தன்னைப் பண்படுத்திக் கொள்வதே நற்பண்பின் அடையாளம்!

– புத்தரின் போதனைகள்

பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.

இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்குத்தான் உண்டு.

நாம் இன்று என்ன மனநிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

எதற்காகவும் அவசரப்படாதீர்கள். நேரம் வரும்போது தானாகவே நடந்தேறும்.

பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள். நிம்மதி பக்கத்திலேயே இருக்கும்.

உங்களை நிராகரித்தால் கவலை கொள்ள வேண்டாம். இந்த உலகில் விலையுயர்ந்த பொருட்களை வாங்க இயலாமல் நிராகரிப்பவர்கள் அதிகம்.

பிறருக்கு போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பின் அடையாளம்.

ஒரு தீபத்திலிருந்து ஆயிரம் தீபங்களை ஏற்றினாலும் அதன் ஒளி குறைவதே இல்லை. உன் அன்பை பிறருடன் பகிர்வதனால் அது என்றும் குறைவதில்லை.

உலகம் துன்பமயமானது. துன்பத்திற்குக் காரணம் ஆசையே. ஆசையை ஒழித்தால் துன்பமின்றி வாழலாம்.

நல்லசிந்தனை, நல்ல எண்ணம், நல்ல அறிவு, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல நடத்தை, நல்ல முயற்சி, நல்ல வாழ்க்கை, நல்ல தியானம் ஆகியவற்றைக் பின்பற்றி வாழும் போது துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

துன்பம் நம்மைத் தீண்டாமல் மற்றும் நெருங்காமல் இருக்க வேண்டுமானால் நம்மிடம் உருவாகும் தேவையற்ற ஆசைகளை ஒழிக்க வேண்டும்.

நாம் நினைப்பது நல்லது என்றால் அது நமக்குக் கிடைத்தே தீரும். அவ்வாறு நமக்குக் கிடைக்கவில்லையென்றால் அது நமக்குரியது அல்ல என்று நினைத்துக் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைக்கவில்லையென்று வருத்தப்படுதல் கூடாது.

நாம் யாருக்கும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சி செய்தால் தமக்குத் தேவையானவை அனைத்தும் தாமாக வந்து சேரும்.

முடிந்த வரை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீங்கு செய்யாமல் இருந்தால் எந்தத் துன்பமும் நம்மை வந்து சேராது.

புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டே இருந்தால் நம்மிடம் உள்ள தீய குணங்கள் சிறிது சிறிதாக விலகிச் சென்று விடும்.

தீய சக்திகளான கோபம், பொறாமை, ஆணவம், கர்வம், சுயநலம் ஆகியவற்றை நம்மிடமிருந்து நீக்கும் போது நல்ல சக்திகளான அன்பு, அறம், தர்மம், இரக்கம், கருணை, தொண்டு வளரும். இந்த நல்ல சக்திகள் உலக உயிர்கள் இன்புற்று வாழ வழி செய்யும்.

You might also like