மார்ச் 8 மகளிர் தினம். இந்த மகளிர் தினத்தையொட்டி ஆஸ்கர் விருதைக் கைப்பற்றிய முதல் இந்தியரான பானு அத்தையாவைப் பற்றி தெரிந்துகொள்வோம்.,
ஆஸ்கர் விருதைக் கைப்பற்றிய முதல் இந்தியன் ஏ.ஆர்.ரஹ்மான் என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம்.
ஆனால், அவருக்கு முன்பே, ‘காந்தி’ படத்தில் பணியாற்றியதற்காக 1983-ம் ஆண்டிலேயே ஆஸ்கர் விருதைப் பெற்றவர் பானு ரஜோபாத்யே அத்தையா.
‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அவர் இத்துறைக்காக 1983-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.
1929-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் பானு அத்தையா பிறந்தார். அவரது தந்தை அன்னாசாகேப், ஒரு ஓவியராக இருந்தார்.
பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

அவரது தாயாரும் இந்த துறையில் அவர் கல்வி கற்க உதவினார்.
படிப்பை முடித்த பிறகு பல்வேறு பத்திரிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பானு அத்தையா பணியாற்றி உள்ளார்.
இந்த காலகட்டத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ‘ஈவ்ஸ் வீக்லி’ பத்திரிகையின் ஆசிரியர் ஒரு பொட்டிக்கை ஆரம்பிக்க, அவரது அழைப்பின் பேரில் அதில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் பானு அத்தையா.
இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள், பானு அத்தையாவின் ஆடை வடிவமைப்பால் கவரப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து குரு தத் தயாரிப்பில் தேவ் ஆனந்த் நடித்த ‘சிஐடி’ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு 1956-ம் ஆண்டில் அவரைத் தேடி வந்தது.
‘சிஐடி’ படத்துக்கு பிறகு பாலிவுட்டின் முக்கியமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக பானு அத்தையா மாறினார்.
அந்த சூழலில்தான் ’காந்தி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை சிமி கரேவால் மூலமாக பானு அத்தையாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளார் அதன் இயக்குநர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ.
உடனடியாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்டன்பரோ கூறினார்.
இந்த தகவலை சிமி கரேவால், பானு அத்தையாவிடம் கூற, தன்னைப் பற்றிய பயோடேட்டா மற்றும் ‘காந்தி’ படத்துக்கு எப்படியெல்லாம் ஆடைகளை வடிவமைக்கலாம் என்பது பற்றிய திட்டங்களுடன் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆட்டன்பரோவை சந்தித்துள்ளார் பானு அத்தையா.
இந்த சந்திப்புக்கு பிறகு, ‘காந்தி படத்தில் இந்தியா தொடர்பான கதாபாத்திரங்களுக்கு பானு அத்தையாதான் ஆடை வடிவமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஆட்டன்பரோ.
‘காந்தி’ படத்தின் முனு ஸ்கிரிப்டையும் பானு அத்தையாவிடம் கொடுத்த ஆட்டன்பரோ, படப்பிடிப்பு தொடங்க 12 வாரங்கள் ஆகும் என்றும், அதற்குள் படத்துக்கு தேவையான ஆடைகளை வடிவமைக்குமாறும் சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிலிருந்து, ‘காந்தி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் நாள் வரை தூக்கத்தை மறந்து வேலை பார்த்தார் பானு அத்தையா.
காந்தி படத்துக்காக பணிபுரிந்த நாட்களைப் பற்றி பின்னாளில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பானு அத்தையா, “தினமும் காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்று சொன்னால் எங்கள் குழுவினர் 5 மணிக்கெல்லாம் அங்கு இருக்க வேண்டும்.
அப்போதுதான் 9 மணிக்குள் அவர்கள் அனைவருக்கும் ஆடைகளை மாற்றி அதைச் சரிபார்க்க முடியும்.

இதேபோல் படப்பிடிப்பு முடிந்த பிறகும் நாங்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்ப முடியாது. அனைத்து உடைகளையும் மடித்து வைத்து ஒழுங்குபடுத்திய பிறகே வீட்டுக்கு செல்ல முடியும்.
இப்படத்தில் காந்தியின் உடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்காக நாங்கள் அவரைப் பற்றி நிறைய படிக்கவேண்டி இருந்தது. மேலும் காந்தியின் பல்வேறு தரப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கவேண்டி இருந்தது ” என்கிறார்.
‘காந்தி’ படத்துக்காக பானு அத்தையா மேற்கொண்ட கடும் உழப்பு வீண் போகவில்லை. 1983-ம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பானு அத்தையா பெற்றார்.
– பி.எம். சுதிர்