பாலின சமத்துவம்: இணையதளங்களில் வெடிக்கும் விவாதம்!

சமூக வலைதளங்களான எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு விவாதம், இந்த 31% Study.

நவீன யுகத்தில் பாலின சமத்துவம் பேசப்படும் வேளையில், Gen Z Men அதாவது இன்றைய இளைஞர்களில் 31 சதவீதத்தினர் Wives Obey Husbands (மனைவிகள் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்ற கருத்தை ஆதரிப்பதாக இந்த ஆய்வு கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ஏன் இவ்வளவு விவாதங்களை உருவாக்கி வருகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஆய்வின் பின்னணியும் சமூக வலைதள எதிரொலியும் பொதுவாக 1990-களின் இறுதியிலிருந்து 2010-களின் தொடக்கம் வரை பிறந்தவர்களையே நாம் ‘ஜென்-ஸி’ (Gen Z) தலைமுறையினர் என்று அழைக்கிறோம்.

முற்போக்கான சிந்தனை, சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கும் தலைமுறையாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால், சமீபத்திய இந்த ஆய்வின் முடிவுகள் அந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்த ஆய்வின்படி, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர், குடும்ப அமைப்பில் கணவனே அதிகாரம் கொண்டவர் என்றும், மனைவிகள் அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.

இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் எக்ஸ் தளத்தின் த்ரெட்களில் (Threads) காரசாரமான விவாதங்கள் தொடங்கின.

ஏன் இந்த மனமாற்றம்? ஆண்ட்ரூ டேட் போன்றவர்களின் தாக்கம் நவீனக் கல்வி மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் வளர்ந்த இளைஞர்களிடம் ஏன் இத்தகைய மரபுவழிச் சிந்தனை மீண்டும் தலைதூக்குகிறது?

இதற்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் இருப்பதாக சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.

முதலாவதாக, சமூக ஊடகங்களில் பெருகி வரும் “ஆல்பா மேல்” (Alpha Male) கலாச்சாரம்.

ஆண்ட்ரூ டேட் போன்ற செல்வாக்கு செலுத்துபவர்கள் பேசும் ஆணாதிக்கக் கருத்துகள், ஏதோ ஒரு வகையில் இளைஞர்களின் ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது.

“ஆண் என்பவன் தலைமை தாங்க வேண்டும், பெண் அவனுக்குக் கட்டுப்பட வேண்டும்” என்ற கருத்துகள் கவர்ச்சிகரமான வீடியோக்களாகப் பகிரப்படும்போது, அது எளிதில் இளைஞர்களைச் சென்றடைகிறது.

பொருளாதாரக் காரணிகளும் குடும்ப அமைப்பும் மற்றொரு முக்கியக் காரணியாகப் பொருளாதாரச் சூழல் பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பழைய காலத்து குடும்ப அமைப்பே ஒருவிதப் பாதுகாப்பைத் தருவதாகச் சில இளைஞர்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் என்பது தங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகச் சில ஆண்கள் கருதுவதும் இத்தகைய ஆய்வு முடிவுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

“Gender Equality” என்ற கருத்தாக்கம் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதும், அதன் விளைவாக எழும் எதிர்வினையுமே இந்த 31 சதவீத இளைஞர்களின் எண்ண ஓட்டமாகும்.

ஆரோக்கியமான உறவு என்பது எது?

இந்த ஆய்வு முடிவுகள் ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்பட வேண்டும்.

“கீழ்ப்படிதல்” (Obey) என்ற வார்த்தை ஒருவரை அடக்கி ஆளுவதைக் குறிக்கிறதா அல்லது பரஸ்பர மரியாதையைக் குறிக்கிறதா என்பதில் பெரும் விவாதம் நடக்கிறது.

ஒரு ஆரோக்கியமான உறவு என்பது ஒருவரின் அதிகாரத்தில் மற்றவர் அடங்கிப் போவதல்ல; அது இருவருக்குமான சமத்துவம், புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையில் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

இந்த 31 சதவீத ஆய்வு என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, அது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களின் மனநிலை எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நமக்குக் காட்டும் ஒரு கண்ணாடி.

சமூக வலைதளங்களில் இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சமத்துவம் என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தானா அல்லது நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமா?

சந்தோஷ்ராஜ் சரவணன் 

நன்றி: மின்னம்பலம்

You might also like