டான் க்விசோ – உலகை மாற்றிய கனவுக்காரன்!

ஸ்பெயின் நாட்டில் லா மாஞ்சா என்ற இடம். அங்கு ஒரு கனவுக்காரன் உலகை மாற்றப் போவதாகக் கூறிப் புறப்பட்டான்.

அவனிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. இருந்ததெல்லாம் ஒரு துருப்பிடித்த கவசம், நம்பிக்கையான ஒரு தோழன்.

கூடவே கற்பனை என்ற அற்புத சக்தியின் மீது அவன் கொண்டிருந்த அசையாத, உதிராத, நடுங்காத நம்பிக்கை.

மிகேயில் டி செர்வாண்டிசின் டான் க்விசோ வெறும் புத்தகமல்ல. அது ஒரு பயணம். மனதுக்குள் நாம் செல்லும் பயணம். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்காக கனவு காணவும், சண்டையிடவும் போகும் பயணம்.

இல்லாத ஓர் உலகத்தைக் காணச் செல்லும் பயணம் அது. இல்லாத ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அந்த உலகத்தைக் காணச்செல்லும் பயணம் அது.

அவன் (டான் க்விசோ) காற்றாலைகளை அரக்கர்களாக நினைத்துச் சாய்க்கிறான். தன் மனம் கவர்ந்த காதலியான டுல்சீனா டெல்பாசோவின் பெருமையைக் காக்கிறான்.

தன் பணியாளனும் தோழனுமான சாஞ்சோ பான்சாவிடம் எல்லையற்ற வரம்பற்ற தனது கனவுக் கோட்பாடுகளை அவன் பகிர்ந்து கொள்கிறான்.

முடியவே முடியாத கனவுகள்தான் விரட்டிப் பிடித்து வெற்றிக்கொள்ளவும், துரத்திப் பிடித்து நிஜமாக்கவும் சரியான கனவுகள் என்று டான் க்விசோ நமக்கு நினைவூட்டுகிறான்.

மிக பிராக்டிகலாகவும், சைனிகலாகவும், தரைதட்டியும் கிடக்கும் உலகம் இந்த உலகம். இந்த உலகத்தில் டான் க்விசோ நமக்கு உள்ளிருக்கும் டான் க்விசோவை ஆரத்தழுவி அள்ளி அரவணைத்துக் கொள்ளச் சொல்கிறான்.

மற்றவர்கள் காற்றாலைகளாகப் பார்ப்பதை அரக்கர்களாகப் பார்க்கவும், யாவுமே இயலும் என்ற மந்திரத்தை நம்பவும் அவன் வலியுறுத்துகிறான்.

ஆம். கனவு காண்பவர்கள், காதலர்கள், முட்டாள்கள் அனைவரும் இந்த உலகத்தை வேறு விதமாகத்தான் பார்ப்பார்கள்.

கனவின் காதலர்களைக் கொண்டாடுவோம்.

****
(கொசுறு தகவல்கள்)

டான் க்விசோ வைத்திருந்த குதிரையின் பெயர் ரோசினாண்டே.

சே குவேரா அவரது மோட்டார் சைக்கிள் டயரிஸ் சுற்றுப்பயணத்தில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பெயர் ரோசினாண்டே.

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களும், பெண்களும் சரிநிகராக போட்டியிடக்கூடிய ஒரு விளையாட்டு, ஈக்வெஸ்டேரியன் என்ற குதிரையேற்றப்போட்டி. அந்தப் போட்டியில் பங்கேற்க வரும் ஏதாவது ஒரு குதிரைக்கு ரோசினாண்டே என்ற பெயர் இருக்கும்.

அலெக்சாண்டரின் புகழ்பெற்ற குதிரையின் பெயர் பெசிக்பேலஸ். அந்த குதிரையை விட டான் க்விசோ காவியத்தில் வரும் குதிரையான ரோசினாண்டே மிகவும் புகழ்பெற்றது.

கியூபப் புரட்சி வெற்றி பெற்றதும் டான் க்விசோ நாவலை ஸ்பானிய மொழியில் மலிவுப் பதிப்பாக அச்சிட்டு கியூப மக்களுக்கு கொடுக்க நினைத்திருந்தார்கள் ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய இலக்கியம் செர்வாண்டிஸ் எழுதிய ‘டான் க்விசோ’.

முடிந்தால் படித்துப் பாருங்கள் நண்பர்களே.
 
– மோகன ரூபன்

You might also like