தமிழில் க்யூ ஆர் கோடுடன் ஒரு புதிய புத்தகம்!

நூல் வாசிப்பு:

சென்னை புத்தகக் காட்சியில் புதிய தலைமுறை வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தகங்களில் இதுவும் ஒன்று:

இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி எழுதியுள்ள விளம்பரப் படம் வேற லெவல். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்புக்குரியது. அதாவது ஒவ்வொரு விளம்பரம் பற்றிய செய்தியோடு, அதன் QR Code கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

நூலைப் பற்றி குறிப்பிடும் நூலாசிரியர்கள், “முகப்புத்தகத்தில் வாசிப்பவர்களுக்கு ஏற்ற வகையில், சுருக்கமான நினைவுகளாக இதை எழுதியிருந்தோம். 500க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் செய்திருந்தாலும், அதிலிருந்து 52 நினைவுகளை தொகுத்திருக்கிறோம்.

இந்த 30 ஆண்டு பயணத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள்! கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நாட்கள், முன்னேற்பாடுகள், கலந்துரையாடல்கள், ஸ்டோரி போர்டுகள் என்று கிட்டத்தட்ட ஆண்டின் எல்லா நாட்களுமே மீடியாவோடு தொடர்புடைய ஏதோ ஒரு வேலையில் இருந்திருக்கிறோம்.

எல்லா மொழியின் சூப்பர்ஸ்டார்களுடனும் பணிபுரிந்த நேரங்கள், எல்லா மொழியின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள், இசை அமைப்பாளர்கள், கலை இயக்குனர்கள், உடை வடிவமைப்புக் கலைஞர்கள் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட் என்று இணைந்து பணியாற்றிய தருணங்கள்…

எத்தனை வெற்றிகரமான பிராண்ட் ஓனர்கள், ஏஜென்சிகள், நாங்கள் மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய இனிய முகங்கள் என எல்லாமும் நினைவுக்கு வந்துபோகிறது.

ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு சினிமா, விளம்பரம், எழுத்து இவற்றில் ஆர்வம் கொண்டு, புதிதாக இந்தத் துறைக்கு வரும் இளைய தலைமுறைக்கு, எங்களது அனுபவம், ஒரு துளியேனும் உதவியாக இருக்குமேயானால், எங்களுக்கு அதுவே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எழுதியுள்ள முன்னுரையில், “ஜேடி – ஜெர்ரி அவர்களை கடந்த இருபது ஆண்டுகளாக கவனித்துவருகிறேன். அவர்கள் வேலையின்போது சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள். வேலை முடிந்த பிறகே நண்பர்களாக தெரிவார்கள்.

செயற்கையின்றி, ஒவ்வொரு விளம்பரங்களையும் மிக யதார்த்தமான ஒன்றாக எளிய மக்களும் உணரும்விதமாக மாற்றியமைத்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.

விலை அதிகமாக இருக்கும் என்ற மக்களின் மனநிலையை மாற்றி அவற்றை மக்களிடம் கொண்டுசேர்த்து அவர்களை கடைகளை நோக்கி கொண்டுசென்றதில் இருவருக்கும் மிகப்பெரும் பங்குண்டு.

பல விளம்பரங்களில் அவர்களுடன் நானும் பங்கு வகித்திருக்கிறேன். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு விளம்பர படமும் முந்தைய விளம்பரங்களை விட இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

ஒவ்வொரு படத்திற்கும் தங்களை புதுப்பித்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ள அணிந்துரையில், “இருபது ஆண்டுகளுக்கும் மேலான, தங்கள் ஊடகத்துறை அனுபவங்களை ஜூஸ் மாதிரி பிழிந்து வைத்திருக்கிறார்கள். பருகுவதற்கு என்ன தடை? படித்தபோது பல இடங்களில் புருவம் உயர்த்தி பிரமித்தேன்!

பெரிய நட்சத்திரங்களாக மின்னும் பலரையும், முதலில் இவர்கள்தான் விளம்பரப் படங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற உண்மையும், தமிழ்நாட்டில் 60 தொழில் நிறுவனங்கள் தங்கள் முதல் விளம்பரப் பட வாய்ப்பை இவர்களுக்குத்தான் தந்திருக்கிறார்கள் என்கிற தகவலும், உடனே இவர்களுடன் கைகுலுக்க நினைக்க வைக்கும்” என்று திறந்த மனதுடன் தெரிவித்துள்ளார்.

“தொலைக்காட்சியில் எனை ஈர்த்த  ஒரு சில தரமான விளம்பரங்கள் இவர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை இந்த நூலின்வழி அறிந்து மகிழ்ந்து போனேன். தொலைக்காட்சி விளம்பரங்களை நாம் பலமுறை  பார்க்க நேரும்போது  அவை எரிச்சலூட்டக் கூடாது.

அந்த விளம்பரப் பொருளுக்கே அது எதிரானதாகிவிடும்.  ஆனால் நண்பர்கள் ஜே.டி.யும் ஜெர்ரியும் இணைந்து உருவாக்கிய  விளம்பரப்படங்களில் பெரும்பாலானவை  தொழில் நுட்பத்தோடும் கலை அழகோடும் மிளிர்வன.

அந்த விளம்பரங்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நேயர்களை வேறு சேனலுக்குப் போகவிடாமல் கட்டிப்போடும் கலையம்சம் கொண்டவையாகவே திகழ்கின்றன.

விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மகால் செதுக்குவதுபோல் நுட்பமானது.

அந்த நுட்பக் கலையை இவர்கள் சிற்பக்கலைபோல் பயின்றிருக்கிறார்கள்” என்று நெகிழ்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

விளம்பரப் படம் வேற லெவல்:
ஜேடி – ஜெர்ரி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்,
9, பிளாட் எண்: 1080 ஏ ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை,
கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078
விலை ரூ. 400

– பா. மகிழ்மதி

You might also like