லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தைத் தமிழகம் முழுவதும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.
முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாகச் சரவணன் அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.
இதன் மூலம் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தனக்கான ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துள்ளார் சரவணன்.
தமிழ் சினிமாவின் பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து சக்சஸ்புல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்தவர் கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன்.
‘தி லெஜண்ட்’ படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து பாராட்டி, அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.
எமோஷன், ஆக்சன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகிறது.

பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகிறார்.
தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து திரைக்கதை நகர்கிறது.
பா. மகிழ்மதி