மறதி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் அன்றாடம் சந்திக்கும் ஒரு அனுபவம்.
சிறு குழந்தைகளிலிருந்து வயதான முதியவர்கள் வரை மறதிக்கு ஆட்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எப்படி போகிப் பண்டிகையின்போது, நமது வீட்டில் உள்ள பழையக் கழிவுகளை அப்புறப்படுத்தி இருக்கிறோமோ அதே மாதிரியான நிலையில்தான் நம் மூளையில் பதிந்த சில நினைவுகளை, பெயர்களை சம்பவங்களை மறந்து விடுகிறது நமது மூளை.
ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியெல்லாமா மறதிகள் வரும் என்று வியக்கும் அளவுக்கு பலருக்கு மறதிகள் வந்து கொண்டிருக்கின்றன
சிறு குழந்தைகள் செல்போன்களின் தாக்கத்தால் பலவற்றை மறந்து போகிறார்கள். குறிப்பாக சாப்பிடுவதைக் கூட மறந்து போய் விடுகிறார்கள்.
தொலைக்காட்சித் தொடர்கள் உருவாக்குகின்ற ஆதிக்கத்தினால் நம் வீட்டுப் பெண்கள் சமயங்களில் அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தவற்றை மறந்து விடுகிறார்கள்.
அதிலும் சிலர் கேஸ் சிலிண்டரை ஆஃப் செய்வதைக்கூட மறந்து விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் மிச்சமாக ‘டீன் ஏஜ்’ என்று அழைக்கிற இளைஞர்களும் இளம்பெண்களும் செல்போன் கையில் இருந்தால், சுற்றியுள்ள உலகையே மறந்து விடுகிறார்கள், உறவுகளையும் மறந்து விடுகிறார்கள்.
எங்கோ செல்போன் மூலமாக உருவாகிற வலைதள நண்பர்களைவிட நமக்குப் பக்கத்தில் இருக்கிற உறவுகள் செல்போன் ஆதிக்கத்தினால் அன்னியமாகிப் போகிறார்கள்.
சென்னை புறநகர்ப் பகுதியில் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கக் காத்திருந்த சமயம், ஒல்லியான 16 வயது மதிக்கத்தக்க சுடிதார் போட்ட இளம்பெண் ஒருவர், ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கிராஸிங்கைக் கடந்தபோது, ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்த நேரத்தில், பக்கத்தில் இருந்து அழைத்துக் கொண்டிருந்தவரின் குரல் மட்டும் உயிர்ப்போடிருந்தது. இது கண்முன்னே நான் கண்ட அதிர்ச்சியான காட்சி.
ஆக, செல்போனில் தன்னை மறந்த நிலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெண் அந்த ஒன்றுதலின் விளைவாக உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
செல்போனே கதியென்று கிடக்கிறோம். சாப்பிடும்போதும், ஏன் படுக்கையின் நள்ளிரவிலும் கூட செல்போனே கதியென்று கிடைக்கிற குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்டித்ததால், தன் உயிரையே இழக்கத் துணிகிற அளவுக்கு போயிருக்கிறார்கள் நமது இளம் தலைமுறைகள்.
மதுரையில் நமக்குத் தெரிந்த ஒரு ஆடிட்டர் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சையில் இருந்தார்.
ஏறத்தாழ, நினைவு தப்பிவிட்ட நிலையில், சில நினைவுகள் மட்டும் பட்டும் படாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்தன.
புலம்பியபடியே இருந்த அவருக்கு பக்கத்தில் அவரை திரும்பத் திரும்ப நினைவூட்டும் விதத்தில் அழைத்துக் கொண்டிருந்த சொந்தங்களை அவர் மறந்து விட்டிருந்தார்.
அதே சமயம் அவரது அலுவலகத்தில் யாருக்காகவோ உழைத்து அவர் எழுதிய ‘லெட்ஜர்’ கணக்குகள் மட்டும் நினைவில் இருந்ததை அவருடைய புலம்பலான பேச்சுக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
ஒருவர் என்ன சம்பாதித்தும், எப்படி எல்லாம் உழைத்தும் சொந்தங்களை நினைவில் நினைவு கூராமல் ஏதோ தொழில் கணக்குகள் மட்டும் நினைவில் இருக்கிறது என்றால், அத்தகைய மறதியும் கொடுமை.
மிஞ்சியிருக்கிற நினைவுகளும்கூட கொடுமை. சம்பாதிப்பதற்காக தன்னையே உருக்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் மறக்காமல் நினைவில்கொள்ள வேண்டிய அனுபவம் என்று இதைச் சொல்லலாம்.
இப்படியா மறதி வரும் என்பதற்கு கீழே வரும் சம்பவம் ஒரு உதாரணம்.
நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த மூத்த திரைப்பட நடிகரான பூர்ணம் விஸ்வநாதன் அந்த காலத்தில் வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
ஒவ்வொரு முறையும் செய்தியை வாசிக்கத் துவங்கும்போது “செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்“ என்று அழுத்தமாக தன்னுடைய பெயரைச் சொல்வது அவருடைய தொழில் சார்ந்த இயல்பு.
ஒருநாள் காலை நேரத்தில் ஒளிபரப்புக் கூடத்திற்கு வந்து செய்தியை வாசிக்கத் துவங்குவதற்கு முன்னால் வழக்கம்போல, “செய்திகள் வாசிப்பது” என்று சொன்னதோடு சரி அவரது பெயரே அவருக்கு மறந்து போய்விட்டது.
ஒளிப்பதிவுக் கூடத்தில் சற்று நேரம் மௌனமாக இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் அவரது பெயரைச் சொல்லி நினைவுபடுத்தினார்கள்.
பிறகு சுதாரித்து அவரது பெயரைச் சொல்லி செய்தியை வாசித்ததாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் பூர்ணம் விஸ்வநாதன்.
பாருங்கள், மறதி எப்படி எல்லாம் தன்னையும் தனது பெயரைமே மறக்க வைக்கும் அளவுக்கு வீரியத்துடன் இருந்திருக்கிறது. இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
– மணா