இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் – 3

மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது.

இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய அளவில் ஜோதி பாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டங்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே துவங்கி விட்டது. 1947 – 48 ஆண்டு காலகட்டத்தில், உழைக்கும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான ‘தீபிகா’, அதாவது நில உரிமையாளர்களுக்கு, விளைச்சலில் மூன்றில் ஒரு பங்குதான் தர முடியும் என்பதுதான் மையக் கோரிக்கை.

இதற்கான போராட்டத்தை, மிகப்பெரிய அளவில் நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பு ‘கிசான் சபா’. பல இடங்களில் போராடும் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

நில உரிமையாளர்கள் பயந்து போய் ஊரை விட்டு ஓடும் அளவுக்கு இருந்தது. அந்த நிலங்கள், கிசான் சபாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந்த போராட்டத்தில் வெற்றி கிடைத்தது.

இதற்கு அடுத்து வந்த பி.சி.ராய் அரசு, நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு மக்கள் போராட்டங்களைக் கையிலெடுத்து களத்தில் இருந்து வந்தனர்.

பி.சி.ராய் புகழ் பெற்றவர் மட்டுமின்றி நிர்வாகத் திறமை, ஆளுமை ஆகியவற்றைப் பெற்ற அரிதான தலைவராக இருந்தார். ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல 1959ம் ஆண்டு காலகட்டத்தில், மிகப் பெரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் விநியோக முறையில் பெரும் குளறுபடி காரணமாக  பிரச்சினை எழுந்தது.

இது கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை, வர்க்கப் போராட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனை என்று பின்னாளில் வர்ணிக்கும் அளவுக்கு, இருந்தது.

எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்று மாநிலம் முழுதும் பரபரப்பான சூழல் நிலவியது. இதை அனைத்தையும் வழிநடத்தியது, கிசான் சபா. காங்கிரஸ் கட்சியில், முதல்வருக்கு வயதாகியிருந்தது. அடுத்தது யார் என்பதில் வழக்கம் போல பிரச்சினை.

இதெல்லாம் சேர்ந்து முதல்வர் பி.சி.ராயைப் பொறுமையிழக்கச் செய்திருக்க வேண்டும். ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதியன்று கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது கிசான் சபா. அதற்காக, மாநிலத்தின் அனைத்து கிராமங்களில் இருந்து விவசாயிகள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், பேரணி கல்கத்தாவின் மிக முக்கியப் பகுதியான ‘எழுத்தாளர்கள் மாளிகை’ யை நோக்கிப் புறப்பட்டது.

அப்போது எதிர்பார்க்காத விதமாக போலிசார் மிக முரட்டுத்தனமாக அடக்குமுறையைக் கட்டவிழ்த்தனர். அதன் காரணமாகவும் இடிபாடுகளில் சிக்கியும் 80 பேர் இறந்து போனார்கள். இவர்களில் யாரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படவில்லை. அடிபட்டும், இடிபாடுகளில் அகப்பட்டும் இறந்தனர்.

அதற்கடுத்த இரண்டு வருடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இதற்குக் காரணம் சீன – இந்திய யுத்தம் காரணமாக ஏற்பட்ட உட்கட்சி கருத்து வேறுபாடுகளால், சிபிஐ (மார்க்சிஸ்ட்) உருவானது. ஆனாலும் கூட முக்கியமான பிரச்சினைகளில் சேர்ந்தே செயல்பட்டனர்.

1966-ல் இரண்டாம் முறையாக உணவுப் பொருள் பங்கீடு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பிரச்சினை எழுந்தது. இதன் காரணமாக முன்னரே குறிப்பிட்டபடி, காங்கிரஸ் பிளந்து, அதில் ஒரு பகுதி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுடன் சேர்ந்து செயல்பட்டது.

1967-ல் நடந்த தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இடதுசாரிகள் காங்கிரசின் புதிதாகத் தோன்றிய பங்களா காங்கிரசோடு சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் ஆட்சி வெகு காலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம், ஆளும் கம்யூனிஸ்டுகள், பதவி சுகங்களுக்காக, முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி தீவிரக் கம்யூனிஸ்டான சாரு மஜூம்தார் நக்சல்பாரி என்ற இடத்தில் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார்.

அவர்களது நடவடிக்கைகளைக் கையாளுவதில் கூட்டணிக்குள் பிரச்சினைகள் எழுந்தன. 1969-ல் மறுபடியும் தேர்தல்கள் நடந்தன. இந்த முறை இடதுசாரி மார்க்சிஸ்டு அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருந்தது.

ஆனாலும் சி.பி.ஐ. பங்களா காங்கிரஸ் ஆதரவுடன் அஜோய் முகர்ஜி மீண்டும் முதல்வரானார். இந்த ஆட்சியும் நீடிக்கவில்லை. 1970-ல் மேற்கு வங்காளம் நான்காம் முறையாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வந்தது.

அஜோய் முகர்ஜி

1971-ல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1977இல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பலவேறு காரணங்களால் படுதோல்வி அடைந்தது. இடதுசாரி முன்னணி மாபெரும் வெற்றி பெற்று, அதாவது 243 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜோதி பாசு முதல்வரானார்.

இந்த ஆட்சிக்கான முதல் சரிவு 1979-ல் நடந்த மர்ச்சி ஜாபி என்ற இடத்தில் நடந்த இனப் படுகொலை.

இது மிகப்பெரிய சம்பவம் என்றாலும் சுருக்கமாக 1947 லிருந்து பாகிஸ்தானுடன் நடந்த இரு யுத்தங்களின்போது, பங்களாதேஷிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்த இந்து அகதிகள், மத்திய அரசால், மேற்கு வங்களம், மத்தியப் பிரதேஷ், ஒரிசா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை ஒட்டி இருக்கிற வனாந்திரப் பகுதிதாயான தண்டகாரண்யத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அங்கே அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லியது ஆனால் அப்படி செய்யவில்லை. இடதுசாரிகள் தாங்கள் பதவிக்கு வந்தால், அந்த அகதிகள் மேற்கு வங்கத்திலுள்ள சுந்தரவனக் காடுகள் பகுதிக்கு வரலாம் என்று பலமுறை அவர்களிடம் தெரிவித்து வந்தனர்.

கம்யூனிஸ்டுகள் 1977-ல் ஆட்சிக்கு வந்தனர். தங்களுக்கு விடிவு காலம் வந்ததாக நம்பிய இந்து அகதிகள், தண்டகாரண்யத்தை விட்டு பெருமளவில் மேற்கு வங்காளத்தில் குடியேற ஆரம்பித்தனர். அது வளமான பகுதி என்பதால் அவர்களால் வாழ முடிந்தது. ஆனால் எண்ணிக்கை அதிகமாகிப் போனது.

1979-ல் அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இடதுசாரி அரசு அறிவித்தது. அவர்களை வெளியேற்ற மிக மோசமான முறைகள் கையாளப்பட்டன.

பட்டினி போடுவது, அடிப்படை வசதிகளை மறுப்பது, போலிஸ் அடக்குமுறை என்று பல்வேறு விதங்களில் நடவடிக்கை இருந்தது.

1979, மே மாதம் 16ஆம் தேதி, போலிசார் ‘இறுதி’ நடவடிக்கை எடுத்தனர். நூற்றுக்கணக்கான இந்து அகதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பயந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய 4,128 குடும்பங்கள், கொடுமையான பயண சூழ்நிலைகளால் மடிந்தனர்.

ஆனாலும் இடதுசாரி அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது. அதுவும் ஜோதி பாசுதான் முதல்வராக இருந்து வந்தார். 1990-களில் தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள், 2000ம் ஆண்டில் நாட்டில் தீவிரமாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தன.

இந்த சந்தர்ப்பத்தில், அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் வேகமும் உள்ள ஒருவர், இடது சாரி கட்சிக்குத் தேவைப்பட்டது.

அப்போதுதான் ஜோதிபாசுவிற்கு நெருக்கமான புத்ததேவ் பட்டாச்சார்யா தேர்வு செய்யப்பட்டார். அவரும் தனது ஆளுமையை அடுத்த தேர்தல்களில் அதாவது 2006 தேர்தல்களில் 235 இடங்களைக் கைப்பற்றி நிரூபித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திருணமூல் காங்கிரஸ் முழுதுமாக தோல்வியை சந்தித்தது.

2007ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம், அதன் வீழ்ச்சிக்குக் காரணமான மிகப்பெரிய சவாலான நந்திகிராம் விவகாரத்தை சந்தித்தது. இதிலும் இடதுசாரியின் தீவிர பிரிவான மாவோயிஸ்டுகள் எதிர்க் கட்சியினருடன் சேர்ந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கே மிகப் பெரிய இரசாயன தொழிற்பேட்டை ஏற்படுத்த விவசாயிகள் நிலம் கையகப் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து மாவோயிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியோர் சேர்ந்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், 14 கிராம மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இறுதியில் அரசாங்கம் அந்த இடத்தை விட்டு வெளியேறியது.

இந்தப் பிரச்சினை மிகப் பெரிய அவப் பெயரைத் தேடித் தந்தது. இதற்கு அடுத்த ஆண்டில், 2008–ல் நடந்த பஞாயத்துத் தேர்தல்களில் இடதுசாரி அரசு படுதோல்வியடைந்தது.

இது போதாதென்று, சிங்கூர் கிராமத்தில் டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடா நிறுவனம் அங்கிருந்து வெளியேறியது.

2009  நாடாளுமன்ற தேர்தல்களில், திருணமூல் காங்கிரஸ், எஸ்யுசிஐ, காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து போட்டியிட்டு 27 இடங்களைப் பிடித்தன. இதுவும் கம்யூனிஸ்ட் அரசுக்குப் பெரும் தோல்விதான். 2010ஆம் ஆண்டு உள்ளூர் தேர்தல்கள் நடந்தன. இதிலும் ஆளும் கட்சி தோற்றது.

இதன் உச்சக்கட்டமாக 2011ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திருணமூல் கூட்டணி 227 இடங்களைப் பிடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. திருணமூல் மட்டும் இதில் 184 இடங்களைப் பிடித்து, அரசியல் வானில் மம்தாவின் கொடி ஒளி வீசிப் பறக்க ஆரம்பித்தது. இடதுசாரிகள் ஆட்சியும் ஆளுமையும் முடிவுக்கு வந்தது.

(தொடரும்…)

29.03.2021  12 : 35 P.M.

You might also like