எட்டு தலைமுறைகளாக நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பம்!

தமிழ் சினிமாவின் ‘கிளாசிக்’ வரிசையில் இடம்பெறும் இசை, நாட்டியமயமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பலரையும் கிறங்க வைத்த நாதஸ்வரத்தை வாசித்தவர்கள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களான சேதுராமனும், பொன்னுசாமியும்.

நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான பெயர் எம்.பி.என். சேதுராமன் – பொன்னுசாமி.

‘’தில்லானா மோகனாம்பாள்’’ சகோதர‍ர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.

எட்டுத் தலைமுறையாக நாதஸ்வரம் வாசிக்கிற குடும்பம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வாசிப்பது விசேஷம். இவர்களுடைய தாத்தா அந்தக் காலத்தில் நாதஸ்வரத்தில் மிகவும் பிரபலம்.

அதற்கடுத்து நடேசன், சண்முகம் என்று சகோதரர்கள் இருவருமே நாதஸ்வரத்தில் கெடு கெட்டி.

அதே மாதிரி அடுத்த தலைமுறையில் சேதுராமனும் பொன்னுசாமியும்.

இருவருமே ஏழாவது, ஐந்தாவது வகுப்புக்குப் பிறகு படிக்கப் போகவில்லை.

ராத்திரியே போய் மீனாட்சியம்மன் கோவிலில் படுத்துவிடுவார்கள். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து கொலு மேளம் வாசிப்பதில் தொடங்கி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யும் வரை வாசிப்பு.

கோவிலில் இருந்து சம்பளம், சாதம் வரும். மைசூரிலிருந்து காரைக்குடி திருவிழாக்கள் வரை சேதுராமன்-பொன்னுசாமி இரட்டை நாதஸ்வரத்திற்குத் தனி மவுசு.

அதிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜிக்கு முன்னால் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமா அமர்க்களமாக வாசிக்கும் நாதஸ்வர இசையைப் படத்தில் வாசித்தவர் இளைய சகோதர‍ரான பொன்னுசாமி தான். 

“எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோவில் வாசித்திருக்கிறோம். சிவாஜி வீட்டில் வாசித்திருக்கிறோம். கை நிறையப் பணத்தைக் கொடுத்தனுப்பினார் எம்.ஜி.ஆர்.

தமிழிசை மன்றத்தில் எங்களுடைய வாசிப்பைக் கேட்ட திரைப்பட இயக்குநரான ஏ.பி.நாகராஜனுக்கு எங்கள் வாசிப்பு பிடித்துப் போய்விட்டது.

ஜெமினி அதிபர் வாசனிடம் ஒருவழியாக ‘தில்லானா மோகனாம்பாள்’ கதைக்கான அனுமதியை வாங்கிவிட்டார் ஏ.பி.என்.

எங்களை வரவழைத்து விதவிதமாக வாசிக்கச் சொன்னார்கள் ஏ.பி.என்-னும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும். நிறையச் சங்கதிகளை வாசித்ததும், அவர்களுக்குச் சந்தோஷம்.

மறுநாள் சிவாஜியும், கவிஞர் கண்ணதாசனும் இருக்க – அவர்களுக்கு முன்னால் ஐந்தரை மணி நேரம் வாசிப்பு.

அவ்வளவு லயித்துப் பாராட்டினார்கள் இருவரும். கை தட்டிச் சிறு குழந்தையைப் போல ரசித்தார் சிவாஜி.

இந்துஸ்தானி இசையைக் கலந்து வாசித்தோம். கண்ணதாசனின் மடியில் தலை சாய்த்தபடி ‘பிரமாதம்’ என்று தலையாட்டிப் பாராட்டினார்” என்கிறார்கள் இருவரும்.

இவர்களைப் படத்தில் வாசிக்க வைக்க முடிவு எடுத்துவிட்டார் ஏ.பி.என்.

நாதஸ்வர இசைக்கான ரிக்கார்டிங், ஸ்டூடியோவில் நடக்கும். சிவாஜி சரியாக வந்து எங்களை உற்றுக் கவனித்தபடியே இருப்பார்.

வாசிக்கும்போது எங்களுடைய முகபாவங்கள், விரலசைவு, இசைக்கேற்றபடி காலை ஆட்டுகிற பாங்கு, எல்லாவற்றையும் கவனித்து மனதில் ஏற்றியிருப்பது, பிறகு படத்தைப் பார்த்தபோது தான் தெரிந்தது.

“முதல்வராக இருந்த அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு தினத்தந்தி வெள்ளிவிழா நடந்த அரங்கிற்குள் நுழைந்தார்.

அப்போது வேறு கீர்த்தனையை வாசித்துக் கொண்டிருந்தோம். அதை நிறுத்திவிட்டுச் சட்டென்று ‘நலந்தானா…நலந்தானா?’ பாடலை வாசித்ததும் கண்ணசைத்துத் தலையாட்டினார் அண்ணா. அரங்கில் பலத்த கைதட்டல்’’ – என்று நெகிழ்ந்து கூறியுள்ளனர் இருவரும்.

1977-ல் தமிழக அரசு பொன்னுசாமிக்கு கலைமாமணி விருதை வழங்கி கெளரவப்படுத்தியது. 1997-ல் கிருஷ்ணகான சபாவின் சங்கீதா சூடாமணி விருதையும் பெற்றுள்ளார்.

மகாத்மா காந்தி, காமராஜர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களின் முன்னிலையில் வாசித்துள்ளார்.

இந்த சகோதரர்கள் தங்களுக்கு அளித்த தங்கப் பதக்கத்தை யுத்த நிதிக்காக மனமுவந்து அளித்து தங்கள் மனமும் தங்கம் என்பதை நிருபித்துள்ளார்கள்.

“மதுரை சிந்தாமணி டாக்கீஸில் பார்வையாளர்களோடு அமர்ந்து நாங்கள் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்களை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி தூக்கிக் கொண்டாடினார்கள். அதுவே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்” என்று பொன்னுசாமி நெகிழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– தமிழ் மாறன்

You might also like