இன்று மனித குலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்று குப்பை மேலாண்மை.
மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் மற்றும் நவீன நுகர்வோர் கலாச்சாரம் ஆகியவை காரணமாக உலக அளவில் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முறையான குப்பை மேலாண்மை இல்லாவிடில் அது நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதோடு ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
கழிவுகள் உருவாகும் இடத்தில் இருந்து அவற்றை சேகரித்து, பிரித்து மறு சுழற்சி செய்து இறுதியாக சுற்றுப்புறத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அளிக்கும் ஒரு ஒட்டுமொத்த செயல் முறையை கொண்டதே குப்பை மேலாண்மை.
சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக அளவில் 3R கொள்கை பின்பற்றப்படுகிறது.
முதலாவது Reduce-குறைத்தல். கழிவுகள் உருவாவதை கட்டுப்படுத்துதல்.
இரண்டாவது Re-use-மறு பயன்பாடு. பொருட்களைத் தூக்கி எறியாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல்.
மூன்றாவது Re-cycle பயன்படுத்திய கழிவுப் பொருட்களைப் புதிய பொருட்களாக மாற்றுதல்.
தமிழகத்தில் இதனை – பல்வேறு உத்திகள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் துணை கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
சமையலறைக் கழிவுகளான காய்கறி, பழ தோல்கள்
எஞ்சிய உணவு ஆகியவை மக்கும் குப்பைகள் எனவும் நெகிழி, காகிதம், கண்ணாடி உலோகங்கள் மற்றும் துணிகள் ஆகியவை மக்காத குப்பைகள் எனவும் காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் மற்றும் மின்னணு கழிவுகள் ஆகியவை ஆபத்தான கழிவுகள் எனவும் தரம் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
திருச்சி, கோவை, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் குப்பை மேலாண்மையில் முன்னிலை வகிக்கின்றன.
திருச்சிராப் பள்ளி:
தேசிய அளவிலான தூய்மை நகரங்களின் தரவரிசையில் தமிழக அளவில் தொடர்ந்து திருச்சி மாவட்டம் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் ஊரகப் பகுதிகளில் தீவிர தூய்மை பிரச்சாரம் மூலம் 250க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இருந்த நூற்றுக்கணக்கான குப்பைக் கிடங்குகள் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிப்பதில் இந்த மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
கோயம்புத்தூர்:
இம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பும் மிக அதிகம்.
இதன் மதுக்கரை நகராட்சி, குப்பைகளை அதன் உற்பத்தி இடத்திலேயே நூறு சதவீதம் தரம் பிரித்து வாங்குவதில் உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்ட் ஆலைகளுக்கு எரியூட்டலாக அனுப்பப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகின்றன.
மேலும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து, ஜீரோ வேஸ்ட் தொழில் பூங்காக்கள் மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டங்களும் இங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
சென்னை:
அதிக அளவில் குப்பைகள் உருவாகும் இம் மாவட்டத்தில், நவீன bio-mining தொழிநுட்பம் மூலம் பழைய குப்பைக் கிடங்குகள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.
பல வருடங்களாக குவிந்து கிடந்த பெருங்குடி குப்பைக் கிடங்கின் பெரும் பகுதி இத்தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக தூய்மைப்படுத்தப் பட்டுள்ளன.
இங்கு அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சி செய்யப்பட்டு நாற்காலிகள், பலகை போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றப்பட்டு புதிய வடிவம் பெறுகின்றன.
செங்கல்பட்டு:
இம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் கழிவு மேலாண்மை மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் கீழ், நிலையான குப்பை மேலாண்மை முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறு சூழற்சி செய்யும் மையங்களும் பசுமைக் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகளும் இங்கு பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றன.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக விளங்குகிறது விருதுநகர் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள குப்பை வங்கி.
வணிகத் தொழில் முனைவோர் குழுமத்தைச் சேர்ந்த பெண்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தன்னார்வலர்கள் மூலம் குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து, மறுசுழற்சி செய்யும் பணியினை செவ்வனே செய்து வருகிறது.
சத்தமில்லா ஒரு புரட்சி மூலம் விருதுநகரை, குப்பையில்லா பகுதியாக மாற்றி வருகிறது இந்த அமைப்பு.
2018 ஆம் ஆண்டு 20,000 பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து நமது ஊர் நமது கடமை என்ற பெயரில் முதன் முதலில் குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இந்த அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் குறைந்த நேரத்தில் பல லட்சம் குப்பைகளை கையாளுவது, மாணவர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடத்துவது, தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பது,
குப்பை சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, உரங்கள் தயாரிக்க உதவுவது போன்ற எண்ணற்ற பணிகளையும் செய்து வருகிறது இக்குப்பை வங்கி அமைப்பு.
வீட்டு வளாகத்தில் தொடங்கிய இவர்களின் பணி, இன்று பல எல்லைகளை கடந்து விரிவடைந்துள்ளது.
மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்குமாயின், தூய்மை இந்தியா ஒளிர்விடும் காலம் தொலைவில் இல்லை.
S. வாணி
