பெண்மையைப் போற்றுவோம் என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை குறிக்கும் அளவுகோல்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்கு, பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்கான இந்நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பெண்களின் பன்முகத்தன்மை
ஒரு பெண் தன் வாழ்வில் மகள், சகோதரி, மனைவி, தாய் எனப் பல வடிவங்களில் அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குகிறாள்.
இன்று குடும்பப் பொறுப்புகளைத் தாண்டி, விண்வெளி ஆராய்ச்சி முதல் நாட்டுப் பாதுகாப்பு வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர்.
மகளிர் தினத்தின் வரலாறு
மகளிர் தினம் என்பது வெறும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் நாள் மட்டுமல்ல. அது பெண்களுக்குச் சமவாய்ப்புகளை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நாள்; அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சாதனைப் பெண்களை நினைவு கூறும் நாள்.
“பெண் கல்வி” மற்றும் “பெண் சுதந்திரம்” என்ற விதையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நாள்.
இதன் ஆரம்பம் ரத்தமும் தியாகமும் கலந்த ஒரு நெடிய பயணமாகும். மகளிர் தினம் ஏன், எதற்காக கொண்டாடப்படுகிறது, அதன் வரலாறு என்ன என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ஆம் ஆண்டு சுமார் 15,000 பெண்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
குறைவான வேலை நேரம், அதிகமான ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை கேட்டு மிகப் பெரிய போராட்டமாக அதை நடத்தினார்கள்.
இந்த எழுச்சியின் விளைவாக, அமெரிக்க சோசலிசக் கட்சி 1909-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியை ‘தேசிய மகளிர் தினமாக’ அறிவித்தது.
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடந்த ‘உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில்’, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) என்பவர், “மகளிர் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்தார்.
17 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு முதல் முறையாக 1911-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் 19 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பிறகு ஏன் மார்ச் 8-ஆம் தேதி? இதற்குப் பின்னால் ஒரு வரலாற்றுப் புரட்சி உள்ளது.
ரஷ்யப் புரட்சி: 1917-ல் முதல் உலகப் போரின் பாதிப்பால் ரஷ்யப் பெண்கள் உணவு மற்றும் அமைதி வேண்டிப் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய நாள் (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23), கிரிகோரியன் நாட்காட்டியின்படி மார்ச் 8 ஆகும்.
நான்கு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, ரஷ்ய மன்னர் பதவி விலகினார்; பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமே பின்னாளில் உலக அளவில் மகளிர் தினமாக நிலைபெற்றது.
1975-ஆம் ஆண்டுதான் ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக மார்ச் 8-ஆம் தேதியை ‘சர்வதேச மகளிர் தினமாக’ அங்கீகரித்துக் கொண்டாடத் தொடங்கியது.
நாம் நினைவு கூற வேண்டிய பெண்கள்
சர்வதேச மகளிர் தினத்தில் நாம் போற்ற வேண்டிய மற்றும் நினைவு கூர வேண்டிய பெண்கள் பலர் உள்ளனர்.
போராட்டக் களத்திலும், அறிவியலிலும், அரசியலிலும் தடைகளைத் தகர்த்த சில முக்கிய ஆளுமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. சர்வதேச அளவில் புரட்சி செய்தவர்கள்:
கிளாரா ஜெட்கின்: சர்வதேச மகளிர் தினம் உருவாகக் காரணமானவர். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஜெர்மன் வீராங்கனை.
மேரி கியூரி: நோபல் பரிசை இரண்டு முறை (இயற்பியல் மற்றும் வேதியியல்) வென்ற முதல் பெண்மணி. அறிவியலில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு நிரூபித்தவர்.
மலாலா யூசுப்சாய்: பெண் கல்விக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்ட இளம் வயது நோபல் வெற்றியாளர்.
2. இந்திய வரலாற்றில் தடம் பதித்தவர்கள்:
சாவித்திரிபாய் பூலே (Savitribai Phule): இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். ஒடுக்கப்பட்ட பெண்களின் கல்விக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
ஜான்சி ராணி லட்சுமிபாய்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீர சின்னம். அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போர்க்களத்தில் நின்ற வீரமங்கை.
சரோஜினி நாயுடு: ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படுபவர். சிறந்த கவிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
3. தமிழகத்தின் பெருமைகள்:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். தேவதாசி முறை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கச் சட்டப் போராட்டம் நடத்தியவர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர்.
வேலுநாச்சியார்: சிவகங்கைச் சீமையின் ராணி. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்ற முதல் இந்திய ராணி. ‘வீரமங்கை’ என அழைக்கப்படுபவர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்: தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி. பெண்களின் கல்வி மற்றும் திருமண உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.
4. நவீனகால நாயகிகள்:
கல்பனா சாவ்லா: விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண். கோடிக்கணக்கான சிறுமிகளின் கனவுகளுக்கு சிறகு முளைக்கச் செய்தவர்.
அன்னை தெரசா: அன்பினாலும் கருணையினாலும் உலகையே வென்றவர். ஏழை எளியோருக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த புனிதர்.
இந்தச் சிறப்புமிக்க நாளில் இவர்களைத் தாண்டி நம் அன்றாட வாழ்வில் நாம் நினைவுகூர வேண்டியவர்கள் பலர் உள்ளனர்.
நம்மைப் பெற்றெடுத்த தாய், அறிவுக் கண் திறந்த ஆசிரியைகள், வயல்வெளியிலும் தொழிற்சாலைகளிலும் உழைக்கும் பெண் தொழிலாளர்கள் என அனைவரும் போற்றுதலுக்குரியவர்களே.
சர்வதேச மகளிர் தினமான இன்று கடந்த காலப் போராட்டங்களை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் பெண்களுக்குச் சமமான உரிமை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்போம்.
– யாழினி சோமு