‘ஆபரேஷன் ஜாவா’: சைபர் க்ரைமின் இன்றைய முகம்!
இன்றைய தேதியில் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பொருளாதார, பாலியல் குற்றங்கள் சமூகத்தைப் பெருமளவில் சிதைக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தைத் தேடுவது போலானது.
ஆனால், சைபர் குற்றங்களில் தீர்வு கண்டறிவது அரிதான விஷயமல்ல என்பதைச் சில உதாரணங்களுடன் விளக்குகிறது ‘ஆபரேஷன் ஜாவா’ மலையாளத் திரைப்படம்.
வெறுமனே ‘க்ரைம் த்ரில்லர்’ ஆக மட்டுமல்லாமல், வாழ்வு சார்ந்த பல பிரச்சனைகளைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இதன் திரைக்கதை.
இணைய வலைக்குள் நாம்!
பொதுவாக, ஒரு சமூகத்தில் குற்றங்களோடு தொடர்புடையவர்களும் சாதாரணமானவர்கள் போலவே வாழ்கின்றனர். சைபர் குற்றங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
அப்படிப்பட்ட குற்றங்களில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் சைபர் க்ரைம் பிரிவு தனியாக இயங்கி வருகிறது. கேரள மாநில சைபர் க்ரைமின் கொச்சி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதை விரிகிறது.

‘பிரேமம்’ படம் ரிலீசான அன்றே அதனை இணையத்தில் கசிய விட்டவர்கள் சென்னையில் கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால், அதற்கு முன்னரே வேறொருவர் அதனை இணையத்தில் வெளியிட்ட ஆதாரங்களுடன் சைபர் க்ரைம் பிரிவை அணுகுகின்றனர் வினயதாசன் (லுக்மன் அவரன்) மற்றும் ஆண்டனி (பாலு வர்கீஸ்). இருவரும் பிடெக் பட்டதாரிகள்.
இணைய குற்றங்களைக் கண்டறியும் இவர்களது அசாத்திய திறனால், அக்குற்றத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, சைபர் க்ரைம் பிரிவில் பயிற்சி பெறுபவர்களாக இருவரும் சேர்கின்றனர்.
அதன் பின்னர், நர்ஸ் வேலையில் சேர்த்துவிடுவதாக மொபைலில் பேசி பணத்தை வாங்கி ஏமாற்றும் கும்பலைக் கண்டறியும் முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரமில்லாத சூழலில் ஒரு பெண் மூர்க்கமாகத் தாக்கப்பட, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஒரே இரவில் கைது செய்ய உதவுகின்றனர்.
இப்படிப்பட்ட திறமைசாலிகளை அரசு எந்திரம் எப்படி பயன்படுத்துகிறது என்பதோடு படம் முடிவடைகிறது. கூடவே, இணைய வலையில் நாம் நிரந்தரமாகச் சிக்கியிருப்பதையும் உணர்த்துகிறது.
‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ திரைப்படம் ஒரு போலீஸ் அதிகாரியின் ஒருநாள் வாழ்க்கையை காட்டியது போல, இத்திரைக்கதை ஒரு குறிப்பிட்ட காவல் துறை பிரிவின் ஒரு சில ஆபரேஷன்களை மட்டுமே மையப்படுத்தியிருக்கிறது.
அசாத்திய உழைப்பு!
கதையை இஞ்ச் பை இஞ்ச் விரிவாகச் சொன்னாலும், திரையில் பார்க்கும்போது மனம் ஒன்றுவதை தடுக்க முடியாது. அந்த அளவுக்கு, இப்படைப்பை துல்லியமான காட்சியமைப்புடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி.
மிக முக்கியமாக, பெரும்பாலான காட்சிகளில் ‘ஸ்டெடி கேம்’ உதவியுடன் அங்குமிங்கும் அலையெனப் பிரவாகமெடுக்கிறது பையிஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு. மவுனத்துக்கு இடையே திடுமென உயர்ந்து காட்சியின் பிரமாண்டத்தை மனதுக்கு கடத்துகிறது ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை.
நிஷாத் யூசுப்பின் படத்தொகுப்பும், துந்து ரஞ்சீவின் கலையமைப்பும் துல்லியமாக அமைந்து, இயக்குனரின் பார்வைக்கு உரமூட்டியிருக்கின்றன.

தொழில்நுட்ப அம்சங்களைத் தாண்டி, இப்படத்துக்கு உயிரூட்டியிருப்பது லைவ் லோக்கேஷன்களும் அதில் நிரம்பியிருக்கும் நடிப்புக் கலைஞர்களும்தான். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளில் தோன்றினாலே முகங்களை நினைவில் கொள்ளும் அளவுக்கு, நடிகர் நடிகைகளின் இருப்பு அமைந்திருக்கிறது.
‘எது ஹீரோயிசம்’ என்ற கேள்விக்கு பதில் தந்திருக்கின்றனர் இப்படத்தின் பிரதான வேடங்களில் நடித்த பாலு வர்க்கீஸும் லுக்மனும். இருவருமே சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர்கள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
அந்த வகையில் விஜய் சேதுபதி, விமல் போன்றோரை நினைவூட்டுகிறது இவர்களது இருப்பு. கவனத்துக்கு வராத துணை நடிகர்களைக் கொண்டு ஒரு கச்சிதமான படத்தை உருவாக்க முடியுமென்பதற்கு இவர்களது நடிப்பு ஒரு எடுத்துக்காட்டு.
நாயகி மமிதா பைஜுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும், தனக்கான காட்சிகளில் அழகுப்பதுமையாக மட்டும் அவர் வந்துபோகவில்லை.

இர்ஷாத், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட தெரிந்த மலையாள முகங்கள் தாண்டி, ஜோய் மற்றும் பஷீர் வேடமேற்று நடித்தவர்கள் ஆச்சர்யமூட்டுகின்றனர். ‘தண்ணீர் மாதன் தினங்கள்’ மேத்யூ தாமஸும், விநாயகனும் இதில் இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வருவது கூடுதல் ஆச்சர்யம்.
இவர்கள் தவிர, பெயர்கள் வெளியே தெரியவில்லை என்றபோதும் இப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கொட்டிய அசாத்திய உழைப்பே இதனை ஒரு நல்ல படைப்பாக்கி இருக்கிறது.
கேரள பெருமை!
கேரள மாநில காவல் துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தமிழ்நாட்டில் சேலத்திலுள்ள கோலமேடு எனும் பகுதியில் ஒரு கும்பலை வளைத்து பிடிப்பதாக ஒரு காட்சி வருகிறது. தவிர, நாயகர்கள் இருவரும் பயன்படுத்தும் லேப்டாப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியிருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை இரண்டுமே தமிழ்நாட்டு மக்கள் பார்வையில் கேள்விகளை எழுப்பும் விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

எந்த மாநிலமானாலும், தற்காலிக பணியாளர்களைச் சம்பந்தப்பட்ட துறையில் கையாளும் விதம் மோசமாகவே இருக்கும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறது ‘ஆபரேஷன் ஜாவா’ திரைக்கதை. கூடவே, வசதியான வாழ்க்கையை மட்டுமே பிரதானமாகக் கொள்ளும் இளைய தலைமுறையின் பேராசையையும், பாலியல் குற்றங்கள் வைரலாக பரவுவதால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வாழ்வு முழுவதும் எதிர்கொள்ளும் வலிகளையும் பேசுகிறது.
எது எப்படியானாலும், ஒரு காட்சிப் பதிவாக அற்புதமான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது ‘ஆபரேஷன் ஜாவா’. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இதனை ஆக்கியிருப்பதற்காக, இயக்குனர் தருண்மூர்த்தி மற்றும் குழுவுக்கு பாராட்டுகள்!
– உதய் பாடகலிங்கம்
03.03.2021 12 : 30 P.M.