சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியவை:
“கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு முறை கூட ஆளுநர் முழுமையாக வாசித்தது இல்லை, பல திருத்தங்களை செய்துள்ளனர்.
ஆனால், இந்த முறை அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஓர் எழுத்து, ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார்.
இதிலிருந்தே இந்த அரசுக்கும், பாஜகவுக்கும் இணக்கமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்களை சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அறிவிப்புகளை எந்தக் காலத்தில் நிறைவேற்றப்போகிறார்கள் என்பது குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறும் என நினைத்தோம். ஆனால், அது ஏமாற்றம் அளிக்கிறது.
தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் ட்ரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதைதான் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதைக் காட்டும் முன்னோட்டமாக சமீபத்தில் வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
காப்பி – பேஸ்ட் அரசு:
இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியுள்ளது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் அறிவிக்கும் அனைத்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
“தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார்.
ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
குழந்தைகள், மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகள் பற்றி சொல்ல முடியலையேன்னு எங்க தலைவரைப் பார்த்து அப்போது கூறிய முதல்வர் விஜய், இப்போது எங்கு சென்றார்?
‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கிவிட்டு புதிய பெயரை வைத்துள்ளது தவெக அரசு.
‘காப்பி-பேஸ்ட்’, ‘ஸ்டிக்கர் ஒட்டும்’ அரசாக மட்டுமே தவெக அரசு உள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளார்கள்.
தவெக அரசின் திட்டங்கள், முந்தைய அரசின் நீட்சி தான்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் ஆளுநர் உரையில் இல்லை.
முந்தைய அரசின் திட்டங்களை முடக்கினால் சும்மா இருக்க மாட்டோம்” என்று அனல் தெறிக்கப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
– வைஷ்ணவி பாலு