நாளை கூடுகிறது தவெக அரசின் முதல் சட்டப்பேரவை!

த.வெ.க. அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் நாளை (18/06/2026) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார்.

இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணியளவில் ஆளுநர் அர்லேகர் காரில் புறப்படுகிறார்.

தலைமைச் செயலகத்தில் அவரை, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்கிறார்.

அதன்பின்னர், ஆளுநர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்பட்டு, அவர் தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குகிறார். ஆளுநர் சுமார் 1 மணி நேரம் உரையாற்றுவார் என்று தெரிகிறது.

அதன்பின்னர், ஆளுநரின் உரையை, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.

அப்போது ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஷஜன் சிங் சவான் உடனிருப்பார்.

கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று ஆளுநர் அர்லேகர் புறப்பட்டுச் செல்வார்.

அதன்பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

அநேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

– வைஷ்ணவி பாலு

You might also like