தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?

நெகிழ்வோடு விளக்கிய கவிஞர் முத்துலிங்கம்

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான்.

சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன்.

எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான்.

இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன்.

அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன்.

அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன்.

கவிஞர் சுரதா அவர்கள் “இலக்கியம்” என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது.

அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது.

அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும்போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.

அப்போது கண்ணதாசன் ‘தென்றல்’ என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார்.

அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக?” என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது.

நான் எழுதினேன்,

“திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே

பறக்கின்ற நாவற்பழம்”

அப்படின்னு எழுதினேன்.

இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு, நான் பத்திரிகைத் துறையில் (முரசொலி, அலையோசை)  தான் முதலில் பணியாற்றினேன்.

அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன்.

கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.

‘பொண்ணுக்குத் தங்கமனசு’ திரைப்படத்தில் “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா” என்ற பாடல்.

அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் இளையராஜா.

முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார்.

நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ். எல்லாம் ஒரே மாதிரி இருக்கே, நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும்.

அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார். அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல.

அந்தப் படத்தில் அவர் இயக்குநர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம்.

இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ், சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் 

“என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப் பாருய்யா, அதை வச்சு எழுதுங்க”ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க, அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு.

அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.

அந்த “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா” என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடினர்.

கானா பிரபா

நன்றி – றேடியோஸ்பதி
You might also like