கண்ணதாசன் 100: பாடல் -7
கவியரசர் கண்ணதாசன் எழுதிய எத்தனையோ வரிகள், இன்று இருக்கிற மோசமான அரசியல் சூழலை வெளிப்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கின்றன.
1970-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் ‘கடவுள் ஏன் கல்லானார்’ என்ற துவங்கும் பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன்.
படத்தில், சூழ்ச்சியால் சிறைக்குள் தள்ளப்பட்ட நிலையில், அந்த சிறை வளாகத்திலிருந்து எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்திருக்கும் அந்தப் பாடல் காட்சி.
பாடலில் இடம்பெற்றுள்ள நறுக்கென்ற இந்த வரிகளைப் பாருங்கள் இன்றைய அரசியலுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பது புலப்படும்.
சதிச் செயல் செய்தவன் புத்திசாலி – அதை
சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்.
பொதுவாக மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்கிறவர்களுக்கு பெரும்பாலும் உண்மையைச் சொல்பவர்கள் சதிகார்களாகத்தான் தெரிகிறார்கள்.
அப்படி உணரப்படுவதன் மூலமே அப்படி உண்மையைச் சொல்பவர்கள் மீது வெவ்வேறு வழக்குகள் பாய்கின்றன.
உண்மையைச் சொல்வதனாலேயே அந்த நபர் ஒரு குற்றவாளியைப்போல பார்க்கப்படுகிறார்.
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் என்று எளிமையாக நிறைவடைகிற இந்தப் பாடலில் ஆண்டவன் என்ற சொல், ஆண்டவனை மட்டும் குறிப்பதல்ல, ஆண்டவர்களையும் குறிக்கும் என்பதுதான் இந்த வரிக்குப் பின்னிருக்கிற உள் அர்த்தம்.
இதே திரைப்படப் பாடலில் கவியரசர் எழுதிய ஒரு மகத்தான வரி நல்லவர்கள் நல்லவர்களாக இருந்தால் எதை இழப்பார்கள் என்பதைப் பற்றி கச்சிதமாக குறிப்பிடுகிறதைப் பாருங்கள்.
‘இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்’..!