காற்றில் கரையாத ஆற்றல் பெற்ற வாலியின் பாடல்கள்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் கொடிகட்டிக் கோலோச்சிய காலத்திலேயே அவர்களுக்கு எதிர்க்கடை போட்ட துணிச்சல்காரர் கவிஞர் வாலி. வியப்பு அவருக்கும் அமோகமாக வியாபாரமாயிற்று.
 
எம்.ஜி.ஆருக்கென்று மக்களிடத்தில் ஒரு மனவடிவம் உண்டு அதை உருவாக்கியவர்களுள் பெரும்பங்கு வகிப்பவர் வாலி.
 
சரியாகச் சொல்வதனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபோது, “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்பது போன்ற வாலியின் பாடல்களையே தம் அரசின் ஐந்தாண்டுத் திட்டமாகக் கொண்டார்.
 
ஏன் நீங்கள் திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதில்லை? என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அம்மி கொத்த சிற்பி எதற்கு” என்று சொன்னவன் நான்.
 
அப்போதிருந்த பாடலாசிரியர்கள் எல்லாரும் என்மேல் கோபம் கொண்டார்கள் வாலியைத் தவிர.
 
ஒரு கவியரங்கத்தில் என்னை வைத்துக்கொண்டே “ஆம் நான் அம்மி கொத்தினால்தான், எங்கள் வீட்டு அடுப்பெரியும் என்று நேர்மையாகச் சொன்னவர் வாலி.
 
ஆனால் அவர் எழுதுகோல் அற்புதமான சிற்பங்களையும் செதுக்கியிருக்கிறது படகோட்டி படத்தில்
 
“தரைமேல் பிறக்க வைத்தான்,
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்”
 
– போன்ற பாடல்கள் இலக்கியத் தகுதி பெறுபவை.
 
பாடலைக் கேட்பவர்களும் பாடலில் பங்குபெறும் வகையில், “தருவார் தருவார் நித்தம் இதழ் தித்திக்கத் தித்திக்க என்று புதிய வடிவங்களில் எழுதியவர் வாலி.
 
கவியரங்குகளிலும் என்னைப் போன்றவர்களுக்கு இணையாக நின்று வெற்றிபெறும் உத்திகளை அறிந்தவர் வாலி.
 
கவிதை உலகிலும் இயைபுத் தொடை அமைத்து எழுதும் தனிநடையை அவர் கையாண்டார்.
 
திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதிவிட்டாலே தன்னைச் கவிச்சக்கரவர்த்தி என்று அழைத்துக் கொள்பவர்களின் காலத்தில், பதினைந்தாயிரம் பாடல்களை எழுதியும் கூட பண்போடு இருந்தவர் வாலி. கர்வம் அவரிடம் துளி கூட இல்லை. இது வியப்பான பாராட்டுக்குரியது.
 
வாலியின் பாடல்கள் காற்றில் கரையாமல் நிற்கும் ஆற்றல் பெற்றவை.
 
– நன்றி: முகநூல் பதிவு
vels
You might also like