நாடு, மொழி, இனம் என பல்வேறு எல்லைகளைக் கடந்து உலகம் ஒரே குடையின் கீழ் பறந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் வேளையிலும், குறிப்பிட்ட துறைகளில் மிளிர்வதற்கு, அழகும் நிறமுமே அடிப்படை தேவையாக உள்ளது.
இத்தகைய ஒன்றுதான் ஊடகத்துறை. அதிலும் வெள்ளை நிறமும் வசீகரிக்கும் தோற்றமும் உள்ள பெண்கள் மட்டுமே இதில் பிரகாசிக்க முடியும் என்ற பொதுவான விதி ஒன்று, இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாதத்தை எல்லாம் முறியடித்து வெற்றியின் உச்சம் தொட்டிருக்கிறார் அமெரிக்காவில் வாழும் கறுப்பின பெண்ணான ஓபரா வின்ஃப்ரே.
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஊடக ஆளுமை, அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத் திறமை கொண்டவராக இவர் விளங்குகிறார்.
கறுப்பு நிறம், முரட்டுத்தனமான உடல்வாகு, பொலி வில்லாத முகம் என பல குறைகளை வைத்துக்கொண்டு இந்தத் துறையில் எப்படி சாதிக்க முடியும் என ஆரம்ப காலங்களில் பலரும் இவரை பார்த்து கேலி பேசி இருக்கின்றனர்.
அப்பொழுதெல்லாம் என் பலம் என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும் என அவர்களுக்கு பதில் சொன்ன ஓப்ரா, தான் சொன்னது போலவே ஜெயித்தும் காட்டியிருக்கிறார்.
தனது உழைப்பாலும் தனித்துவமான பேச்சு திறனாலும் உலக அளவில் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இவர் திகழ்கிறார்.
இந்த நிலையை அடைவதற்கு நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது எனக் கூறும் இவர், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.
தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிரிவின் காரணமாக பாட்டியிடம் வளர்ந்தவருக்கு சிறு வயது வாழ்க்கை, வறுமையையும் பல இன்னல்களை-யுமே பெற்று தந்தது.
அணிவதற்கு ஆடை இல்லாமல் சாக்கு துணியை போர்த்தியபடியே நாட்கள் நகர்ந்தன. பாட்டியின் இறப்பிற்கு பின் மறுபடியும் தாய் வீட்டிற்கு வந்தவருக்கு மிகவும் மோசமான கொடுமைகள் அரங்கேறின.
உறவினர்கள் சிலரால் தன் வீட்டிலேயே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இதன் காரணமாக ஆண் குழந்தை ஒன்று பிறந்து சில வாரங்களிலேயே இறந்தும் போனது. இதன்பின் தன் தந்தையின் வீட்டிற்கு அனுப்பப்பட்டவருக்கு அவரின் வாழ்க்கைக்கான கதவுகள் திறக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் மிகுந்த பள்ளி, அவருக்கு ஆங்கில அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டியது.
வெள்ளை நிறம் தான் அழகின் இலக்கணம் என்று நினைத்திருந்தவருக்கு அன்பு, கருணை, திறமை என்ற மூன்றும் தான் ஒரு பெண்ணின் அழகுக்கான குறியீடுகள் என்றும் புரிய வைத்தது.
பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்தார் ஓபரா. இதன்பிறகு தன் தோற்றத்தை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
மாணவிகளுக்கான அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றதன் மூலம் உருவ கேலிகளுக்கு பதில் கொடுத்தார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட உள்ளூர் வானொலி நிலையம், தங்களது செய்திப் பிரிவில் இவரை பணி அமர்த்தியது.
சக மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், ஆபத்துகள், எதிர்பாரா விபத்துகளில் பலியாகும் எண்ணற்ற உயிர்கள் என பல செய்திகளையும், உணர்வுகளை வெளிக் காட்டாமல் தொகுத்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து சிகாகோவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில், காலை நேர “டாக் ஷோ” ஒன்றை தொகுத்தளிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மக்களிடம் அதிகம் பிரபலமாகாத அந்த நிகழ்ச்சியை ஓபரா நடத்த ஆரம்பித்தார்.
அதில் கலந்து கொள்ள வந்த மனிதர்களின் கருத்துகளும் குமுறல்களும் மக்கள் மனதில் ஆழப் பதிந்தன.
இதன் விளைவாக, ப்ரைம் டைமில் முதலிடத்தைப் பிடித்தது இந்த நிகழ்ச்சி.
அதுவரை அரை மணி நேரம் என்றிருந்தது, ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு The Oprah Winfrey Show என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
1986 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, உலகெங்கிலும் புகழ்பெற்றது.
மேலும் இது அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக உயர்ந்த தரவரிசையையும் பெற்றது.
சாதாரண மனிதர்கள் முதல் உலகத் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வரை, பலரும் இதில் பங்கு பெற்றனர்.
மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நேயர்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியது, இதன் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
இது மட்டுமன்றி அந்த காலகட்டங்களில் ஒரு நடிகையாகவும் பரிமளித்தார் ஓபரா.
1985-ம் ஆண்டு The Colour Purple என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
தொடர்ந்து பல தளங்களிலும் தன்னை முன்னிறுத்தி வருகிற ஒப்ரா, தற்போது Harpo productions என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் Oprah Winfrey Network என்ற தொலைக்காட்சி அலைவரிசையையும் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார்.
மேலும் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக Oprahs Book Club என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.
நாட்டு நலப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் இவர், தன் சீரிய பங்களிப்பிற்காக அமெரிக்காவின் மிக உயரிய குடிமை விருதைப் பெற்றுள்ளார்.
வறுமை, பாகுபாடு என பல்வேறு போராட்டங்களை வென்று அனைவரும் வியக்கும் ஒரு சகாப்தமாக விளங்கும் ஓபரா வின்ஃப்ரே உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்
S. வாணி
