அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!

“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா தடுப்பூசி முகாம்கள் தவிர, இதர நாட்களிலும் தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

பருவ மழையால் ஏற்படும் நீர், உணவு நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

முதல் நான்கரை மாதங்கள், குறைந்த அளவில் தடுப்பூசி போட்டதன் விளைவாக, தேசிய அளவு சராசரியில் தமிழகம் சரிவில் உள்ளது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடுவதற்கான அவகாசம் முடிந்தும், போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும்.

பண்டிகை நாட்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா, இந்தூர் நகரங்களில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில், ஆண்டுதோறும் கடைசி மூன்று மாதங்கள் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் உட்பட பல இடங்களில் அதிகரித்துள்ளது.

எனவே, கொசு உற்பத்தியாகும் தண்ணீர் தேங்கும் இடங்கள், டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பைத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு முறைகளில், கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.

கொசு ஒழிப்பில், மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து, கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பாம்பு மற்றும் பூச்சிக் கடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு மாதங்களும், சுகாதாரத் துறைக்கு மிக முக்கியமான மாதங்கள். எனவே, நோயை தடுக்கும் வகையில், மாவட்ட அளவில் குழுக்கள் ஒன்றிணைந்து, நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு, கொரோனா மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like