பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!

கவிஞர் கரிகாலன் அனுபவங்கள்

இலக்கியம்:

சமீபத்திய பெருங்கதையாடல் நிகழ்வொன்றின் நிழற்படங்களை வாட்சப்பில் பகிர்ந்திருந்தார் நண்பர் பவா செல்லதுரை. பவா என்றாலே புதுமை, வித்தியாசம்.

தமுஎச வின் கலை இரவு நிகழ்வுகளை கவனம் பெற வைத்தவர். பவாவை கடந்த முப்பது ஆண்டுகளாக அறிவேன்.

தொண்ணுறுகளில் எனது அப்போதிருந்த இடைவெளியில் கவிதைத் தொகுப்புக்கு திருவண்ணாமலையில் விமர்சன நிழ்வொன்றை ஏற்பாடு செய்து என்னையும் அழைத்திருந்தார். என்னால் அப்போது கலந்துகொள்ள இயலாத நிலை.

பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும்.

அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.

படைப்புகளில் தனக்கென ஓர் இடத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே உருவாக்கியிருந்தார் பவா.

அவரது எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் மிகவும் கவனம் பெற்ற கவிதைத் தொகுப்பு. சிறுகதைகளிலும் தடம்பதித்திருந்தார்.

ஒருவர் நிறைய வேலைகளைச் செய்யும்போது அவரது அடையாளங்களில் ஏதாவது சில மங்கலாகிவிடுகின்றன.

பவா ஒரு கதைசொல்லியாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, விரும்பப்பட்டபோது, அவரது படைப்பாக்க அடையாளங்கள் மீது கவனச் சிதறல் ஏற்பட்டது தவிர்க்க இயலாதது.

மனிதர்கள் பரபரப்பாக இருக்கின்ற பின் நவீனத்துவ காலமிது.

அவர்கள் பரபரப்பாக இருப்பதற்கு, பெரிதாக எந்த வேலையோ அர்த்தமோ இல்லை.

ஆனாலும் அவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள்.

மாரத்தான் ஓட்டம்போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனாலைம் பெரிதாக நோக்கமில்லை. தங்களுக்கு கதையோ நாவலோ படிக்க நேரமில்லை என நம்பத் தொடங்கிவிட்டார்கள்.

தங்களுக்கு யாரவது கதை சொன்னால் வசதியாக இருக்குமே! என அவர்களுக்குள் ஓர் ஏக்கம். அதை பூர்த்தி செய்ய பவாவிடம் எல்லா திறமைகளும் இருந்தன.

அவரது குரலில் ஒரு வாசம் இருக்கிறது. அது அவர் பேசும் கூட்டங்களில் கமழத் தொடங்கியது. நமக்கு மிகவும் நெருக்கமாக இவர் பேசுகிறார்.

நம்மைத் தன் குரல்வழியாக எங்கோ இவர் தொடுகிறார் என உணரத் தொடங்கும் கூட்டம் வளரத் தொடங்கியது.

அவரது கதை கூறும் நிகழ்வுகள் ஒரு இன்னிசைக் கச்சேரிபோல இரவை நனைக்கிறது. இலக்கிய கூட்டங்களுக்கு ஆளே வரவில்லை எனும் புலம்பலை, அவநம்பிக்கையை பவா பொய்யாக்கிவிட்டார்.

கூட்டத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மட்டுமில்லை, நிகழும் களம், அரங்கமைப்பு எல்லாமே வித்தியாசமானவை.

பவா கதை சொன்ன மறுநாள் கேட்டவர்கள், அந்த கதை எழுதியவரை அவரது நூலை தேடத் தொடங்கினார்கள். உலகெங்கும் கதை சொல்லல் நிகழ்வுகள் பரவலாகி வருகின்றன.

இத்தாலியில் இத்தகைய கதைசொல்லல் நிகழ்வுகள் முன்பு கன்டிஸ்டா (Cuntista Performance) என்றழைக்கப்பட்டன. தற்போது அது Sicilian என மாறியுள்ளது.

ஐரிஷில் கதைசொல்வதை சியாஞ்சாய் என்றழைத்தார்கள். இந்தியாவில் பஞ்சதந்திரக் காலத்தில் தொடங்கியது. டிஜிடல் காலத்தில் நம் முன்னால் பவா நிற்கிறார்.

ஞாபகத்திறன், பொங்கி வழியும் உணர்ச்சி, கதாபாத்திரங்களின் பொருண்மை, பவா கதை சொல்லச் சொல்ல, தாயின் அரவணைப்பில், தந்தையின் அருகில் படுத்தபடி கதை கேட்ட காலங்களை, அல்லது கிடைக்காத அனுடவங்களைப் பார்வையாளர்கள் பெறுகிறார்கள்.

தொண்ணுறுகளில் நான் பார்த்தபோது இருந்த திருவண்ணாமலை வேறு. பவா வேறு. இன்று திருவண்ணாமலை நகரம் வளர்ந்துவிட்டது.

பவா எனும் கலைஞரும் பரந்து விரிந்து, ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கிறார். ஒரு மரம் எப்படி பிரபஞ்சத்தின் வெப்பத்தையும் காற்றையும் உட்கொண்டு தன்னைத்தானே வளர்த்துக் கொள்கிறதோ, பவாவும் அப்படிதான்.

தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளும் ஊக்கத்தோடு, இலக்கியம், சினிமா, கதை சொல்லல், பிக்பாஸ் என வளர்கிறார்.

ஒரு காலத்தில் populism எதிர்மறையாக பார்க்கப்பட்டது.

இந்தியாவில் / தமிழகத்தில் இலக்கியம், கலை போன்றவை ஒரு சிலருக்கே என்கிற நிலை இருந்தது.

இன்று அந்த நிலை உடைந்திருக்கிறது.

வெகுசன ரசனையை மேம்படுத்துவது என்பது, இன்று ஆகக் கீழுள்ள மனிதர்களை மேலே கொண்டுவருவதாக மாறியுள்ளது.

ஐடி படித்த பிள்ளைகளுக்கு ஊதியம் மட்டும் போதாது.

புதுமைப்பித்தனும், திஜாவும், சுராவும் ஜெயகாந்தனும் உருவாக்கிய நவ விழுமியங்களும் தேவைப்படுகிறது.

வீக் எண்டுக்கு ரெஸ்டோ பாருக்கு சென்றுவிடாமல், அவர்களை பெருங்கதையாடலுக்கு அழைத்து வருகிறார் பவா. அவரை வாழ்த்துவோம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like