சென்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போதும் பாஜக பரப்புரை செய்தாலும்கூட, பெரிய அளவில் வாக்கு வங்கியைப் பெற முடியவில்லை.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.
நயினார் நாகேந்திரன் பேசுவதே விவாதத்திற்குரிய பொருளாக மாறி இருக்கிறது.
இதற்கு முன்பு தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை போன்றவர்கள் பரபரப்பான எவ்வளவோ விஷயங்களைப் பேசி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசவில்லை.
ஆனால், தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் தேர்தலுக்கு முன்பு முதல்வர் விஜய் குறித்தும் ஒரு குறிப்பிட்ட நடிகை குறித்தும் பேசி பிறகு அவரே வருத்தம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் தாயார் பற்றி ஒரு சர்ச்சைக்குரிய பேச்சையும் பேசி ஒரு விவாதச் சூழலை உருவாக்கினார்.
ஆனால், என்னதான் தமிழக முதல்வர் விஜய்யோடு பிரதமர் நரேந்திர மோடி நட்பு பாராட்டினால் கூட, சென்னைக்கு வருகை தரும்போது இருவரும் கலந்து கொள்ளும் விழாக்களில் விஜய்க்கு உரிய மரியாதை காட்டுகிற மோடி காட்டும் நாகரிகத்தை மற்றவர்கள் காட்டவில்லை.
அதிலும் நயினார் நாகேந்திரன், விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், இரண்டு நகர்வுகளைப் பார்க்க வேண்டும். ஒன்று, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சரும் எல்.முருகன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
அதற்கான விலகல் கடிதத்தை அவரே அளித்திருக்கிறார்.
சமீபத்தில் சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது எல்.முருகன் மொழிபெயர்ப்பாளர்களாக வெவ்வேறு விழாக்களில் பங்கேற்ற நிலையிலும் அவரது திடீர் பதவி விலகல் குறித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை எழுப்பி இருக்கின்றன.
இதுவரை அவருக்கு வேறெந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இரண்டாவது தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைமைப் பொறுப்பிலிருந்து சமீபத்தில் அவரும் விலக்கப்பட்டிருக்கிறார்.
அகில இந்திய அளவில் கவனம் பெற்ற இருவரும் எந்த நோக்கத்திற்காக அவர்கள் வகித்து வந்த பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள்?.
வேறு எந்த பொறுப்பில் நியமனம் செய்வதற்காக அவர்கள் விடுவிக்கப்பட்டார்களா? என்பதெல்லாம் புலப்படாத விஷயமாகவே இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக பாஜக தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணாமலை கட்சியிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் விலகி, தனித்து ஒரு இயக்கத்தைத் துவக்கி, அதை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வெவ்வேறு இடங்களில் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். தமிழக பாஜகவில் ஏற்கனவே முன்னணித் தலைவர்களாக இருந்தவர்கள் சிலர் அண்ணாமலை பக்கம் நகர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதற்கு முன்னதாக, தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே தான் வகித்து வந்த ஆளுநர் பொறுப்பில் இருந்து தானாகவே பதவியை விலகியவர்.
திரும்பத் திரும்ப சில முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருக்கு தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பு மீண்டும் கிடைக்குமா என்பது பற்றி ஒரு செய்தி சிலரால் பரப்பப்படுகிறது.
அதே சமயத்தில் தமிழக பாஜகவின் தற்போதைய தலைவரான நயினார் நாகேந்திரன் குறித்து, அவர் தற்போது வகித்து வரும் பதவியிலிருந்து விலக்கப்படலாம் என்றும் சில செய்திகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
எப்படி அதிமுகவில் உள்ள வெவ்வேறு அணிகள் முக்கியத்துவப்படுத்தி பார்க்கப்படுகிறதோ, அதே மாதிரி தமிழக பாஜகவிலும் வெவ்வேறு அணிகள் வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்திருக்கிறார்களா காங்கிரஸை போலவே?
தவெக தலைமை பொறுப்பில் விஜய் இருந்தபோதே விக்கிரவாண்டியில் நடந்த முதல் கூட்டத்திலேயே பாஜக குறித்து கொள்கை எதிரி என்று விமர்சித்தவர்.
அதோடு நிற்காமல் திமுகவுக்கும் பாஜகவுக்கும் கள்ளக் கூட்டணி இருக்கிறது என்பதை முதற் கூட்டத்தின் பரப்புரையிலிருந்து தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.
அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில், ஒருபடி மேலே போய், டெல்லியில் உள்ள திமுகவுக்குப் பெயர்தான் பாஜக என்றும் தமிழகத்தில் உள்ள பாஜகவுக்குப் பெயர்தான் திமுக என்றும் சொல்கிற அளவுக்குப் போனார்.
முதல்வர் விஜய்யின் இந்த விதமான தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உரிய பதிலை இதுவரை பாஜக தலைமை தரவில்லை.
அதே மாதிரி, விஜய்யின் குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை திமுக தலைமையும் தரவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுவதற்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் தடையாக இருக்கிறார் என்பதை ஏற்கனவே தவெக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழக பாஜக யாரை எதிர்த்து களம் காண்கிறது? ஒரு காலகட்டத்தில் திராவிட இயக்கத்தையே எதிர்த்து திராவிடத்தை வீழ்த்துவோம் என்பதை முழக்கமாக முன்வைத்த பாஜக தற்போது திராவிட இயக்கங்கள் குறித்த விமர்சனத்தை இப்போது செய்வதில்லை.
அதற்கு மாறாக தமிழக முதல்வரான விஜய் குறித்த ஒரு விமர்சனத்தை செய்தபடியே இருக்கிறது.
இப்படியா சூழலில், தமிழக பாஜகவின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? ஏற்கனவே நான்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியைத் தக்க வைத்தபடி நின்று கொண்டிருக்கிறது.
இந்த அளவுக்கு தமிழக பாஜக சரிந்து போனதற்கு யார் காரணம்?
ஏன் இந்த அளவுக்குச் சரிந்திருக்கிறோம் என்று யோசித்து, பாஜக தலைமை என்ன நகர்வை முன்னெடுக்கப் போகிறது?
– லியோ
