என்னதான் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, இதுவரை இல்லாத அளவுக்கு சமூக வலைத்தளங்கள் பெருகி இருந்தாலும் கூட, தமிழை அவர்கள் கையாளும் முறைதான் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செய்தியை அளிக்கும் பலதரப்பட்ட நெறியாளர்களுக்கு தமிழின் ஒரு வரியைச் சரியாக உச்சரிப்பதே, அதாவது அதை தடுமாற்றமின்றி வாசிப்பதுமே பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
அண்மையில் தவெக சம்பந்தப்பட்ட ஒரு பிரமுகர் வெளியிட்ட ஒரு பதிவில் “போனால் போகட்டும் போடா“ என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பற்றி தகவலை வெளியிட்ட ஒரு தொலைக்காட்சியில், அந்த குறிப்பிட்ட பாடல் வரியைச் சொல்லி இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார் என்று சொல்லியிருந்தார்.
ஆனால், அந்தப் பாடல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் இடம்பெற்றது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட எதிர்ப்புக்கள் எழுந்தாலும்கூட இந்த விவரக் குறைவுக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி தரப்பில் எந்த ஒரு சிறு பிழைத்திருத்தம் கூட வெளியாகவில்லை.
அண்மையில் இசையமைப்பாளர் தேவா மறைந்தபோது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வரான விஜய் சென்றிருந்தார்.
இந்தச் செய்தியை, ஒரு தொலைக்காட்சியில் ஸ்க்ராலிங் நியூஸாக வெளியிட்டபோது “தேவா மரணம்… முதல்வர் விஜய் மரணம்“ என்று முதல்வர் விஜய் குறித்த ஒரு மிகத் தவறான ஒரு செய்தியை வெளியிட்டுருந்தார்கள்.
இதற்கு தவெக தரப்பில் பலமான கண்டனம் எழுப்பப்பட்ட நிலையிலும், அதை தவறாக ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு மதிப்புக் கொடுக்கிற விதத்தில் அதற்கு சிறு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
இதே மாதிரியான தவறைப் பலர், காட்சி ஊடகங்களில் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி உயர் பொறுப்பில் இருக்கும் மேயர் போன்றவர்கள் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது “மக்கள்கள்“ என்று குறிப்பிடும் அபத்தமும் தொடர்ந்து நடக்கிறது.
இதுதவிர உயிரோடு இருப்பவர்கள் சிலரைக் கூட உயிரிழந்துவிட்டார்கள் என்று செய்தி வாசித்த கொடுமையும் நமது மதிப்புமிக்க நான்காவது தூணான ஊடகங்களில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பித் தொழில் செய்கிறவர்கள் ஏன் இம்மாதிரியான குறைந்தபட்ச நேர்த்தி இல்லாமல் இத்தகைய அபத்தங்களை உருவாக்குகிறார்கள்?
இது தமிழுக்கு பிடித்த வெட்கக் கேடு.
– அ. தமிழரசன்
