இயற்கையின் அரவணைப்பில், புத்துணர்ச்சியையும் மன அமைதியையும் தரும் ஒரு இனிய பயண அனுபவத்தைத் தருவது கோடைகால சுற்றுலா. நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட, சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
கடும் வெப்பத்திலிருந்து விடுபட்டு குடும்பத்துடன் பொழுதை கழிக்கவும், எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள் குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று வரவும் இது சிறந்த தருணமாகும்.
புதிய இடங்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள் ஆகியவை நம் அறிவை விரிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நீங்காத நினைவுகளையும் தரும்.
குழுவாகச் செல்லும்போது திட்டமிடல், பாதுகாப்பு, போக்குவரத்து ஆகியவற்றை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
இத்தகைய பயணங்களுக்கு கை கொடுப்பதற்கென பல பயண செயலிகள் (App) நமக்கு உதவுகின்றன.
முன்பதிவு, வழித்தடங்கள், முன்னேற்பாடுகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு செயலியை தேவைக்கு ஏற்ப பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tripit App:
நாம் தங்க விரும்பும் ஹோட்டல், பயணம் செய்ய இருக்கும் போக்குவரத்து நிறுவனம் போன்றவற்றின் முழு விவரங்கள் புகைப்படங்களுடன் இதில் கிடைக்கும்.
இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் சிறந்த பயணத் திட்டமிடல் செயலி இதுவாகும்.
மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் இது தானாகவே பயணத் திட்டத்தை உருவாக்கி ஆஃப்லைனிலும் பார்க்க வழிவகை செய்கிறது.
இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலும் முழு பயண விவரங்களையும் App Store மூலம் கைபேசியில் பார்க்க முடியும்.
விமான தாமதம், செல்லும் வழிகளில் மாற்றம் போன்ற தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.
கூகுள் கேலண்டருடன் இணைந்து பயணத்தின்போது முக்கிய நிகழ்ச்சிகளை நினைவூட்டுவது இதன் சிறப்பம்சமாகும்.
பயண மேலாண்மைக்கான செயலிகளில் எல்லோராலும் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இது விளங்குகிறது.
Travel Calculator App:

பயணத்தின் பட்ஜெட் பிளானர் என்ற வர்ணிக்கப்படும் இந்த செயலியின் மூலம், செல்லும் ஊருக்கான பயணச் செலவு, போக்குவரத்து செலவு, எரிபொருள் தேவை மற்றும் பயண நேரம் ஆகியவற்றைத் துல்லியமாக தயாரித்து பெற முடியும்.
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கையில் ஃபாரின் கரன்சி தீர்ந்து விட்டால், இந்திய வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாற்றிக் கொள்ளவும் இது உதவும்.
Trip Advisor App:
நாம் போக வேண்டிய இடத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிட்டால் போதுமானது. அங்கே அப்போது உள்ள பருவநிலையை சுட்டிக்காட்டி, அதற்கு தகுந்தார் போல நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலைக் கொடுத்து விடும்.
நம்முடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப விமான முன்பதிவு, தங்குமிடங்கள் என ஒப்பீடுகள் செய்து பரிந்துரைகளையும் அளிக்கும்.
புகைப்படங்களுடன் பயணக் கட்டுரைகள் மற்றும் பயணிகளின் ஆலோசனைகளையும் பெறுவதன் மூலம் முழு பயணத்தையும் திட்டமிட முடியும்.
இந்த செயலி சரியான முடிவை எடுக்கவும், மலிவு விலையில் சிறந்த உணவகங்களை கண்டறியவும் நம்பகமான தகவல்களைப் பெறவும் உதவுகிறது.
Incredible India app:
இது இந்திய சுற்றுலா அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் செயலி ஆகும்.
உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம், யோகா மற்றும் ஆரோக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களை ஒரே இடத்தில் வழிகாட்டும் ஒரு விரிவான தளமாகும்.
பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிடவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்த செயலி மூலம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா சேவை வழங்குனர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களைத் தொடர்பு கொள்ளலாம். பயணிகளின் நவீன தேவைக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Pack Point App:

நாம் எங்கு செல்லவிருக்கிறோம், அது தொழில் பயணமா, குடும்பப் பயணமா என்று செயலியில் உள்ளீடு தந்தால், குளிர், வெயில் என்று அங்கு நிலவும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப என்னென்ன வகையான ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்,
அங்குள்ள வசதி எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் எத்தனை ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வரை அனைத்தும் பட்டியலிட்டு கொடுக்கும் செயலி இதுவாகும்.
பயணத்தின் போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று Pack Point நமக்கு தெரிவிக்கும்.
இந்த செயலிகளின் துணை கொண்டு இந்தக் கோடைக்கால சுற்றுலா பயணத்தை இனிய அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும்.
– எஸ். வாணி