மக்களாட்சியின் மாண்பும் இன்றைய தேவையும்!

சர்வதேச மக்களாட்சி தினம்: செப்டம்பர் 15

மக்களாட்சி என்பது வெறும் வாக்களிப்பதோடு முடிந்துவிடுவதல்ல; அது மக்களின் குரல் ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்று சேர்வதற்கான ஒரு தொடர் பாலமாகும்.

மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என எல்லாவற்றையும்விட மக்களாட்சி சிறப்பானது என்பதாலேயே, அநேக உலக நாடுகளில் மக்களாட்சி அமலில் உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயலாற்றுவதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து, வறுமை நீங்கி, அறியாமை விலகி, சமத்துவத்தோடு வாழ்வதே மக்களாட்சியின் நோக்கம்.

மக்களாட்சியில் ஆயிரம் குறைபாடுகள், குழப்பங்கள் இருந்தாலும், மாண்புமிக்க மக்களாட்சி முறை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்பதைச் சுட்டிக் காட்டவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் நாள் அனைத்துலக மக்களாட்சி தினமாக ஐக்கிய நாடுகள் அவையால் (UN) கொண்டாடப்படுகிறது.

குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தின் மீதான அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் இந்த நாள் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா. சபையின் வரலாற்றுத் தீர்மானம் :

மக்களாட்சியின் உன்னதக் கொள்கைகளை உலகறியச் செய்யும் நோக்கில், கடந்த 2007-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் இன்று சுமார் 192 நாடுகளுக்கும் மேலாக இந்தச் சர்வதேச மக்களாட்சி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசாங்கங்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் இது ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது.

2026 சர்வதேச மக்களாட்சி தினத்தின் மையக்ககருத்து (Theme)

இந்த ஆண்டிற்கான (2026) ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வக் கருத்துருவாகப் பின்வருவது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

“Raising Hands and Voices – Fostering Agency and Ownership through Deliberative Democracy” (கைகளை உயர்த்துதல் மற்றும் குரல்களை எழுப்புதல் – ஆலோசனை அடிப்படையிலான மக்களாட்சி மூலம் பங்கேற்பு உரிமையும் உரிமையுணர்வும் வளர்த்தல்)

இந்தத் தீம், குடிமக்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்காமல், நாட்டின் கொள்கை முடிவுகளில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஆலோசனை அடிப்படையிலான மக்களாட்சியின் முக்கியத்துவம்

பாரம்பரிய மக்களாட்சி முறையில் தேர்தல்கள் மட்டுமே பிரதானமாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இன்றைய நவீன உலகில் கலந்தாலோசனை மற்றும் விவாதங்கள் அடிப்படையிலான மக்களாட்சியே (Deliberative Democracy) உண்மையான மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசவும், விவாதிக்கவும், அரசின் திட்டங்களில் நேரடிப் பங்களிப்பை வழங்கவும் இது வழிவகை செய்கிறது.

மக்களாட்சியின் மாண்பு :

உலகின் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டடுள்ளது.

ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றியது.

உலகில் ஜனநாயகம் முதன்முதலாக துளிர் விட ஆரம்பித்தது கி. மு 600 ம் ஆண்டில் இந்தியாவிலும், மொசபெடாமியாவிலும் தான்.

5 ம் நூற்றாண்டில் கிரேக்க ஏதென்ஸ் நகரில் ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்.

Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன.

நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். 20 ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே தற்போது பின்பற்றப்படுகிறது.

ஐ.நா.,வின் கணக்குப்படி இன்றைய காலக்கட்டத்தில் 201 நாடுகள் உள்ளன. இவற்றில் 7ல் முழுமையான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.

29 நாடுகளில் அரசியலமைப்பு சட்ட முறை கொண்ட நாடாளுமன்ற அவை இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையும், 9 நாடுகளில் அரசியல் அமைப்பு சட்ட முறை கொண்ட நாடாளுமன்றத்துடன் கூடிய சர்வாதிகார ஆட்சி முறையும், 7 நாடுகளில் ஒரு கட்சி ஆட்சியும், 62 நாடுகளில் நாடாளுமன்ற குடியரசுடன் கூடிய நிர்வாக அதிபர் ஆட்சிமுறையும், 32 நாடுகளில் அதிபர் குடியரசு ஆட்சி முறையும், 40 நாடுகளில் நாடாளுமன்ற குடியரசுடன் கூடிய சடங்கு அதிபர் ஆட்சி முறையும் பின்பற்றப்படுகின்றன.

மொத்தத்தில் 60 சதவிகித நாடுகளில் பல்வேறு வடிவிலான ஜனநாயக முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இப்படியான சூழலில் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளை, தத்துவங்களை நிலை நாட்ட, காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

ஏனெனில், அது தாய்நாட்டிற்குச் செய்யும் கடமை. தானாய் வளர்வதில்லை நற்பயிர். பயிர் வளர நாம் விதைக்க வேண்டும், உழைக்க வேண்டும். பதர் விளைய விதைக்கத் தேவையில்லை.

மொத்தத்தில் மக்களாட்சி என்பது ஒரு நாளின் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது நாள்தோறும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை முறை.

சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் மக்களாட்சியே ஒரு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

இந்தச் சர்வதேச மக்களாட்சி நாளில், குடிமக்களாகிய நாம் அனைவரும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியேற்போம்.

  • நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
You might also like