மும்பைக்கு எதிராக பல சாதனைகளைப் படைத்த சிஎஸ்கே!

மும்பை அணியை எளிதாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வான்கடே மைதானத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடர் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமபலம் வாய்ந்த எதிர் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி கருதப்படுகிறது.

இரு அணிகளும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் மோதுவது ’el classico’ போட்டியாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

மும்பை அணி கடந்த போட்டியில் வென்று ஃபார்மிற்கு திரும்பிய நிலையில், சென்னைக்கு எதிராக அதே உற்சாகத்துடன் களமிறங்கியது.

ஆனால், சென்னை பேட்ஸ்மென்கள் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். இந்த சீசன் தொடக்கம் முதலே பொறுமையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டினார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்காமல் 22 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் வந்த வீரர்கள் சர்ஃப்ராஸ் கான் (14), பிரேவிஸ் (21), கார்த்திக் சர்மா (18) என அனைவரும் வந்த வேகத்தில் சிக்சர், பவுண்டரிகள் என விளாசி அவுட்டாகினர். ஆனால், மறுமுனையில் சிஎஸ்கே அணிக்கு தூணாக நின்று சாம்சன் சதம் அடித்தார்.

இன்னிங்ஸின் கடைசி பந்து வரை அதிரடியாக ஆடிய சாம்சன் (101*) ஐபிஎல் போட்டிகளில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

இவரது உறுதியாக ஆட்டம் மூலம் சென்னை அணி 207 ரன்களை எடுத்தது. கடினமாக இலக்கை எடுக்க மும்பை அணி போராடும் என எதிர்பார்த்த நிலையில், சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அகேல் ஹொசைன், நூர் அகமது சுழல் ஜாலத்தில் மும்பை பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். அகேல் ஹொசைன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இறுதியில் மும்பை அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை அணி 103 ரன்களில் எளிதாக வென்றது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. அதோடு, சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிராக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ஐபிஎல் தொடரில் சென்னை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தங்களது சொந்த மைதானத்தில் கிடைத்த மோசமான தோல்வி ஆகும்.

முன்னதாக வான்கடே மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே ரன்கள் விகிதத்தில் கிடைத்த மோசமான தோல்வியாக இருந்தது.

அதேபோல் நேற்றைய வெற்றியின் மூலம் வான்கடே மைதானத்தில் சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 6 போட்டிகளில் தொடர்ந்து வென்றுள்ளது. 

வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற அணிகள் பட்டியலில் சிஎஸ்கே (14 போட்டிகள், 6 வெற்றிகள்) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி (11 போட்டிகள், 6 வெற்றி) உள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான படுதோல்வி மூலம் மும்பை அணி வான்கடே மைதானத்தில் 2017 சீசனுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தோற்றுள்ளது.

கடந்த 2017 சீசனில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது. இம்முறை வான்கடே மைதானத்தில் ’ஹாட்ரிக்’ தோல்வி அடைந்து சோதனையான சாதனையையும் படைத்துள்ளது.

நன்றி: முகநூல் பதிவு

You might also like