மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ படம் இன்றைக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனதில் பசுமையாக இடம்பிடித்திருக்கக் கூடிய திரைப்படம்.
அதில் இரு வேடங்களில் நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். அவருடன் பானுமதி, எம்.என். ராஜம், சரோஜா தேவி உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
அதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்த எம்.என்.ராஜம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்திருந்தார்.
‘நாடோடி மன்னன்’ படத்தில் மன்னனாக வரும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ராணியாக நடித்திருந்தேன். இதில் ஒரு காட்சியில் நாடோடியாக வரும் எம்.ஜி.ஆர். அரண்மனைக்குள் மன்னனைப் போல் வந்திருப்பார்.
அப்போது, என்னிடம் “நான் நாடோடி. மன்னரல்ல. மன்னர் வேடத்தில், இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன். என்னை நம்புங்கள், சகோதரி” என்று சொல்லுவார்.
அதற்கு “நான் மட்டுமல்ல, இந்த உலகமே உங்களை நம்பித்தானே இருக்கிறது” என்று பேசியிருப்பேன்.
அந்த வசனத்திற்கு எவ்வளவு தூரம் ரசிகர்களிடம் மதிப்பிருக்கிறது என்பது, அந்தப் படத்திற்கான வெற்றி விழாவின்போது பல்வேறு ஊர்களுக்குப் போனபோது தெரிந்தது.
அந்த திரைப்படத்தில் அந்தக் காட்சியின்போது, நான் சொன்ன அந்த வசனத்திற்கு ஏகப்பட்ட கிளாப்ஸ்.
பிறகு மக்கள் திலகம் அவர்கள் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம்.
எனது கணவருடன் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். திரளான கூட்டம். பல விஐபிக்கள் வந்திருந்தார்கள்.
நான் உள்ளே நுழைந்து தூரத்திலிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து “அண்ணே“ என்று கூப்பிட்டேன்.
மற்றவர்களெல்லாம் முதல்வர் என்றும் பல்வேறு விதமாக அழைத்தபோது, நான் அண்ணே என்று அழைத்ததும் அவர் திரும்பி என்னைப் பார்த்தார்.
சிரித்தபடியே “வா“ என்று கையசைத்துக் கூப்பிட்டார். அருகில் போனேன்.
போனதும் அங்கிருந்தவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி, “நாடோடி மன்னன் திரைப்படத்தில் இவங்க ஒரு வசனம் பேசியிருந்தாங்க. இந்த உலகமே உங்களை நம்பித்தானே இருக்குது என்று பேசியிருப்பாங்க. அவங்க சொன்னது இப்ப பலிச்சிருக்கு” என்று சொன்னபோது எனக்கு உடம்பே சிலிர்த்துவிட்டது.
எவ்வளவு மதிப்பு வைத்து அப்படிப் பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
என்றைக்கும் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.தான்.
