முன்பு சர்க்கஸில் அபாயகரமான ஒரு நிகழ்வாக மரணக்கிணறு என்ற ஒரு காட்சி இடம்பெறும்.
ஆழமான கிணற்றில், அதன் அடியில் இருந்து பைக்கை ஓட்டி கிணற்றின் விளிம்புக்கு வந்து, மறுபடியும் அந்த கிணற்றின் அடிப்பகுதிக்குச் சென்று பைக்கை நிறுத்துவார் அந்த ஓட்டுநர்.
இப்படி பலமுறை மேல் விளிம்புக்கு வந்து கீழே போவது வரை, படு பீதியடைய வைக்கிற விதத்தில் அத்தகைய நிகழ்வு சர்க்கஸில் ஒரு காட்சியாகத்தான் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த நிகழ்வுகள் எல்லாம் சர்க்கஸில் இடம்பெறாத நிலையில், அதேவிதமான சாகசத்தை சென்னை போன்ற பெருநகரங்களில் பொது இடங்களிலேயே பார்க்க முடிகிறது.
குறிப்பாக, சனிக்கிழமை இரவுகளில் இத்தகைய பைக் ரேஸ்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் நன்கு வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.
அவர்கள் பயன்படுத்தும் பைக்குகளும் மிகவும் விலை உயர்ந்தவை.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சாகசங்களில் ஈடுபடக்கூடியவர்கள் அடிபட்டு காயப்பட்டிருக்கிறார்கள். சிலர் இறந்திருக்கிறார்கள்.
அண்மையில் மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் இப்படிப்பட்ட பைக் ரேஸை பொதுவெளியில் அதிரடியான ஒரு சத்தத்துடன் பைக் ரேசில் கலந்து கொண்ட இளைஞர், அதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
இது செய்தியாக வெளிவந்ததையடுத்து, சென்னையில் இத்தகைய பைக் ரேஸில் ஈடுபட்ட சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டாக வேண்டும். அடுத்தது இத்தகைய ரேஸ்களில் கலந்து கொள்கிறவர்கள் அவர்களுடைய அன்றைய விருப்பப்படி சுமார் தலா, ரூ.25,000 இருந்து 30,000 வரை பணம் கட்டுகிறார்கள்.
இப்படி பணம் கட்டி சுமார் 20 இளைஞர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள்
ஒரு குறிப்பிட்ட ஒரு எல்லையை அவர்கள் அடைந்த பிறகு, எவ்வளவு விரைவாக அடைகிறார்களோ அந்த மொத்த பணமும் அந்த இளைஞருக்கு போய்ச் சேரும்.
பிறகு வெற்றியடைந்த இளைஞர், அதில் பங்கு பெற்ற இளைஞர்களுக்கு எல்லாருக்கும் ஒரு இரவு நேர விருந்து தடபுடலாக வைப்பார். இதோடு அந்த பைக் ரேஸ் அனுபவம் நிறைவு பெறும்.
இப்படிப்பட்ட பைக் ரேஸ்கள், அதிமுக, திமுக, என ஆட்சிகள் மாறிய பிறகும், தொடர்ந்து நடந்து வந்து தற்போது தவெக ஆட்சியிலும் நடந்து சமீபத்தில் அதன் எல்லை மீறிய நிலையில் ஒரு இளைஞர் உயிரிழப்பதும் நடந்திருக்கிறது.
இதில் ஈடுபடுகிறவர்கள் பலர் மிக வசதி படைத்தவர்கள் என்பதோடு அதிகார மையங்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
சிலர் நீதித்துறை, காவல்துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளின் வாரிசுகளாகவும் இருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.
இத்தகைய பைக் ரேஸ்கள் அது சம்பந்தப்பட்ட அந்த ரேஸில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அந்த பைக்கை அதிவேகமாக அவர்கள் ஓட்டி வரும்போது, இடையில் சாதாரண வேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அவர்கள் விபத்தில் சிக்கும் அளவுக்கும் பல சந்தர்ப்பங்களில் சென்றிருப்பதையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.
இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், சென்னை போன்ற பெருநகரங்களில் சனிக்கிழமை இரவுகளில் நடக்கும் இத்தகைய பைக் ரேஸ்களைத் தடுத்து நிறுத்த முடியும்.
– லியோ