எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!

உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பிரச்னை குறித்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே கடந்த ஜூலை மாதம் 16-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, படை விலக்கல் தொடங்கப்பட்டுள்ளதாக இரு நாட்டு ராணுவங்கள் தரப்பில் நேற்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதென இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 16-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின்கீழ் படைகள் விலக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்த சூழல் உருவாக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like