கொரோனா வைரஸ் காரனமாக கடந்த 6 மாதங்களாக விட்டுவிட்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
துபாயில் இன்று நடக்கும் முதலாவது ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்திய கிரிக்கெட் உலகில் குரு சிஷ்யனாக அறியப்படும் மகேந்திர சிங் தோனியும், ரிஷப் பந்தும் இப்போட்டியில் மோதவுள்ளதால் ஏகத்துக்கும் பரபரப்பாகிக் கிடக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள டெல்லி அணி, லீக் சுற்றுகளில் 2 முறை சென்னையை வென்றுள்ளது. அது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் காயத்தால் கடந்த சில போட்டிகளாக ஆடாமல் இருந்த ஸ்டோனிஸ், இப்போட்டியில் ஆட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அது அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

டெல்லி அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய 2 துறைகளிலும் அந்த அணி வலுவாக உள்ளது.
ஷிகர் தவன், பிரித்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹெட்மயர் என்று வலுவான பேட்டிங் வரிசையை அந்த அணி கொண்டுள்ளது.
மேலும் நார்ஜ்ஜே, ரபாடா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும், அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.
ஆனால் அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்ட அணியாக இருப்பது அவர்களின் பலவீனமாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில் சென்னை அணியைப் பொறுத்தவரை, அந்த அணியின் வீரர்கள் பெற்றுள்ள அனுபவம் மிகப்பெரிய பலமாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 11 முறை அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
அதனால் முக்கியமான போட்டிகளை எப்படி அணுக வேண்டும் என்ற அனுபவம் அந்த அணியின் வீரர்களுக்கு நிறையவே உள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் வரிசையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பப் டுபிளஸ்ஸியும், ருதுராஜ் கெய்க்வாட்டும் முதல் 5 இடங்களுக்குள் உள்ளனர்.
ஆனால் தோனி, ரெய்னா உள்ளிட்ட மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் சென்னை அணியின் வெற்றிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடுவது இன்றியமையாததாக உள்ளது.

அதேபோல் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை குவிக்கும் ஆற்றலையும் அந்த அணியின் வீரர்கள் பெறவேண்டி உள்ளது.
துபாய் மைதானத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் நடந்த 10 லீக் போட்டிகளில் 7 ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர்.
அதனால் இன்றைய தினமும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசும் என எதிர்பார்க்கலாம்.
-பிரணதி