பிங்க் ரிப்பன்: விழிப்புணர்வு மாதத்தின் வரலாறும் சவால்களும்!

புற்றுநோய் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் சுமார் 2.3 லட்சத்துக்கும் அதிகமான புதிய மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகின்றன.

இது இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் அனைத்து வகையான புற்றுநோய்கள் சுமார் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.

உலக அளவில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 23 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் உலகளவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாட்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முன்கூட்டியே அதைக் கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தவும் பல்வேறு முன்னெடுப்புகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிங்க் ரிப்பன் வரலாறு :

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் (Breast Cancer Awareness Month) முதன்முதலில் 1985ஆம் ஆண்டு அமெரிக்க புற்றுநோய் சங்கம் மற்றும் இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

உலகளவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நாடா மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து உலகெங்கும் இந்த இயக்கத்தை விரிவுபடுத்தினர்.

பின்னர், இது உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது மாறியது.

இதன் முக்கிய நோக்கங்கள் :

முன்கூட்டியே கண்டறிதல் (Early Detection): மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

இதற்கான பரிசோதனைகள் (மேமோகிராம் போன்றவை) மற்றும் சுய பரிசோதனை குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.

இது பற்றிய பயம் மற்றும் தயக்கத்தைப் போக்கி இது குறித்து சமூகத்தில் வெளிப்படையாக பேசவும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி நாடவும் ஊக்கமளிப்பது தான் இதன் வேலை.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்களுக்குத் தேவையான மன தைரியம், மறுவாழ்வு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது ஆகும்.

மேலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் நவீன சிகிச்சை முறைகளுக்கான மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த நிதி திரட்டுவது இதன் மற்றொரு முக்கிய பணியாகும் பார்க்கப்படுகிறது.

ஆய்வுகள் மற்றும் தரவுகள் கூறுவது என்ன?

உலக அளவில் பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து, மேமோகிராம் (Mammogram) போன்ற பரிசோதனைகளைச் செய்து கொள்ளும் ஆர்வம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம் முந்தைய ஆண்டுகளை விட ஆரம்ப கட்டத்திலேயே (Localized Stage) புற்றுநோயைக் கண்டறியும் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

புற்றுநோய் விழிப்புணர்வு காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும்போது அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 5 ஆண்டு உயிர் வாழ்வு விகிதம் மிக அதிகமாக உள்ளது. இதனால் உலகளவில் புற்றுநோய் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

தற்போது மார்பகப் புற்றுநோய் குறித்த அச்சம் மற்றும் தயக்கம் பெருமளவில் குறைந்து, வெளிப்படையாகப் பேசுவதுடன் சுய பரிசோதனை (Self-examination) செய்து கொள்ளும் வழக்கம் பெண்களிடையே அதிகரித்துள்ளது.

அதன் சவால்கள் என்னவென்றால் கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இன்னும் முழுமையான விழிப்புணர்வு சென்றடையாததும், பரிசோதனை வசதிகள் தாமதமாவதும் சவாலாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இளம் வயதினரிடையே யும் அதன் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால், அனைத்து வயதினரிடையேயும் விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

பாதிப்புகள் அதிகரிக்கக் காரணங்கள் என்ன:

o உடல் உழைப்பின்மை, துரித உணவுகள் (Junk foods) மற்றும் அதிகப்படியான கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்பருமன் (Obesity).

குறிப்பாக, மாதவிடாய் நின்ற பிறகு உடலில் கொழுப்பு திசுக்கள் மூலம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, இது புற்றுநோய் செல்கள் வளர வழிவகுக்கிறது.

o தாமதமான திருமணம், குறிப்பிட்ட வயதுக்குப் பின் முதல் குழந்தை பெற்றுக்கொள்வது, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் நவீன வாழ்க்கைச் சூழல் போன்ற காரணங்களால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள்.

o மது அருந்தும் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் போன்ற ஆபத்தான பழக்கவழக்கங்கள் மார்பகப் புற்றுநோயின் தாக்கத்தை உயர்த்துகின்றன.

பரம்பரை மரபணு மாற்றங்கள் (BRCA1, BRCA2 போன்ற ஜீன் மியூட்டேஷன்கள்) மற்றும் நாம் வாழும் சூழலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களின் வெளிப்பாடும் இந்த நோய் அதிகரிக்க காரணமாகின்றன.

விழிப்புணர்வும் பரிசோதனைகளும்:

தற்போது உள்ள பெண்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது, ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே பெண் மருத்துவரை அணுகுவது பெரும்பாலான பெண்களிடையே பார்க்க முடிகிறது.

முன்னெல்லாம் இதுபோன்ற பாதிப்புகளை கண்டறிய படாமல் மறைந்து போயின.

ஆனால் தற்போது மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் (Mammogram) மற்றும் விழிப்புணர்வு காரணமாக ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்து விடுகின்றனர்.

மார்பகப் புற்றுநோய் என்பது அச்சப்பட வேண்டிய ஒன்று இல்லை , ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் வெல்லக்கூடிய ஒரு நோயே.

பயத்தையும் தயக்கத்தையும் தவிர்த்து முறையான விழிப்புணர்வு, சீரான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தொடர்ச்சியான சுய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

சரியான நேரத்தில் மருத்துவ வழிகாட்டலைப் பெறுவதன் மூலம் இந்த நோயின் பிடியிலிருந்து பெண்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வியலையும் முழுமையாக பாதுகாக்க முடியும்.

– யாழினி

vels
You might also like