வான்காவின் வரலாறு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்!

நூல் விமர்சனம்:

இன்று வான்காவின் ஓவிய நகல்களே மில்லியன் டாலர் விலை போகும் சூழலில் அவரின் படைப்பு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வை, அவர் பட்ட பாடுகளை, அவர் மீதான சமூகத்தின் பார்வைகளை, முரண்பாடுகளை இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறது நூல்.

வான்கா 1853 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தவர். இந்த புதினத்தை எழுதிய இர்விங் ஸ்டோன் வான்கா பிறந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1903ல் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தவர்.

வான்கா இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதினம் உருவாக்கப்படுகிறது.

காலம், நிலம், வெளிகளைக் கடந்து வான்காவின் வாழ்க்கை குறித்த நிகழ்வுகளை உண்மை தன்மைகளோடு கவித்துவம் கலந்து உன்னத பேரிலக்கியமாக வாசகர்கள் முன் வைத்திருக்கும் இர்விங் ஸ்டோனின் நூலை அதன் இயல்பு மாறாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கே.பி. கூத்தலிங்கம் அவர்கள்.

இன்று உலகமே கொண்டாடும், மேல்தட்டு மக்களின் வரவேற்பறைகளை அலங்கரிக்கும் அரிய படைப்புகளான வான்காவின் ஓவியங்களை வரைந்தபோது அவர் கருகிய ரொட்டி துண்டுகளுக்கும் கரப்பான் பூச்சிகள் ஊறிய சூப்புகளுக்குமே வழியற்றவராக பல நாட்கள் கருங்காப்பிகளோடே வாழ்ந்துமடிந்தார் என்பது வாழ்வின் முரண்.

கடவுளாலும் சாத்தானாலும் வெல்ல முடியாத பெருங்கலைஞர்கள் வாழும் போதே கொண்டாடப்படுவது அத்தனை பேருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பாரதியின் இறுதிப் பயணத்தில் இருந்தவர் பதினான்கு பேர், வான்காவிற்கோ அதில் பாதி ஏழு பேர், அவ்வளவுதான் உலகம்.

வான்காவின் வாழ்வின் மீதான ஏக்கமும், மிக முக்கியமாக ஐந்து பெண்களோடான பயணத்தையும் உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாவதாக ஓவியம் குறித்து… வேறு எந்த சிந்தனைகளுமற்று இது விற்பனையாகுமா, யாராலும் சீந்தபடாமல் போகுமா என்று எக்கவலையுமின்றி சுவாசித்தல் எப்படி தவிர்க்க முடியாததோ அதேபோல் அவனுக்குள் நிகழ்வது.

எந்தெந்த தருணங்களிலெல்லாம் அவன் வாழ்வின் மிகப்பெரும் கலைப் பொக்கிசங்களை உருவாக்கினான் என்பதை பதிவு செய்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக மதம், மனிதர்கள், தேவாலயங்கள் அவர்கள் பின்பற்றும் கட்டுப்பாடான நெகிழ்வுத் தன்மையற்ற நடைமுறைகள் எப்படி எளிய மக்களுக்கு பயனற்றதாக இருக்கிறது என்பதை ஆய்வதாகவும் பயணிக்கும்.

புத்தி பேதலித்து மனம் பிறழ்ந்தவராக மக்களோடும் சமுதாயத்தோடும் ஒன்ற முடியாதவராக மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டவராக, சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டவர்.

வான்காவின் தொடக்க காலத்தில் அவர் எதை முன்னெடுத்துச் செல்லப் போகிறான் என்பது குறித்து தெளிவுகள் ஏதுமின்றி தடுமாற்றத்துடன் பயணிக்கிறான்.

குடும்பத்தின் வழக்கப்படி தந்தையின் வாரிசாக இறைபோதகராக பெல்ஜியத்தின் நிலக்கரி சுரங்க பகுதியில் மக்களுக்கு இறைசெய்தி வழங்கும் பணிக்கு பணிக்கப்படுகிறான்.

தொடக்கத்தில் ஓவியக் கூடங்களில் பணிபுரிந்த போது உர்சுளாவின் அன்பிற்காக ஏங்கி அவன் நிராதரவாக கைவிடப்பட்ட போதும், அதன்பிறகு தனது தாயின் உடன்பிறந்த சகோதரி மகளான கேய் மீதான அன்பின் பொருட்டு அவன் அவமானப்பட்ட போதும், கலைஞன் என்பவன் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்தவன்.

பிரபஞ்ச லயத்தில் இயங்குபவன், செயற்கையான சட்டகங்களுக்குள் பொருந்திப் போவதில்லை என்பதை உணர்த்துகிறார்.

அன்பிற்காக ஏங்கி அலைந்து திரிந்து ஆட்பட்ட துயரங்களை ஐந்து பெண்களோடு பிணைந்திருக்கிறது காலம். விருப்பத்தை நேர்மையாக தெரிவிப்பதிலிருந்து துணிவே ஒரு கலைஞனின் கட்டற்ற நேர்மையை சொல்வதாக இருக்கிறது.

வான்கா வாழ்ந்திருந்த 37 வயதிற்குள் அவன் ஐந்து பெண்கள் மேல் காதல் கொள்கிறான். ஒவ்வொரு கணத்திலும் அவவாய்ப்புகள் குறித்த துயரம் வெளிப்படுகிறது.

உடலிணைவின் இன்ப சுகிப்பு இல்லாமை ஒருவனுடைய கலை ஆற்றலின் மேன்மையான ஊற்றுகளை முற்றிலும் வற்றச்செய்யும். அவனை உயிர்த்துடிப்பு இல்லாததாகவும் ஆக்கும்.

இப்படித்தான் என்று எந்த சட்டகங்களுமின்றி ஐந்து குழந்தைகள் பெற்று வயிற்றிலும் ஒரு கருவை சுமந்திருந்த கிறிஸ்டினா எனும் விலைமாதுவோடு அவனுக்கு அன்பும் குடும்பமும் சாத்தியமாகிறது.

நிபந்தனைகளற்ற அன்பை அவள் மீது பொழிந்தும் அவளின் பழமையான வாழ்விற்கு அவள் திரும்பிச்சென்று நிற்பதை கையாளாகாத தன்மையுடன் கடந்து வருகிறான்.

பிறகு அவனை விட வயதில் மூத்த முதிர்கன்னி மார்க்கவ்விடமிருந்து ஆழமானதொரு நேசம் அவனுக்கு கிடைக்கிறது.

தூரத்திலிருந்து அவனை, அவன் ஓவியங்களை ரசிக்கக் கூடியவள். அவளுடைய குடும்பத்தினரால் வான்காவின் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்பட, குடும்பத்தை விட்டு மீறி வரமுடியாதவள் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள துணிகிறாள்.

விலைமாதர் விடுதியில் அவ்வப்போது அவன் சந்திக்கும் ரேச்சல் என்ற இளநங்கை உடனான காதல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது.

சம உலகின் தாக்குதல், சமூகத்தின் புறக்கணிப்பில் அவள் எப்பொழுதோ விளையாட்டாக கேட்ட அவனுடைய அழகான காதுகளை நறுக்கி அவள் கைகளில் தந்து விடுகிறான். இப்படி உக்கிரமான ஒரு அன்போடு வாழ்வு முழுவதும் நேசத்தைத் தேடி அலைகிறான்.

பெல்ஜியத்தில் மார்க்காஸி எனும் பழமை வாய்ந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் அந்த கிராமமே எலிகளைப் போல பகல் முழுவதும் புதைந்து கிடக்க அவர்களோடு அவர்களாகவே அவனும் கரைந்து போகிறான்.

முன்னுற்றி ஐம்பது அடி ஆழத்தில் வெளி உலகத்தின் எந்த சிறு வெளிச்சமுமின்றி நிமிர்ந்து உட்காரக் கூட இடமற்ற இடத்தில் குந்தாலிகளால் நிலக்கரி தோண்டி எடுக்கும் தொழிலாளர்களையும், அதீத வெப்பத்தில் எந்த ஆடைகளற்று பணி புரிபவர்களையும், நிலக்கரியை சுமக்கும் வண்டி தள்ளிக் கொண்டிருக்கும் பத்து வயதேயான சிறுவர் சிறுமிகளையும் கண்டு மனம் உடைகிறான்.

தான் மட்டும் சுகவாழ்வில் இருந்து கொண்டு இறைவனின் நற்செய்தி என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று அவர்களோடு அவர்களாக தொழுவங்களைப் போலிருந்த வீடுகளில் ஒன்றில் வசிக்கத் தொடங்குகிறான்.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு 50 சென்ட் ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதையும் அதைக் கொண்டு அந்த குடும்பத்தினர் ஒருவேளை கூட உணவை எடுத்துக்கொள்ள முடியாதச் சூழலில் இருப்பதை உணர்கிறான்.

சகோதரன் தியோ அனுப்பக்கூடிய 150 பிராங்குகளை அந்த மக்களின் உணவுக்காக செலவு செய்கிறான்.

ஒருநாள் இரவில் சுரங்க எரிவாயு விபத்தில் உள்ளே பணிபுரிந்தவர் அத்தனை பேரும் புதைந்து விட, கொஞ்சம் கொஞ்சமாக பெயரளவில் நடைபெற்ற மீட்பு பணியில் குழந்தைகளின் கருகிய உடல்களுக்கு கட்டுப்போட தன்னுடைய ஆடையை ஒட்டுமொத்தமாக கிழித்து கட்டுகிறான்.

மாற்று ஆடைகளற்ற அவர்களின் வாழ்க்கை, இதுவரை அவர்கள் உழைத்த உழைப்பின் பலனைச் சொல்கிறது.

குறுக்கில் ஒரு சணல் ஆடையோடு தொழுவம் போன்ற இடத்தில் அடைந்து கிடந்த அவனை தேவாலய ஊழியர்கள் பணிநீக்கம் செய்கின்றனர்.

கடவுளை, அவரின் நற்செய்தியை அடிமைப்பட்ட மக்களிடம் சேர்ப்பிக்கவே அவன் போர்னேஜ் வந்தான்.

ஆனால், சுரங்கத் தொழிலாளர்களின் என்றென்றைக்குமான எதிரி முதலாளிகள் அல்ல எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனே என்கிற பகுத்தறிவு அவனுக்கு அங்கு துளிர் விடுகிறது.

இதேபோலொரு சிந்தனை அவன் மனநலக் காப்பகத்தில் அடைபட்டுக் கிடக்கும் போதும் மற்றவர்களின் துன்பங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத செவிலியர்கள் எப்பொழுதும் கையில் புனித நூலை வைத்துக்கொண்டு புனித வாசகங்களை முணுமுணுக்கும் அவர்களால் எவருக்கும் எந்த நன்மையும் இல்லையென்று இறை குறித்த எண்ணங்களை கைவிடுகிறான்.

வான்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து அவன் ஓவியத்தின் பால் ஈர்க்கப்படுகிறான்.

அவனுடைய ஓவியங்கள் இயல்பான தன்மையோடும் கலை நேர்த்தியோடும் விவரிக்கப்படுகின்றன.

இயற்கையின் பக்கம் நிற்கும் நிற்கும் கலைஞன், எளியோரிடம் கலந்து திளைக்கிறான். அவன் வரைந்த தொழிலாளியின் உருவம், உழவு செய்யப்பட்ட வயலில் காணப்படும் உழவுசால் தடங்கள் அழகு நிறைந்தவை.

மத நம்பிக்கையைப் பரப்புவதைக் காட்டிலும் ஓவியனாக இருப்பது மேன்மையானது என்பதை உணர்ந்து கொள்கிறான்.

உலகத்தின் கண்களுக்கு அவன் ஒன்றுக்கு உதவாதவனாக, இயல்புக்கு மாறானவனாக, மனக்கோட்டம் உள்ளவனாக இருந்தான் என்பது அவனுக்கு தெரிந்தே கடந்தாலும், இத்தனையும் பொருட்படுத்தாத அவன் மனதில் என்ன இருந்தது என்பதைத்தான் அவனுடைய படைப்பு இன்று காட்டுகிறது.

வெள்ளந்தியான முகங்களை, சுரங்கத் தொழிலாளர்களை, உழைக்கும் மக்களை அவன் வரைந்தான்.

ஆனால், ஓவியம் வரைவதற்காக எந்தவித கோட்பாடுகளையும் அவன் இறுதி வரை உருவாக்கிக் கொள்ளவேயில்லை.

அதேபோல் அவன் வரையத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மேம்பாடுகள் எவருமே அறியவில்லை. ஏன் அவனும் கூட…

அன்புச் சகோதரன் தியோவின் ஆதரவு மட்டும் அவன் வாழ்வின் துவக்கத்திலிருந்து முடிவுவரை எந்த எதிர்பார்ப்புகளுமின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நூல் உருவாவதற்கான மிகப்பெரிய ஆதாரமே தியோவிற்கு விவரமாக அவனுடைய ஓவியங்கள் குறித்தும் அதில் பயன்படுத்துகிற நுட்பங்கள் குறித்தும் எழுதிய கடிதங்களில் பகிர்ந்த விஷயங்கள்தான் முக்கியத் துருப்பாக இருந்தது.

மனநலக் காப்பகத்திற்கு சென்ற பிறகு அவனுடைய வாழ்வு இருண்மையும் அதிர்ச்சியும் மிக்கவை.

அவன் வாழ்க்கையில் அவனுக்கு நேசம் தேவைப்பட்டது. ஒவ்வொரு நாளும் கேன்வாஸை தன் முதுகில் சுமந்து கொண்டு வயல்கள், இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதிகள், எளிமையான மனிதர்கள் வேலை செய்யும் வயல்வெளிகள் என்று தேடித்தேடி வரைந்து கொண்டே இருக்கிறான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரிடமும் கருத்துக்களைக் கேட்க, தியோவிடம் தொடர்ந்து கடிதங்கள் அனுப்ப, யாரும் தெளிவான ஓவியங்கள் எனவும் சிறந்தது எனவும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

அவன் பொழுதுகளை வீணாக்கி கொண்டிருப்பதாக ஏளனம் செய்யப்படுகிறான்.

ஒவ்வொரு நாளும் அவன் வயல்களில் வரைந்து கொண்டிருக்கும் போது தன்னை யாரோ கண்காணிப்பதாக அவதானித்துக் கண்டுபிடித்தவள்தான் மார்க்கவ்.

உர்சுளாவிடம் அன்பை அவன் அளவற்று வெளிப்படுத்திய போதும் மீண்டும் அவளிடமிருந்து திரும்பக் கிடைக்காத அன்பு மார்க்கவ்விடமிருந்து கிடைத்தது. இவனை நேசித்தவள் தன்னை முகம் காட்டாமல் நீண்ட காலம் நேசித்தவள்.

“நேசிப்பதே முக்கியம் இல்லையா வின்சென்ட் நேசிக்கப்படுவது அல்ல” என்கிறாள்.

நேசிப்பதும் பதிலுக்கு திரும்பவும் நேசிக்கப்படாமல் இருப்பதும் எவ்வளவு துயரமானது என்பதை ஏற்கனவே வின்சென்ட் உணர்ந்திருந்தான். மார்க்கவ் அவனை மட்டுமல்ல அவன் ஓவியம் வரைவதையும் நேசிப்பவளாக இருந்தாள்.

மீண்டும் பயணம் பாரீஸில் சகோதரன் தியோவுடன் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் சலிக்காமல் வரைகிறான். வண்ணங்களை குழைப்பதற்கு கற்றுக் கொள்கிறான்.

இம்ப்ரெஸனிஷ்டுகள் என்று சொல்லப்படும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படாத சிறு ஓவியர்களைச் சந்திக்கிறான். அவர்களிடமிருக்கும் நுட்பங்களைப் பார்த்து வியக்கிறான்.

ஆயினும் எவரொருவரும் தன்னுடைய ஓவியத்தை குறித்தோ, அதில் யாருடைய செல்வாக்குமின்றி இருப்பதை உறுதி செய்து கொள்கிறான்.

எல்லாமும் தோற்று மீண்டும் மீண்டும் அவன் ஒருவேளை உணவிற்கும் காய்ந்த ரொட்டிக்குமே வழியின்றி வெறும் தண்ணீரோடு சுருண்டு ஒடுங்கும் ஒரு ஜீவனாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.

உணவகங்களில், விலைமகள் இல்லங்களில் என்று அவர்கள் ஓவியங்களை கண்காட்சிக்காக காட்சிப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோற்றுப் போகின்றன.

உணவகங்களுக்கு வரும் எளியவர்களுடைய கண்கள் உணவைத் தாண்டி உயரவேயில்லை என்பதும் சூழலை உரக்கச் சொல்கின்றது.

கம்யூனிஸ்ட் ஆர்ட் கேலரி தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க முடியாததாகிறது.

கம்யூனிஸ்ட் ஆர்ட் கேலரியில் இருந்து விலகி, தனித்த மனிதனாக ஒட்டுமொத்த உலகத்தை எதிர்த்து யுத்தம் செய்பவனாக, ஒரு உயிர் உள்ள ஓவியனாக பயணிக்க விரும்புகிறேன் என்று அங்கிருந்து கிளம்புகிறான்.

கதிரவனுக்கு தென் திசையில் பழைய ரோமானிய குடியிருப்புகள் நிறைந்த ஆல்ஸ் நகரத்திற்கு சென்றடைகிறான்.

சூரியன் சுட்டரிக்கும் அந்த சூழலும், கொடுமையான குளிர் பருவ வடமேற்கு காற்றும் அவனுடைய குறிக்கோள்களை கொஞ்சமும் தகர்க்கவில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய கேன்வாஸோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட்டு எளிய மனிதர்களை இயற்கையை செம்மஞ்சளை, இளமஞ்சளை, மென் நீலத்தை செங்கருநீலத்தை என்று வண்ணங்களை தன்னுடைய கேன்வாஸில் குழைத்துத் தடவுகிறான்.

தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஓவியம் மட்டுமே உயிர் மூச்சென வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் பேரெழில் வாய்ந்த நீலமும் வெண்மையும் கொண்ட வானத்தை நோக்கி இரண்டு பீச் மரங்கள் ரோஜா நிறத்தில் நீண்டதை வரைகிறான்.

கதிரவன் நேரடியாக தாக்கும் வகையில் எப்பொழுதுமே அவன் தொப்பி அணிவதில்லை. அவன் தலையை நெருப்புப் பந்து போல அவன் உணர்கிறான்.

உண்பதற்கு வழியின்றி ஆல்ஸ் நகரத்தில் அலைந்து திரிகிறான். அப்ஸின்த் மது, புகையிலை, டார்டரின் கதைகள் என்று தனக்குள் கிடைத்ததெல்லாம் போட்டுக் கொண்டு உயிர் பிழைக்கிறான்.

அவன் வரைந்தான். ஏனெனில் அவன் வரைய வேண்டிய அவசியம் இருந்தது. மனநோய் பாதிப்பில் இருந்து அது அவனை விலக்கி வைத்தது.

ஒரு சூழலில் மஞ்சள் இல்லம் அவனுக்கு நிரந்தரமான வசிப்பிடமாக இருக்கும் என்கிற எண்ணம் வருகிறது. அலங்கரிக்கத் துவங்குகிறான்.

ஒரு நாள் அதிகாலையில் வரைவதற்கென சென்ற அவன் சந்திக்கும் கனவுப் பெண் மாயா, அவளோடு நிகழும் கூடல் போல் ஓவியம் உருவாகிறது.

அவளுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. ஒரு ஆக்ரோஷமான கூடலுக்கு பின் வயல்வெளியின் வண்டலில் புதைந்து கிடக்கிறான்.

அவள் “நீ மறைந்த பிறகு நீ என்ன சொல்ல முயற்சி செய்தாய் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும்.

உனது ஓவியங்கள் ஆம்ஸ்ட்ராடாமிலும், பாரிசிலும், ட்ரஸ்டன் நகரிலும், மாஸ்கோவிலும் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகங்களிலும் தொங்கவிடப்படும். உனது ஓவியங்கள் விலைமதிப்பற்றவை, ஏனென்றால் அவை விற்பனைக்கு ஆனவையாக இருக்காது.

உனது ஓவியங்கள் பற்றி புத்தகங்கள் எழுதப்படும். உன் வாழ்க்கையைச் சுற்றி புதினங்களும் நாடகங்களும் கட்டமைக்கப்படும்.

ஓவியத்தை நேசிக்கும் இரண்டு மனிதர்கள் எங்காயினும் ஒன்று சேர்ந்தால் அங்கு வின்சென்ட் பெயர் புனிதப்படுத்தப்பட்டதாக, தவிர்க்க இயலாத பெயராக இருக்கும்” என்கிறாள்.

இல்லத்தில் விளக்கை கொளுத்தி ஒளியூட்டும் போது அவன் கண்களை ஈர்த்தது அந்த கேன்வாஸ்.

கையில் எடுக்கும் போது ஒரு பேரொளியின் சிறப்பு வாய்ந்த பகட்டு வண்ண மலர்ச்சியில் இலையுதிர் கால தோட்டத்தை அதில் காண்கிறான். ஆம் வட்ட அடுக்குகளாக சுழலும் வெளிரிய செம்மஞ்சள் நெருப்பு பந்து கொண்ட நீல வானம் அந்த விண்மீன் ஓவியம்.

அவனது ஓவியப் படைப்பு உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்பதை அவன் உணர்த் தொடங்குகிறான். இந்த ஒரு கணத்தை நோக்கிதான் வருந்தி போராடிக் கொண்டேயிருந்தான்.

ஆனால், யாரும் ஒத்துக் கொள்வதாய் இல்லை. ஒரு பிராங்க்கிற்கு கூட அவனுடைய ஓவியங்கள் விற்கப்படவில்லை.

மஞ்சள் இல்லத்தில் கோஹென்னோடு சேர்ந்து வசித்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையிலான உரையாடல், ஓவியம் குறித்த முரண்பாடுகளால் சவரக்கத்தியைக் கொண்டு தாக்கச் செல்லும் அளவிற்கு அவனுடைய மனப்பிறழ்வு செல்கிறது.

தானே தன்னுடைய வலது காதை தனியாக நறுக்கிப் பொட்டலமாக மடித்து ரேச்சலிடம் கொண்டு செல்லும் அளவிற்கு அவன் செல்கிறான்.

மனபிறழ்விற்கு மருத்துவமனை விடுதியில் சேர்க்கப்படுகிறான். மருத்துவர் ரெய் உடனான உரையாடலில், ”நீ இயல்பான மனிதனாக ஒருபோதும் இருக்க முடியாது. எந்தக் கலைஞனும் இயல்பான மனிதன் அல்ல. அவன் இயல்பானவனாக இருந்தால் அவன் ஒரு கலைஞனாக இருக்க மாட்டான்.

இயல்பான மனிதர்கள் கலைகளை, படைப்புகளை உருவாக்க மாட்டார்கள். அவர்கள் உண்கிறார்கள், உறங்குகிறார்கள் நடைமுறை ஒழுங்கு சார்ந்து வேலைகளில் தொடர்ந்து நீடித்து இறந்து போகிறார்கள்” என்று உரையாடல் செல்கிறது.

மனநல விடுதியில் இருந்த மற்றவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது வெளியுலகத்தில் வாழ்ந்த மனிதர்களோடு அவனுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும் தாக்குதல்களையும் விட இந்த இடமே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

ஆயினும் உண்பதும் உயிர்வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல என்று மீண்டும் வரையத் தொடங்குகிறான்.

மனநல விடுதியின் சன்னல் வழியே தெரிந்ததை அறையில் இருந்து வரைந்த அந்த ஓவியம் என்று, இன்று யாரும் சொல்ல முடியாது.

அப்படிப்பட்ட அற்புதமான கலைப் படைப்புகளை அங்கிருந்து உருவாக்குகிறான். ஆயினும் அது அப்பொழுது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான் துயரம்.

மீண்டும் அவன் மனநிலை சரியாகி வெளியில் வசிக்கத் தொடங்க சிறுவர்களும் ஊரில் உள்ளவர்களும் ‘கிறுக்கு மனிதா, கிறுக்கு மனிதா, சிவப்பு தலை கிறுக்கனே’ என்று கூச்சலிட அவன் குடியிருக்கும் இல்லம் வரை அந்த தொந்தரவுகள், அவமானங்கள் தொடர்கின்றன.

அவர்கள் மீது கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வீசிய வின்சென்ட், சுதந்திரமாக நடமாட தகுதியற்றவன் என்று ஆல்ஸ் நகர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுகிறான்.

ஒருமுறை காச்சட்டின் வீட்டில் ஒரு சிறந்த ஓவியம் கண்டு கொள்ளப்படாமல், சட்டமிடப்படாமல் சுருட்டிக் கிடக்கும் அலட்சியத்தை பலமுறை சுட்டிக்காட்டியும் அதை கண்டுகொள்ளாமல் விட, காச்சட்டை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்கிறான்.

காச்சட்டின் குரலால் நிதானத்திற்கு வந்தவன், எல்லோருக்கும் குட்பை சொல்லிவிட துணிகிறான்.

அவன் எல்லோருக்கும் குட்பை சொல்ல விரும்பினான். எல்லாம் முரண்பாடுகளும் இருந்தும் கூட அவன் வாழ்ந்த உலகம் நல்லதாக இருந்து கொண்டிருந்தது. நஞ்சு அல்லாமலும் இங்கு நஞ்சு முறிவு மருந்தும் இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் குட்பை சொல்ல விரும்பினான்.

உர்சுளாவிற்கு, அவளது அவமதிப்பு அவனை மரபொழுங்கு சார்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு நெறி விலகியவனாக, துரத்தப்பட்டவனாக ஆக்கியது. ஒவ்வொருவருக்கும் கிறிஸ்டினாவிற்கு, கேய்க்கு.

மார்க்கவ், அவனை என்றென்றும் நேசித்த ஒரே பெண். அதற்காக அவள் தற்கொலை செய்து கொள்ள முயன்றவள். கடைசியாக அவனுடைய சகோதரர் தியோ, நெடுங்காலம் பொறுத்துக் கொண்டவன், நேர்மையான, மிகச்சிறந்த அன்புடைய சகோதரன்.

அத்தனை பேருக்கும் குட்பை சொல்லி தன் விலாவில் வைத்து துப்பாக்கியின் விசையை இழுக்கிறான்.

விடியலுக்கு முற்பட்ட இரவில் “தீயோ இப்பொழுது நான் இறந்து போக விரும்புகிறேன்” என்று கூறி கண்களை மூடுகிறான்.

ஒரு மாபெரும் ஓவியன், ஒரு பெரிய தத்துவ அறிஞன், ஓவியக்கலை மேல் அவன் கொண்ட காதலுக்காக ஒரு புனிதத் தியாகத்தில் அவன் தன்னை மாய்த்துக் கொண்டான். அவன் இறக்கவில்லை. ஒருபோதும் இறக்க மாட்டான்.

அவன் இறப்பிலும் இருந்தது ஏழு மனிதர்கள் மட்டும்தான். கல்லறையைச் சுற்றி அவன் பெரிதும் நேசித்த செம்மஞ்சள் நிற சூரியகாந்தி பூச்செடிகள் நடப்பட்டன.

ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் வின்சென்ட் இறந்த அதே நாளில் தியோவும் இறந்து போகிறான். அவர்களது இறப்பிலும் அவர்கள் பிரிக்கப்படவேயில்லை.

இன்று வான்காவின் ஓவிய நகல்கள் கூட மில்லியன் டாலர் கணக்கில் விலை போகும் காலகட்டத்தில் இதே மக்களோடு முரண்பட்டு ஒற்றை கரும்ரொட்டிக்குக் கூட வழியற்று அவன் இறந்து போனான் என்கிற பழியோடு எந்த சலனமுமற்று காலம் எனும் ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது.

வான்காவின் வரலாற்றை முழுமையாக சொல்லும் இந்த நூல் தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்.

நூல் : வாழ்க்கை மீதான பேராவல்
நூலாசிரியர்: இர்விங் ஸ்டோன்
தமிழில் : கே.பி. கூத்தலிங்கம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள் 848
விலை ரூ. 865/-

– சுமித்ரா சத்தியமூர்த்தி

You might also like