1863-ல் தஞ்சாவூருக்கு நீதிமன்றம் வந்த கதை!

1781 ஆம் வருடம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக நாகப்பட்டினத்தில் தங்களது வணிகத்தைத் தொடங்கி, அதன் பிறகு அதே ஆண்டில் டச்சுக்காரர்களைத் துரத்திவிட்டு நாகப்பட்டினத்தை ராஜாவிடம் இருந்து பெற்றனர்.

ஆங்கிலேயர்கள், மராத்திய ராஜாவுக்கு செய்த உதவிக்கு கைமாறாக அவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்முதல் வழங்கப்பட்டது.

1781ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம் ஆங்கிலேயர்கள் நாகப்பட்டினத்தில் வணிகர்களாகத் வந்த பிறகு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மாலுமிகளின் இராணுவத்தை ஏற்படுத்தினார்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவ இந்தியர்களுக்கு திறமான ராணுவப் பயிற்சி கொடுத்து, அவர்கள் “சிப்பாய்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

கட்டுப்பாட்டான இராணுவத்துடன் அவர்கள் இப்பகுதியில் தங்கள் வலிமையை நிலைநாட்ட முடிந்தது… ஐம்பத்திற்கும் மேற்பட்ட ராஜ்யங்களை ஒன்றிணைத்தது.

பின்னர் ஆங்கிலேயர்கள், நம் நாட்டுக்கு “இந்தியா” என்று மறுபெயரிட்டு ஒன்றாக இணைத்தனர்.

இந்த வகையில் தான் தஞ்சாவூர் நாடு ராஜ்யமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

பிற்காலத்தில் 1799 ஆம் ஆண்டு தஞ்சாவூர் நாட்டை (Tanjore Country), தஞ்சாவூர் கோட்டை பகுதி நீங்கலாக, மராட்டிய ராஜாவிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியார் கைப்பற்றினர்.

அதன்பிறகுதான் அதற்கு “டாஞ்சூர் டிஸ்ட்ரிக்ட்” என பெயரிட்டு முதன்முதலாக கலெக்டர் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். 1799 முதல் 1805 வரை கலெக்டர் தான் தஞ்சை டிஸ்ட்ரிசிட்டின் நீதிபதியாகவும் செயல்பட்டார்.

1806ல் தான் முதன்முதலாக ஜில்லா நீதிமன்றம் (Zilla Court) உருவாக்கினார்கள்… அது கும்பகோணத்தில் செயல்படத் தொடங்கியது. சார்ளஸ் உட்காக் என்ற ஆங்கிலேயர் தான் முதல் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

1858 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து முழு இந்திய பிரதேசத்தின் நிர்வாகத்தையும் எடுத்துக் கொண்டது.

தற்போதைய இந்தியா (சில ராஜியங்கள் தவிர), பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகியவற்றைக் கொண்ட “இந்தியா” மிகப் பெரிய பிரதேசமாக உருவெடுத்தது.

அதனை முறையாக நிர்வாகம் செய்ய எழுதப்பட்ட சட்டங்களை இயற்றினர். அதற்கேற்றாற்போல் நீதிமன்றங்களை விரிவுபடுத்தினர்.

1860 இல் அது இரண்டு ஜில்லா நீதி மன்றங்களாக செயல்பட ஆரம்பித்தது. ஒன்று கும்பகோணத்திலும் மற்றொன்று தரங்கம்பாடியில் உள்ள ஜில்லா நீதிமன்றம் ஆகும்.

தரங்கம்பாடியில் 1860 முதல் 1873 வரை செயல்பட்டு பிறகு 1873 முதல் நாகப்பட்டினத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த நீதிமன்றம் நாகப்பட்டினத்தில் 1875 வரை செயல்பட்ட பிறகு மூடப்பட்டது.

திரும்பவும் தரங்கம்பாடியில் 1878ல் ஆரம்பிக்கப்பட்டு1884 திரும்பவும் மூடப்பட்டது.

1806ல் கும்பகோணத்தில் துவங்கப்பட்ட “டாஞ்சூர் ஜில்லா கோர்ட்”, 1863ல் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது.

முதன்முதலாக, தற்போது “புளியமரத்தடி கோர்ட்” என்று சொல்லக்கூடிய மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில்தான் இது செயல்பட ஆரம்பித்தது. ஒரு காலகட்டத்தில் இது மிலிட்டரி பாராக்ஸ் ஆகா செயல்பட்டது.

அதாவது, வெள்ளைக்கார மிலிட்டரி தங்கும் இடமாக செயல்பட்டது. இந்த இடம் தான் 1863ல் தஞ்சையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கோர்ட் ஆகும்.

இந்த கட்டிடத்தின் தற்போதைய நிலை கட்டிடம் பூட்டி பாழடைந்து பராமரிப்பின்றி இருக்கிறது.

அதன் படம் தான் மேலே உள்ள படம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாகும். அதன் எதிரில் தான் மற்றொரு வரலாற்று கட்டிடமான “ரெசிடெண்ட் பங்களா” உள்ளது.

இந்த வளாகத்தில் தான் ஆங்கிலயர்கள் ஆட்சி பீடம் அமைந்தது. தற்போது இந்த வளாகத்தில் தான் “சர்குட் ஹவுஸ்” உள்ளது. அதன் பின்புறம் தான் இந்த வரலாற்று கோர்ட் கட்டிடம் உள்ளது.

1870ல்… “டாஞ்சூர் ஜில்லா கோர்ட்”, கோர்ட் ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அதாவது, இப்போது இருக்க கூடிய பழைய நீதிமன்ற வளாகம்.

1873 ஆம் ஆண்டு “டாஞ்சூர் ஜில்லா கோர்ட்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது… “டாஞ்சூர் டிஸ்ட்ரிக்ட் அண்ட் செசன்ஸ் கோர்ட்” என்று பெயர் மாற்றப்பட்டது.

தற்போது, 2020 முதல், திருச்சி ரோட்டில் ஒரு புதிய நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த இடமானது ஒரு காலத்தில் “மைனர் ஜெயில்”க்கு சொந்தமாக இருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் / எழுத்தாக்கம்: S.P.அந்தோணிசாமி, சேர்மன், பரிசுத்தம் பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்.

You might also like