அறிவியலின் துணைகொண்டு பல நோய்களுக்கு இவ்வுலகில் இருந்து விடை கொடுக்கப்பட்ட போதிலும், இன்றும் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக விளங்குகிறது புற்றுநோய்.
அதிகமான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி உலகப் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
புற்றுநோய் என்பது உடலின் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டிகளாக மாறுவதாகும். இது ஆரோக்கியமான திசுக்களை அழித்து உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய ஒரு ஆபத்தான நோயாகும்.
இந்நோய் குறித்த புரிதலை எடுத்துரைக்க, உலகப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் வருடந்தோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சையை மேற்கொள்ளுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இந்நோய்க்கான முக்கிய காரணிகளாக புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவு முறை,
உடற்பயிற்சியின்மை, கதிர்வீச்சு, ரசாயனங்கள் மற்றும் வைரஸ் தொற்றுகள் ஆகியவை அறியப்படுகின்றன.
புற்றுநோய் தடுப்பு முறைகள் மற்றும் அனைவருக்கும் சமமான சிகிச்சை அணுகுமுறையை வலியுறுத்தி, “தனித்துவத்தால் இணைவோம்” என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தாரக மந்திரம் 2025 முதல் 2027 வரையிலான மூன்றாண்டு கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தனித்துவமான கதைகள் மற்றும் தேவைகளை மையமாகக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய கவனிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
புற்று நோய் அறிகுறிகளான – திடீர் எடை இழப்பு, தொடர் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, அசாதாரண ரத்தப்போக்கு, சாப்பிடுவதில் சிரமம், புதிய கட்டிகள் அல்லது வீக்கம், செரிமான மாற்றங்கள் போன்றவை இருப்பின், உடனடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் இத்தினத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
காலநிலை மாற்றங்களும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக வெப்பமயமாதல் பல நோய்களுக்கு வழிவகுப்பதால், பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டிய அவசியமும் எடுத்துரைக்கப்படுகிறது.
உலக அளவில் 2020 ஆம் ஆண்டில் பதிவான சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக புற்றுநோய் உள்ளதாகவும், இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சமூக ஊடகங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் மூலம் இந்நோய் தடுப்பு பற்றிய தகவல்கள் இந்த தினத்தில் வெளியிடப்படுகின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்தல், நடைபயணங்களை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன.
புற்றுநோய் பற்றிய பயத்தைப் போக்கி சரியான நேரத்தில் சிகிச்சை பெறுமாறு இந்த தினத்தில் ஊக்குவிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைத்தல், நஞ்சில்லா உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்,
மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குதல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அற்ற உலகை உருவாக்க முடியும் என்ற கருத்தை உரக்கச் சொல்கிறது இந்த தினம்.
– எஸ். வாணி