தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. களத்தில் நான்கு அணிகள் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கம்போல், தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார்.
திமுக வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றன.
தனது பழைய பங்காளி பாஜகவுடன் சில மாதங்களுக்கு முன்னரே உறவைப் புதுப்பித்துக் கொண்ட அதிமுக, மேலும் சில கட்சிகளை சேர்த்து வருகிறது.
அன்புமணி தலைமையிலான பாமக முதலில் இணைந்தது. பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஒட்டிக்கொண்டது.
பாஜக அணியில் ஏற்கனவே இருந்த தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி ஆகியவையும் அதிமுக அணியில் உள்ளன.
அண்மையில் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி, இந்தக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
தேர்தலை முதன் முறையாக சந்திக்கும் விஜயின் தவெகவில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் இணைந்தாலும், எந்தக் கட்சியும் அதனுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனியாகத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி விட்டது.
பிரேமலதா, ராமதாஸ், ஓபிஎஸ் நிலை:
2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, எதிர்க்கட்சியாக உருவெடுத்தது விஜயகாந்தின் தேமுதிக; இப்போது அந்தக் கட்சி அவரது மனைவி பிரேமலதாவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
’விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்’ என பல மாதங்களாக சொல்லி வந்த பிரேமலதா, இரு தினங்களுக்கு முன்பும் இதனையே சொல்லி இருக்கிறார்.
திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே தேமுதிகவை தங்கள் அணியில் சேர்க்க தயார். ஆனால், பிரேமலதாவின் ‘டிமாண்ட்’ அதிக அளவில் இருப்பதால், 3 கட்சிகளும் அவரை சேர்க்க தயக்கம் காட்டுகின்றன. தவித்து நிற்கிறார் பிரேமலதா.
மகன் பாமகவை கைப்பற்றிய பின், ராமதாஸ் நிலை பரிதாபமாகியுள்ளது. திமுக அணியில், ராமதாசை இணைக்க விசிக எதிர்ப்பு காட்டுகிறது.
அதிமுக அணியில் அன்புமணி இருப்பதால் அங்கேயும் செல்ல முடியாது. ஒரே சாய்ஸ், தவெக. நடிகரை தலைவராக ஏற்றுகொண்டு, அந்தக் கட்சியோடு கூட்டணி வைக்க ராமதாசுக்கு தயக்கம்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் மீட்புக் கழகத்தை நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் இருந்து அவரைத் தவிர பல தலைவர்கள், வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர்.
அதிமுக அணியில் இவரை சேர்க்கக் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மறுத்து விட்டார்.
திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்கலாம். ஓபிஎஸ்சை சேர்ப்பதால் பெரிய லாபம் இல்லை என அந்த இருகட்சிகளுமே கருதுகின்றன.
இதனால் பிரேமலதா, ராமதாஸ் போன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சும் தடுமாற்றத்தில் இருக்கிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.