மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!

கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில், மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்திரியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டின் கேரள சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மருத்துவத் துறையின் முழுப் பாதுகாப்புக்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

புதிய சட்டத் திருத்த மசோதா குறித்து பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், புதிய சட்டத் திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதேபோல் மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.

சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆளுநரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும்” எனக் கூறினார்.

You might also like