இங்கே, சமூகச் சம உரிமை இருக்கிறதா?

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? – 3 / பேராசிரியர் மு.இராமசாமி

1885-ல் உருவான இந்திய தேசிய காங்கிரஸில், 1922-1925 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த பெரியார், தான் கொண்டுவந்த ’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம்’ – அதாவது, 1920-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், மாநாட்டுத் தலைவர் திரு எஸ்.சீனிவாச அய்யங்கார் வகுப்புவாரித் தீர்மானத்திற்கு அனுமதி மறுத்து விடுகிறார்.

1921-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், அம்மாநாட்டுத் தலைவர் திரு.ராஜகோபாலாச்சாரியார், “வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொள்கை அளவில் வைத்துக் கொள்வோம், தீர்மானமாக வேண்டாம்” என்று நாசூக்காக மறுத்து விடுகிறார்.

1922-ல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாடு, 1923-ல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாடு-இங்கெல்லாம் இத்தீர்மானம் கொண்டுவரப் பெற்று, நிராகரிக்கப் பெறுகிறது.

1924-ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், அம்மாநாட்டிற்குப் பெரியார் தலைமையேற்றபோதும், திரு. எஸ்.சீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட தலைவர்கள், பெரியாருக்கு எதிராகப் பெரிய அளவில் உறுப்பினர்களைத் திரட்டியிருந்ததால், வகுப்புவாரித் தீர்மானம் அங்கும் நிறைவேறவில்லை.

இத்தனைக்குப் பின்னும், 1925-ல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், 25 உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்துடன் வகுப்புவாரித் தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வருகையில், அம்மாநாட்டுத் தலைவர் திரு.வி.கலியாணசுந்தரம், வகுப்புவாரித் தீர்மானத்தை ‘ஒழுங்கற்ற தீர்மானம்’ என்று சொல்லி அனுமதிக்க மறுத்துவிடுகிறார்.

இவ்வாறு 6 ஆண்டுகளாய்த் தொடர்ந்து திட்டமிடப்பட்டு அவரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கை தோற்கடிக்கப்பட,

“காங்கிரஸ் கட்சி பிராமணமயமாகி விட்டது. இங்கே பார்ப்பனத் தலைவர்களின் ஆதிக்கம் வலுத்துவிட்டது. காங்கிரஸில் தொடர்ந்து இருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை” என்று டிசம்பர் 1925-ல் இந்திய தேசியக் காங்கிரஸிலிருந்து காங்கிரஸை ஒழிப்பேன்; காந்தியை ஒழிப்பேன்; கடவுளை ஒழிப்பேன்; சாதி, மதத்தை ஒழிப்பேன்; பார்ப்பனியத்தை ஒழிப்பேன் என்கிற பஞ்சசீலக் கொள்கையுடன் வெளியேறுகிறார்.

இந்த இடத்தில், நான்கு விடயங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஒன்று, காங்கிரஸில் இருந்தபோதும், நீதிக்கட்சி கொண்டுவந்த தேவசம் போர்டு (இந்து அறநிலையத் துறை) சட்டத்தைப் பெரியார் ஆதரிக்கிறார்; இரண்டாவது,1921-ல் நீதிக்கட்சி, வகுப்புவாரி பிரதிநிதித்துவச் சட்டம் கொண்டு வருகையில், அதையும் காங்கிரஸில் இருந்துகொண்டே ஆதரித்து, காங்கிரஸும் அதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டிருக்கிறார்.

மூன்றாவது,1924-ல் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கையில், ’வைக்க’த்தில், தாழ்த்தப்பட்ட ஈழவ / புலைய மக்கள், கோயில் தெருவினுள் நடந்து செல்லும் உரிமை நுழைவுப் போராட்டம், அவரின் தலைமையில்தான் நடக்கிறது.

நான்காவது, 1924-ல் சேரன்மாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த வருணாசிரம சாதிபேத நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் கமிட்டியிலிருந்து அதற்கு நிதி அளிக்க மறுக்கிறார்.

நான்கிலும், வருணாச்சிரமம் எழுதி வைத்திருக்கிற, சாதித் துவேசத்திற்கு எதிரானவராக, அதைத் தட்டிக் கேட்டு, சமநீதிக்கு ஆதரவான நடைமுறைகளைத் தீர்க்கமுடன் பின்பற்றியவராகவே, பெரியார் இந்திய தேசிய காங்கிரசிற்குள்ளேயும் இருந்திருக்கிறார்.

அதிலிருந்து வெளியேறிய பின்பும், அவரின் சமூகநீதிக் கொள்கைக்குக் கைலாகு கொடுக்கிற எந்த அமைப்பின் தீர்மானத்தையும் ஆதரிப்பவராகவே இருந்திருக்கிறார்.

இந்த அடிப்படைதான், சமூகத் தளத்தில் அவரைக் கடைசிவரையும் இயங்க வைத்திருக்கிறது.

இவ்வளவிற்கும், அவரும் ஆச்சாரக் குடும்பத்திலிருந்து வெளியேறி வந்தவர்தான்! 1921-ல் நீதிக்கட்சி ஆட்சியில் சட்டமான முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையானது, கிடப்பில் 6 ஆண்டுகள், உயர்த்திக் கொண்ட பார்ப்பனச் சாதியினரின் பெரும் தடங்கலுக்குப் பின், 1926-ல் நீதிக் கட்சி ஆதரவைப் பெற்ற சுயேட்சை அரசாங்கத்தில், பத்திரப் பதிவுத்துறை அமைச்சராயிருந்த திரு எஸ்.முத்தையா முதலியாரினால், பெரியாரின் ஆதரவுடன் 04-11-1927 இல் (ஆணை எண்: 1071) அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதற்காகவே, அவரின் செயன்மைக்கான நன்றிக் கடனாகப் பிறக்கிற குழந்தைகளுக்கு, ’முத்தையா’ என்று பெயரிடச் சொல்லிப் பெரியார் அறிக்கை வெளியிடுகிறார்.

அதை, முழு வெற்றியுள்ளதாக்கும் நோக்கத்தில், துறைவாரியாகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்து, 02-07-1929 முதல் 11-11-1929 க்குள் சென்னை மாகாண அரசில், எல்லாத் துறைகளிலும், வகுப்புரிமையை நடைமுறைக்கு வரச்செய்தார் திரு.முத்தையா!

ஆக, நீதிக்கட்சி ஆதரவாளராகப் பெரியார் இருந்தபோதும் பெரியார், வகுப்புரிமைக்கு ஆதரவானவராகவும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சமநீதியைச் செயற்படுத்துகிறவராகவுமே இருந்திருக்கிறார் என்பது மிகவும் முக்கியமானது (மு.இராமசுவாமி, 2021; பக் 243-244).

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது, ஒவ்வொரு சாதிய அடுக்கிற்கும் அதனதன் மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி (10 ஆண்டுகளுக்கு ஒருமுறை) இட ஒதுக்கீடு செய்வது!

அதன்பின், நீதிக் கட்சியிலிருந்தும் விலகியிருந்து,1932-ல் சுயமரியாதை-சமதருமம் எனும் தத்துவங்களை இணைத்து ‘சுயமரியாதை-சமதருமக் கட்சி’யைத் தோற்றுவிக்கிறார்.

பெரியார் காங்கிரஸில் தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு இப்பொழுது 101 வயதாகிறது. இன்னமும் இது ஆதிக்கச் சக்திகளால் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் 2011வரை எடுக்கப்பட்டபோதும் முறையாக நடைபெற்றிருக்கவில்லை.

பல திசைகளிலிருந்தும் உரிமைக் குரல்கள் எழ ஆரம்பித்திருந்த நிலையில் 50% மேல் இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பில்லை (மராத்தா இடஒதுக்கீடு வழக்கில்!.

நாம் இப்பொழுது 69% இட ஒதுக்கீட்டில் சட்டப் பாதுகாப்புடன் இருக்கிறோம்) என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப,

இப்பொழுது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்தே பிற்படுத்தப்பட்ட, இதரப் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான, நிரப்பவேண்டிய தகவலையே நிரலிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது இன்றைய இந்திய ஒன்றிய அரசு!

நீதியைத் தேடிப்போனால் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்குக் கணக்கெடுப்பைக் கேட்கிறது. என்னவொரு விசித்திரக் கண்ணாமூச்சி விளையாட்டு இது!

பெரியார், 1920-களில் முன்னெடுத்த வகுப்புவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்பதும், சாதியால் பிளவுண்டு அதில் இறுகிப்போய்க் கிடக்கிற இந்திய-தமிழ்ச் சூழலில், ‘பிறப்பொக்கும்’ என்பதன் பிறிதுமொழிதல் சட்டப் போராட்ட நடவடிக்கையேயாகும்!

1916-ல் நீதிக்கட்சி என்கிற ’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவான காலச் சூழலும் 1920 டிசம்பரில் அது ஆட்சிக்கு வந்திருந்த சூழலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய முக்கியமான புறச்சூழல்களாகும்.

தீண்டாமை, இந்தியச் சூழலில் விவாதப் பொருளாகியிருந்த சூழலும் அது! 1925 டிசம்பரில் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய அந்தக் காலக்கட்டம், இந்தியச் சூழலில் மிகவும் குறிப்பிடவேண்டியதாகும்.

1925 செப்டம்பர் 27-ல், இந்துத்துவ இந்து ராஜ்யத்தைக் கட்டமைக்கும் கருத்தில் உருவான, ’ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்கிற அமைப்பு முளைவிட்டிருந்தது.

டிசம்பர் 26, 1925 இல்தான், உழைக்கும் மக்களான விவசாயி-தொழிலாளர்களுக்கான உரிமைக் குரலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இங்கு உருவாகத் தொடங்கியது.

1927-ல் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக, பம்பாய் மாகாண சட்டமன்ற உறுப்பினராக, ஆளுநர், அம்பேத்கரை நியமனம் செய்திருந்தார்.

1927 ஏப்ரல் 3-ல் ‘பகிஷ்கார பாரதம்’ (புறக்கணிக்கப்பட்ட இந்தியா) எனும் பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார் அம்பேத்கர்! ஏற்கெனவே, 31-01-1920 இல், ’மூஹ் நாயக்’ (ஊமைகளின் தலைவன்) என்றொரு இதழை நடத்தியிருந்தார்.

தீண்டப்படாத, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அத்தனைக் கொடுமைகளுக்கும் அடிப்படைக் காரணம், இந்து மதமும் அதில் அமைந்திருக்கும் பல அடுக்குகளுமே என்பதைத் தன்னுடைய முதல் கட்டுரையிலேயே பதிவு செய்திருந்தார்.

இந்து மதத்தில் ஓரடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்கு முன்னேறிச் செல்வதற்கு வசதியாக ஏணிப்படிகள் கிடையாது.

ஆகவே, மிகவும் அடிமட்ட நிலையில் இருப்பவர்கள், இறக்கும்வரை, அதே நிலையில் இருக்க வேண்டியதிருக்கிறது என்று எழுதியிருந்தார் அம்பேத்கர்!

இதே கருத்தில், பெரியார் இவரோடு நிகர் கருத்துகளையே கொண்டிருந்தார். மிக உயர்ந்த பலப்பலப் படிப்புகளைப் படித்தவராயும் தீண்டப்படாத மஹர் இனத்தைச் சேர்ந்தவராகவும் அம்பேத்கர் இருந்ததால், பிறப்பினடியாக அவர் எதிர்கொண்ட அவமானங்களும், அதன்காரணமாகவே, அவரை ஒதுக்க முடியாநிலையில், நேரு அமைச்சரவையின் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சட்டத்தின் வரைவு அறிக்கையை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் அவரால் பணியாற்ற முடிந்தது.

ஆக, இந்தச் சூழலின் சமூக-அரசியல் கொதிநிலையில் வைத்துத்தான்-பருண்மைப் பெருவெளியில் வைத்துத்தான்-பெரியாரைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பெரியாருக்குப் பொதுவுடைமை இயக்கத்தின்மீது பெரும் பரிவு இருந்தது. அதனாலேயே தன் அமைப்பிற்குச் ‘சுயமரியாதை-சமதர்மக் கட்சி’ என்று பெயரிட்டிருந்தார்.

”திராவிடத்திற்குள் இருந்து கொண்டு தன் உள்ளொளியாய்ப் பொதுவுடைமையை நேசித்தவர் பெரியார். சுயமரியாதை இயக்கத்தின் வேலைத்திட்டக் கூட்ட முடிவை, அதன் லட்சியத்தை 01-01-1933 நாளிட்ட ‘குடி அரசு’ இதழில் வெளியிடுகையில்,

”சுயமரியாதை இயக்க லக்ஷியம் பொதுவுடைமை இயக்க லக்ஷியமாய் இருக்கிறதென்றும், அதற்கு அரசாங்க அடக்குமுறை, கொடுமை ஏற்படுமென்றும், அதனால் இயக்கமே அழிவுற வேண்டிவரும் என்றும் பலர் சொல்லக் கேட்கிறோம்.

பலர் பத்திரிகைகளிலும் பிரசங்கங்களிலும் அந்தப்படிக் குறிப்பிட்டு வருவதையும் பார்க்கின்றோம்.

இதற்கு நாம் முதலாவது கூறும் பதில் என்னவென்றால், அவர்கள் கூறுகிறபடியே பொதுவுடைமைக் கொள்கையே சு.ம.கொள்கை என்று ஒத்துக்கொண்டே பார்ப்போமானாலும், அதனால் ஏற்படும் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்றுதான் கேட்கிறோம்.

நாம் என்றைய தினம் சுயமரியாதை இயக்கம் என்று ஆரம்பித்தோமோ அன்று முதலேதான் இவ்வியக்கத்தைப் பற்றி, பலரால் இது பொதுவுடைமை இயக்கமென்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது என்பதோடு, சு.ம. இயக்கத்தின் முடிவான லட்சியங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம், நாமும் மேல்கண்ட தத்துவத்தையேதான் சொல்லி வந்திருக்கிறோம்.

ஆதலால் நாம் புதிதாக எதையும் கொண்டுவந்து புகுத்திவிடவில்லை” என்று வெளிப்படையாகப் பொதுவுடைமைத் தத்துவத்தை நோக்கித் தன் மனம் திறந்தவர்.

சுயமரியாதை இயக்கத்தின் (சமவுரிமை) முடிவான இலட்சியமாக (சமவுடைமை), அவரைக் கைபிடித்து அழைத்து வருவதாகப் பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளையே கை காட்டுகிறார்.

ஆயின் மார்க்சியம் சொல்லும் சமூகத்தின் அடிக்கட்டுமானப் பொருளாதார அடித்தளத்தை, அதன் உற்பத்தி உறவுகளைக் கொண்டு அடையாளங்கண்டு, அதை மாற்றுவதற்குரிய தந்திரோபாயத்தை நோக்கி நடைபோடும் அதிகார அரசியலை முன்வைக்காமல், அடிக்கட்டுமானத்தைக் காக்கும்-சில வேளைகளில் அதன் இண்டு இடுக்குகளைத் துளைத்துத் தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும்-மேற்கட்டுமானப் பண்பாட்டியல் தளத்தின் முரணைக் கூர்மைப்படுத்தும் பணியிலேயே, தன்னை ஒப்புக் கொடுத்திருந்தார் பெரியார்!

இங்குள்ள மார்க்சியவாதிகளிடம் அவருக்கு முரண்பாடுகள் இருந்திருக்கக் கூடுமேயொழிய, மார்க்சியத்துடன் அவருக்கு என்றும் முரண்பாடுகள்-மனக் கசப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.

மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதிலும் அடிக்கட்டுமானத்தில் அமையும் பிரதான முரண்பாடு எது என்பதைத் தீர்மானிப்பதிலும், பல்வேறு மார்க்சிய அமைப்புகளிடமும் மாறுபட்ட கருத்துகள் வழக்கத்தில் இருப்பதைப்போலவே, தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா ஆகியோரோடுகூட தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மார்க்சியத்தை விதைக்க நடைபோட்ட பெரியாரின் இன்னொரு புதிய மார்க்சியப் பார்வையாகவே, அவரின் பார்வை அமைந்திருந்தது என்பதைத்தான் – இன்றைய மார்க்சியர்களின் பிரதான சமூக முரண்பாடுகளை அடையாளங்காணும் அறிவியல் பூர்வ இடத்தில், பெரியாருக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதைத்தான்-பெரியாரிடம் பார்க்க முடிகிறது.

மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதைப் பெரியாரின் மொழியில் பார்த்தால், “நான் ஒன்றும் கம்யூனிஸத்திற்கோ, சோசலிஸத்திற்கோ விரோதியில்லை, மற்றவர்களைவிட கம்யூனிஸத்திலும், சோசலிஸத்திலும், எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமுமுண்டு. ஆனால் கம்யூனிஸமும், சோசலிஸமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும்.

கம்யூனிஸம் என்ன சொல்லுகிறது? பேதத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது-அபேதவாதம்… அதுதான் கம்யூனிஸம்! அதாவது சமவுடைமை… குளிர் நாட்டு உடை எப்படி, உஷ்ண நாட்டிற்குப் பொருந்தாதோ, அதேபோல் மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரச் சமத்துவக் கொள்கை, இந்த நாட்டுக்கு, இந்த நிலையிலே பயன்படாது… ஏனென்றால்… இங்கே, சமூகச் சம உரிமை இல்லை.

(தொடரும்…)

You might also like