வனத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் அந்த பெண்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 100 பெண்களின் இலட்சியமும் அதுவாகத்தான் இருந்துவருகிறது.
காடுகள் மெல்ல அழிந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அந்தப் பெண்கள் அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன் விளைவாக, இங்கு 9 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கும் காட்டைப் பாதுகாத்து வருகின்றனர்.
அத்துடன் வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
வனப்பாதுகாப்பு பெண்களின் திட்டத்திற்கு ‘ஜங்கிள் பச்சாவோ அபியான்’ என்று பெயர். ஏழு சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 104 பெண்கள் சேர்ந்து இந்தக் குழுவை அமைத்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் அனந்தபூர் பிளாக்கின் மகிஸ்கெடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வனப் பாதுகாப்புத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகம் முன்னெடுத்துள்ளது.
ஜங்கிள் பச்சாவோ அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கம் வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
நான்கு குழுவினராக பிரிந்துள்ள இப்பெண்கள் காலை 6 முதல் 9 வரை மற்றும் மாலையில் 4 முதல் 6 மணி வரையில் காடுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக மூங்கில் கம்புகளை கையில் வைத்துள்ள இவர்கள், அவ்வப்போது மரங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் வைத்துள்ளனர்.
யாராவது சட்டவிரோதமாக மரம் வெட்டுவது தெரிந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள். இந்த கடும் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு காரணமாக வனத்தில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வனத்தைப் பாதுகாக்கும் பெண்கள் குழுக்களை சரோஜ் சூரின் என்பவர்தான் தலைமையேற்று நடத்துகிறார். எங்கள் வனத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறோம் என்கிறார்.
“எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அருகிலுள்ள காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்தோம். விலங்குகளை வேட்டையாடுபவர்களும் மரங்களை வெட்டி அதன் இலைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
எங்களுடைய பாதுகாப்புப் பணியின் மூலம் ஒரே ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன,
இப்போது வனத்தின் தேவை பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்று சரோஜ் நிலைமையை விளக்குகிறார்.
இதுவரையில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய மனிதர்கள் மீது ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்பிற்கு முறையாக வராத பெண்களுக்கும் அபராதம் விதிக்கிறார்கள்.
இப்படி வசூலிக்கப்படும் அபராத தொகை புதிய மரக்கன்றுகளை நட பயன்படுத்தப்படுகிறது.
பா. மகிழ்மதி
15.02.2022 10 : 50 A.M