இட்லி, தோசைக்கு ஏற்ற பருப்பு இல்லாத சாம்பார்!

பரபரப்பான காலை வேளையில் டிபனுக்கு இட்லியா, தோசையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கா.. அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று முடிவுக்கு வருவதற்குள் மணி 7.30 தாண்டி விடும்.

அய்யய்யோ நேரமாச்சு என்று சட்னி அரைக்கலாம் என்று பார்த்த தினமும் சட்னியா? முனுமுனுப்பு வேற கேட்கும்.

சாம்பார் வைக்கலாம்னு பார்த்த பருப்பு வேக நேரமாகும் என்ன செய்யலாம்? பருப்பு இல்லாத சாம்பார் வைக்கலாம்.

அவசரமான காலை பொழுதில் சட்னிக்கு பதிலாக 15 நிமிடத்தில் சுவையான பருப்பு இல்லாத சாம்பார் பண்ணலாம்.

இந்த சாம்பார் எல்லோருக்கும் பிடித்த சுவையான ரெசிபியாக இருக்கும். பொதுவாக சாம்பார் பெரியவர்கள் முதல் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ரெசிபி.

ஆனால் காலைப் பொழுதில் நேரமாகும் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். இந்த அவசர சாம்பார் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி விடும்.

இந்த சாம்பார் ஒரு முறை சாப்பிட்டு பழகிவிட்டால் திரும்பவும் இதுதான் வேணும் என்று குழந்தைகள் அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த அளவுக்கு அதன் சுவை அருமையாக இருக்கும். எளிமையாக செய்யக் கூடிய பருப்பில்லாத சாம்பார் எப்படி செய்யலாம்?

அதற்கு என்னென்ன தேவை என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய மஞ்சள் பூசணி – 1 கப்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 1 [வேக வைத்தது]
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கருவேப்பிலை – தே.அ
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், நறுக்கிய மஞ்சள் பூசணி, தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியதும் சாம்பார் தூள், மல்லித் தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பூசணி வெந்ததும் வேகவைத்த உருளைக் கிழங்கு போட்டு கலந்து விடுங்கள்.

பின் சர்க்கரை மற்றும் கடலை மாவை தண்ணீரில் கரைத்து கொதித்து கொண்டு இருக்கும் சாம்பாரில் கலக்கவும்.

தீயை மிதமான சூட்டில் வைத்து கிளறி விடுங்கள். கடலைமாவு கலந்தவுடன் குழம்பு அடி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்றாக கிளறிவிடுங்கள்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் கலந்து விடுங்கள்.

நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பருப்பு இல்லாத சாம்பார் ரெடி.

இது நேரத்தை மிச்சப்படுத்துவதால் காலையில் டென்ஷன் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த சாம்பார் வைக்கலாம்.

இந்த சாம்பார் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற ஒரு ரெசிபியாக இருக்கும்.

– யாழினி சோமு

You might also like