திசையெங்கும் ஒலிக்கும் சுசீலாவின் ‘தேன் குரல்’!

கான சரஸ்வதி சுசீலா அவர்கள் தேன் குரலில் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்…’ உட்பட அவர் பாடிய அத்தனைப் பாடல்களுமே நமக்கு அமுத கானங்கள்தான்.
 
“சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்… எனக்கும் அந்தக் குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்…” இது ‘யூத்’ படத்தில் ‘சர்க்கரை நிலவே…’ பாடலின் இடையில் வரும் வரிகள்.
 
சுசீலா அம்மாவின் குரலுக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா?
 
அவரது பாடல் தாயின் மடியில் படுத்து தாலாட்டு கேட்பது போல நம்மை தூங்க செய்திருக்கிறது.
 
சோகம், மோகம், ஊக்கமூட்டுதல், பக்தி, பரவசம் என எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அவரது குரல் எல்லா பாடல்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
 
எந்த ஒரு குறிப்பிட்ட உணர்வையும் அவரது குரல் மூலம் கடத்தும் பண்பு அவருக்கு உண்டு.
 
கதை, கதையின் கேரக்டர்கள், கதையில் விளையும் சூழல்கள், அந்தச் சூழலை உணர்த்துகிற பாடல்கள், பாடல்களுக்குள்ளே இருக்கிற வரிகள்…
 
அந்த வரிகளுக்குள் இருக்கிற அர்த்தங்கள், அந்த அர்த்தங்கள் சொல்லும் காதல், துரோக, சோக, குதூகல, இயலாமை, வெறுத்தல் முதலான விஷயங்கள் என அனைத்தையும் உள்வாங்கி, குரல் வழியே வெளிப்படுத்தும் செப்படி வித்தைக்காரர் சுசீலா அம்மா.
 
வாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான உங்கள் தேன் குரலை கேட்டு உருகியவர்கள் பலர்.
 
குழந்தைகள் எனக்கே எனக்கு என்று அடுத்த குழந்தையிடம் பொம்மைகளை அல்லது தின்பண்டத்தை காட்டிக் காட்டி மறைத்துக் கொள்வதுபோல் மானசீகமாக தமக்காகத்தான் குறிப்பிட்ட பாடல்களைப் பாடி இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் இதயங்கள் கணக்கற்றவை.
 
கனவுகளைப் பாடினார். காதலில் நெக்குருகச் செய்தார். கலைந்து போன காதலில் தொலைந்து போனவர்களை எண்ணி கதற வைத்தார்.
 
என்னதான் பாடவில்லை சுசீலா அம்மா:
 
நட்பு, துரோகம், அன்பு வற்றாமை, பிரிவின் ஆற்றாமை, ஆடல், ஊடல், கூடல், தேடல் எல்லா ரசங்களையும் பிழிந்து நம் உள்ளக் கோப்பைகளில் நிரப்பிக் கொண்டே இருந்தார்.
 
ஒரு செல்லச் சிணுங்கல், கொஞ்சல் பாவங்களை குரலில் கொணர்ந்து நெஞ்சத்தை கிள்ளிக் கொள்ளும் குரல்.
 
விசும்பல், கேவல், குமுறலை எல்லாம் சேர்த்து பின்னிக் கொடுத்து,உயிர் காற்றின் ஒலியை புறக்காற்றில் கலக்கும் வேதியல் அறிந்திருந்த பாடகி.
 
சுசீலா அம்மாவின் தேன் குரல் எல்லா திசைகளிலும்!
 
குழைப்பவருக்கேற்ப வண்ணங்கள் விளைவது போல், ராகங்களை அவர் இழைப்பதற்கேற்ப ஒரு தனி சுகம் கிடைப்பதை இன்னும் காதுகளை அவரது பாடல்கள் வசம் ஒப்புவித்து உட்கார்ந்திருப்பவர்கள் சொல்வார்கள்.
 
இரவு நேரங்களை அவருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டு, ஒரு சிற்றூரின் கயிற்றுக் கட்டிலில் அல்லது குறுநகரத்தின் மொட்டை மாடியின் துணி விரிப்பில்
 
அல்லது மாநகரத்தின் தலையணை விரிப்பில் உச் கொட்டிக் கொண்டே கிறங்கி கிடப்பவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் பாடலில் ஆனந்தம் கண்டு கொண்டிருப்பார்கள்.
 
பத்மினிக்கு ஏற்ற குரலில், சாவித்திரிக்குத் தகுந்தது போல ஒரு குரலில், கே.ஆர்.விஜயாவின் ஸ்டைலில், விஜயகுமாரிக்கு, சரோஜாதேவிக்கு, ஜெயலலிதாவுக்கு, சுஜாதாவுக்கு, ஸ்ரீப்ரியாவுக்கு என ஒவ்வொரு தலைமுறையின் நடிகையருக்கும் தன் குரலால் அழகு செய்தவர் கானக்குயில் பி.சுசீலா.
 
’சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலும் முந்தைய ஹம்மிங்கான ‘சம்சம்சம்சந்தம் சம்சம்சம்சந்தம் லல்லல்லல்லா…’ என்றும் நடுவிலே ‘டட்ட்டடா டட்டட்ட்டா…’ என்றும் ‘ரராரராராராராரீ’ என்று பாடினாரா விளையாடினாரா என்று தெரியாமல், கட்டுப்பாடின்றி குதூகலப்படுத்திவிடுவார்.
 
‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ’ என்ற பாடலைக் கேட்டு, குரலில் மயங்கி, அந்த நிலவே சுசீலா அம்மா பாடுகிற ரிக்கார்டிங் அறைக்குள் வந்து கைத்தட்டிவிட்டுச் சென்றிருக்கும்.
 
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா’ பாடலில், ஹம்மிங்கில் நம்மைக் கரைத்துவிடுவார். பறக்கவிடுவார். மிதக்கச் செய்வார். நம்மையே மறக்கச் செய்வார்.
 
‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடலில் விக்கலும் நக்கலுமாக இணைத்துப் பாடியிருப்பார்.
 
காவேரி ஓரம் கதை சொல்லும் நேரம்:
 
‘இங்கு நீயொரு பாதி நானொரு பாதி/ இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி / காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்/ காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல’ என்று ‘உன்னைக் காணாத நெஞ்சும் நெஞ்சல்ல’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு அந்த நாயகியின் துக்கத்தை குரல் வழியே உணர்ந்து அழுத ரசிகர்களெல்லாம் உண்டு.
 
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா/ கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா என்று பாடிவிட்டு, பாடல் முடிந்ததும் ஹம்மிங்கில் நம் தமிழகத்தின் அண்ணன்களையும் தங்கைகளையும் அழவைத்துவிடுவார்.
 
’ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு’ என்ற பாடலில் நாமே கண் செருகி, காது கூர்மையாக்கி மயங்கிக்கிடப்போம்
 
சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா/ ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா/ சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா/ ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா/
 
– என்ற குரலில் நம் அடிபட்ட மனதுக்கு ஒத்தடத்தை குரலால் கொடுத்திருக்கும் மருத்துவச்சி சுசீலா அம்மா.
 
‘உயர்ந்த மனிதன்’ படத்தில் ‘பால் போலவே’ பாடலுக்காக பின்னணிப் பாடகருக்கான முதல் தேசிய விருதை பெற்றவர். அதன் பிறகு 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
 
நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலின். அந்த ‘ஹம்மிங்’ சொல்லியே நம் மனதைக் கனக்கச் செய்துவிடுவார்.
 
அப்படியொரு மாயக்குரலுக்குச் சொந்தக்காரர் அவர்!
 
இப்படிச் சொல்லிக் கொண்டே இருப்பதற்கு சுசீலாவின் பாடல்கள் பல்லாயிரம் இருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அத்தியாயமாக எழுதவேண்டும்.
 
காலங்கள் நவீனமானாலும் இசைவிரும்புவோர் காதுகளில் சுசீலாவின் பாடல்கள் இன்னும் இளமை குன்றாது ஒலிக்கிறது.
 

#பத்மினி #சாவித்திரி #கேஆர்விஜயா #பிசுசீலா #விஜயகுமாரி #சரோஜாதேவி #ஜெயலலிதா #சுஜாதா #ஸ்ரீப்ரியா #badmini #savithri #krvijaya #psusheela #vijaykumari #sarojadevi #jayalalitha #sujatha #sripriya #singersusheela #psuseela

 
You might also like