்கோன்னு என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.

கன்னிமாரா நூலகத்துல ஒரு யோகா புத்தகத் தொகுப்பை பார்த்தேன். ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட பத்திரிகைகள்ல யோகாவைப் பத்தி வந்த தொடர்களையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போட்டுருந்தாங்க. அதை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.

நான் குடியிருந்த வீட்ல 25 பேருக்கு ரெண்டே டாய்லெட் தான். முதல் ஆளா டாய்லெட் போயிட்டா பிரச்சனை இல்லை. இல்லைன்னா ரொம்ப அவஸ்தை. அதனால அதிகாலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருச்சுருவேன்.

டாய்லெட் போனதுக்கு அப்புறம் விடியுற வரை யோகா ட்ரை பண்ணலாமேன்னு தோணுச்சு.

அப்படித் தான் யோகா பயில ஆரம்பிச்சேன். ஈடுபாட்டோட செஞ்சதால ஆறே மாசத்துல 38 ஆசனங்களையும் கத்துக்கிட்டேன். நிறைய முக்கியமான ஆசனங்கள் இருக்கு. அதுல சிரசாசனம் கிரீடம் மாதிரி. தலைமை ஆசனம் அது.

முன்பொரு காலத்துல மனுஷன் ஆடு, மாடு போல தவழ்ந்து போய்கிட்டிருந்தான். அவனோட முதுகுத்தண்டு 180 டிகிரியில் இருந்துச்சு.

இதயம், நுரையீரலெல்லாம் சம அளவுல இருந்துச்சு. ஆகையால், வாய்க்கால்ல தண்ணி போறது போல ரத்த ஓட்டம் ஈஸியா இருந்துச்சு.

பரிணாம வளர்ச்சியில மனுஷன் எழுந்து நிற்க ஆரம்பிச்சபிறகு, பம்பிங் ஸ்டேஷன் கீழே போயிருச்சு.

இதயமும் நுரையீரலும் கீழே வந்து மூளை மேலே போய்விட்டதால், புவிஈர்ப்பு சக்திக்கு எதிரா ரத்தத்தை பம்ப் பண்ணி மூளைக்கு அனுப்புறோம். உடல்ல மத்த உறுப்புகளைக் காட்டிலும் மூளைக்குத்தான் ரத்தமும் காற்றும் அதிகமாக வேணும்.

அதனாலதான் நாலாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம் முன்னோர்கள் சிரசாசனத்தைக் கண்டுபிடிச்சாங்க.

இந்த ஆசனத்தை தினமும் மூணு நிமிஷம் செஞ்சா போதும், கண்கள் பளபளப்பா இருக்கும்; ஞாபக சக்தி அதிகமாகும்.

நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு புலனையும் வலுப்படுத்த தனித்தனி ஆசனங்கள் இருக்கு.

எல்லா ஆசனங்களும் எனக்கு அத்துப்படி. யோகா கத்துக்கிறது போல ஆரோக்கியத்துக்கு நல்ல விஷயம் வேற இல்லை.

ரெண்டு நாளைக்கு ஒருமுறை ஆலிவ் ஆயில் உடம்பு முழுக்க தேய்ச்சு குளிக்கிறது, தலைக்கு விளக்கெண்ணெய் தேய்ச்சு குளிக்கிறதுன்னு வழக்கப்படுத்திக்கிறது நல்லது.

ஆலிவ் ஆயில் தோலை பளபளப்பா வெச்சுக்கும். விளக்கெண்ணெய் தலைக்கு தேய்ச்சு குளிக்கிறதால் முடி கொட்டுறதைத் தடுக்கலாம். ரொம்ப முக்கியமா காலையில் பல் துலக்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிச்சிரணும்.

மனிதன் உயிர்வாழ ரொம்ப முக்கியமானது காற்று. காற்றுக்கு அப்புறம் தண்ணீர், பிறகு உணவு. மகாத்மா காந்தி சாப்பிடாம 20 நாள் இருந்திருக்கார். தண்ணி குடிக்காம ரெண்டுநாள் தாக்குப் பிடிக்கலாம்.

ஆனா, சுவாசிக்காம ரெண்டு நிமிஷம்கூட உயிரோட இருக்க முடியாது. பிராண வாயுங்கிறது உயிர் மூச்சு.

அது ரொம்ப முக்கியம். பிராணாயாமம்னு சொல்லக்கூடிய மூச்சுப் பயிற்சியை கட்டாயமா செய்யணும். உடற்பயிற்சியைவிட மூச்சுப் பயிற்சி முக்கியம்.

அதேபோல, உணவுப் பழக்கத்திலும் கவனமா இருக்கணும், தொடர்ந்து பரபரப்பா இருந்த காலகட்டத்தில்கூட 45 நாள் ஷூட்டிங் போனா அடுத்த 10 நாள் கட்டாயம் வீட்ல ரெஸ்ட் எடுத்துருவேன்.

அந்த பாலிசியைக் கடைசிவரை நான் சமரசம் செஞ்சுக்கலை. சாப்பாடு விஷயத்துலயும் ஒழுங்கை கடைப் பிடிப்பேன்.

சாப்பாடுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்க வீட்ல என் அம்மா பால் கறந்ததும் அப்படியே வாங்கி அரை லிட்டர் குடிச்சுருவேன். தயிர், வெண்ணெய்னு பாராபட்சம் இல்லாம சாப்பிட்டோம்.

நம்ம உடம்புக்கு எது தேவையோ, அதை கரெக்ட்டா எடுத்துக்கணும். எது தேவை இல்லையோ, அதை கறாரா ஒதுக்கிரணும். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க… நான் காபி டேஸ்ட் பண்ணி 63 வருஷம் ஆகுது.

எவ்வளவு வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட மறக்காதீங்க. அட்லீஸ்ட் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்னு சூர்யாகிட்டயும் கார்த்திகிட்டயும் நான் அடிக்கடி சொல்றதுண்டு.

நமக்கு உடம்பு ரொம்ப முக்கியம். அது ஆரோக்கியமா இருந்தாதான் எதையும் செய்ய முடியும். இந்தத் தெளிவும், போதும் என்ற மனசும் இருந்ததாலதான் என்னால் இப்போவும் சுறுசுறுப்பா இருக்க முடியுது” – தீர்க்கமாக முடிக்கிறார் நடிகர் சிவகுமார்.

– எம்.புண்ணியமூர்த்தி

– நன்றி: நாணயம் விகடன்

You might also like