கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!

பத்திரிகையாளர் டி.வி.சோமு

“படிக்காதீங்க”ன்னு சொன்னாலும் ஆர்வமா உள்ள வந்துட்டீங்களா? அப்போ நீங்க உஷாரான ஆளுதான்!

வாங்க, மேட்டருக்குப் போகலாம்.

1824-ஆம் ஆண்டு அமெரிக்காவின், பத்தாவது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது.

அப்போது, பென்சில்வேனியா மாகாணத்தில் பிரபலமாக இருந்த ‘ஹாரிஸ்பர்க் பென்சில்வேனியன்’ எனும் செய்தித்தாளுக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியது.

“யார் அதிபராக வர விரும்புகிறார்கள் என்பதை தேர்தலுக்கு முன்பே, மக்களிடம் கேட்டு வெளியிட்டால் என்ன” என்று திட்டமிட்டது.

பென்சில்வேனியா மாகாணத்தில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. பெரும்பாலான மக்கள், ஜாக்சன்தான் அதிபர் ஆக வேண்டும் என தெரிவித்தார்கள்.

அதிபர் தேர்தலிலும் அதுதான் நடந்தது.

ஆனால், ஆபரேசன் சக்ஸஸ், பேசன்ட் டெத் என்பதுபோல ஒரு சம்பவம் நடந்தது.

அந்தக் கால அமெரிக்க சட்டங்களில் சில பல குழப்பங்கள் இருந்தன. இதையடுத்து, இரண்டாம் இடம்பெற்ற ஜான் குவின்சி ஆடம்ஸ் தான் அதிபரானார்.

மழையால் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டால், டக்வொர்த்-லீவிஸ்-ஸ்டெர்ன் என்கிற குழப்பமான நடைமுறையில் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் அல்லவா.

அது மாதிரி குழப்பமான நடைமுறை அது.

இன்னொரு விசயம், அப்போதெல்லாம், கருத்துக் கணிப்பு “Opinion Poll” என்று அழைக்கப்படவில்லை. Straw Poll (வைக்கோல் வாக்கெடுப்பு) என்று அழைக்கப்பட்டது.

அதாவது, காற்று வீசும் திசையில்தானே, ஒரு வைக்கோல் துரும்பு பறக்கும்…

அதைப்போல மக்களின் மனநிலை எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள எடுக்கப்பட்ட முயற்சி இது.

ஆகவே வைக்கோல் வாக்கெடுப்பு என்று அழைத்தார்கள்.

பிறகு, ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, “அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்” என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.

1936-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் இவரை உலக அளவில் கவனிக்க வைத்தது.

ஜார்ஜ் கேலப்

அப்போதைய பிரபல இதழான ‘லிட்டரரி டைஜஸ்ட்’ ஒரு பிரம்மாண்டமான கருத்துக் கணிப்பை நடத்தியது.

லாண்டன் வெல்வார் என கணிப்பு வெளியிட்டது.

ஜார்ஜ் கேலப், சில ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி, ரூஸ்வெல்ட் வெல்வார் என்றார்.

அவர் சொன்னதே பலித்தது.

“வயது, கல்வி, இருப்பிடம் என மக்களை வகைப்படுத்தி அறிவியல் முறைப்படி கருத்துக் கணிப்பு எடுத்தேன்.

அதனால்தான் சரியாக கணிக்க முடிந்தது” என்றார்.

ஆகவே கருத்துக் கணிப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஆனால், பிற்காலத்தில் இவரது கணிப்புகளும் பொய்த்தது உண்டு.

முக்கியமாக, 1948-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், “தாமஸ் டூவி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்” என கணித்தார்.

ஆனால், ட்ரூமன் வெற்றி பெற்றார்.

அது மட்டுமல்ல… ட்ரூமன் வெற்றி பெற்றவுடன், தவறான கருத்துக் கணிப்பு வெளியான பத்திரிகையை தூக்கிப் பிடித்து கிண்டல் புன்னகையுடன் போஸ் கொடுத்தார்.

ஆக, கருத்துக் கணிப்பு “அறிவியல்” முறைப்படியானது அல்ல என்பது 1948லேயே அம்பலமானது.

இதற்கு முன்பாக பிரிட்டனிலும் இதேபோல நடந்தது.

இரண்டாம் உலகப்போரை வென்று கொடுத்த சர்ச்சில்தான் வெல்வார் என 1945-ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பல கணிப்புகள் வெளியாகின.

ஆனால் அவர் தோற்றார்.

சரி, கருத்துக் கணிப்புகள் ஏன் அறிவியல் முறைப்படியாது அல்ல?

சிம்பிள்.. அறிவியல் முறைப்படியானது என்றால், யார் கருத்துக் கணிப்பு நடத்தினாலும் ஒரே மாதிரி முடிவு வர வேண்டும்.

அதாவது தலைவலி என்றால் குறிப்பிட்ட மாத்திரையை அல்லது அதே கெமிக்கல் ஈக்குவேசன் உள்ள மாத்திரையை சாப்பிடுகிறோம். ஆனால் கருத்துக் கணிப்பில் ஆளுக்கொரு முடிவைச் சொல்கிறார்களே!

தேர்தலில் லட்சக்கணக்கானவர்கள் வாக்களிக்க இருக்கும் நிலையில், சில நூறு அல்லது ஆயிரம் பேரிடம் கேட்டு, இதுதான் நடக்கும் என்பது!

நன்றி: cartoonistsatish.com

தவிர, கருத்துக் கணிப்பில் எல்லோரும் உண்மையைச் சொல்வார்கள் என கூற முடியாது.

குறிப்பிட்ட பகுதியில் ஒரு கட்சிக்கு வாக்களிப்பவர் அதிகம் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் சிலர், உண்மையைச் சொல்ல மாட்டார்கள்.

கருத்துக் கணிப்பின்போது, சொல்வதை பிறகு மாற்றிக் கொள்வோரும் பலர்.

குறிப்பிட்ட ஒரு கட்சி வெல்வதாக கணிப்பு வருகிறது என வைத்துக்கொள்வோம்.

அந்தக் கட்சியினர் அலட்சியமாக, வாக்களிக்காமல் இருந்துவிடுவதும் உண்டு. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பிடம் தோற்ற ஹிலாரி இதைச் சொல்லி வருந்தினார்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விசயம்…

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுதான் க.கணிப்பின் அடிப்படை.

இது அஃறிணை. ஜடப் பொருட்களுக்கு சரிதான். தனித்தனி உணர்வுள்ள மனிதர்கள் இப்படி கணிக்க முடியாதே!

வெளி நாடுகளில் மட்டுமல்ல.. இந்தியாவிலும் பல முறை கருத்துக்கணிப்புகள் பொய்யாகி இருக்கின்றன. 

2004ல் பாஜக வெல்லும் என பல கணிப்புகள் சொல்ல… காங்கிரஸ் வென்றது.

ஏன், 2016ல் தமிழ்நாட்டில் திமுக வெல்லும் என கணிப்புகள் வெளியாக.. அ.தி.மு.க. வென்றது.

அதே நேரம், “சில சமயங்களில் கருத்துக்கணிப்புகள் அப்படியே பலித்து விடுகின்றனவே” என்ற கேள்வி வரலாம்.

ஜோதிடம் போலத்தான் இதுவும். எதிர்பாராத விதமாக சில சமயங்களில் ஒத்துப்போகும். பல சமயங்களில் தவறாகும்.

அதனால்தான் உலக மக்களில் பெரும்பாலோர் கருத்துக் கணிப்புகளை நம்புவது இல்லை.

அமெரிக்காவின் புகழ் பெற்ற கலிபோர்னியா பெர்க்லி பல்கலை, “கருத்துக் கணிப்புகளை மக்கள் நம்புகிறார்களா” என கருத்து கணிப்பு நடத்தியது.

மிகக்குறைவான சதவிகிதம் பேர்தான் இதை நம்புகிறார்கள் என்பது தெரிய வந்தது. தவிர பலர், “இது மோசடி” என்கிற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே எடுத்துக்கொள்வோம்..

2014ல் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், “நியூஸ் எக்ஸ்பிரஸ்” என்திற சேனல் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது.

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் பல, “பணம் கொடுங்கள்.. உங்கள் சார்பாக கருத்து கணிப்புகளை வெளியிடுகிறோம்” என்றன.

(அப்படி சிக்கிய நிறுவனங்களில் பிரபலமான C-Voter, Ipsos, QRS ஆகியவையும் உண்டு.)

இந்த லட்சணத்தில்தான், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் (எக்ஸிட் போல்) வந்துவிட்டன.

உண்மையான கருத்துக் கணிப்பும் நடப்பது உண்டு.

சுவிட்சர்லாந்து நாட்டில், புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றால், 18 வயதுக்கு மேல் உள்ளோர் வாக்களித்து, பெரும்பான்மை பெற்றால்தான் அது நிறைவேறும். (படம்: 7)

குறிப்பிட்ட சட்டம் என்ன என்பது குறித்து மட்டுமல்ல… அதை எதிர்ப்போரின் கருத்துக்களும் கொண்ட புத்தகங்கள் குடிமக்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் அனுப்பப்படும்.

மக்கள் அந்தப் புத்தகத்தை நன்கு படித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில், தங்களது ஆதரவு அல்லது எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.

உண்மையான கருத்துக்கணிப்பு – மக்களாட்சி என்றால் அதுதான்!

மற்றபடி, ஊடகம் வைத்திருப்போர் எல்லாம் கருத்துக்கணிப்பாளர் என்கிற நிலைமை அங்கில்லை.

ஆகவே, வாக்காளப் பெருமக்களே… கருத்து கணிப்புகளைப் பார்க்கும், படிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலையைப் பாருங்கள்!

You might also like